திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் பின்அட்டை - திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்

1

 

  உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக, வழி தவற விழையார்க்கு ஊன்றுகோலாக, முயற்சியுடையார்க்குத் தூண்டுகோலாக, இலக்கியச் சுவையுடன் கூடிய இனிய நூலாக விளங்குகிறது.

  மக்கள் நூலாகத் திருக்குறள் விளங்குவதால்தான் காலந்தோறும் திருக்குறளுக்கு உரைநூல்களும் விளக்க நூல்களும் தோன்றுகின்றன. இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் தமிழ்ப்போராளி குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார். திருக்குறளைப் பகுதி, பகுதியாகப் பகுத்துத் தந்தால் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கருதினார். எனவே, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதுபோன்று திருக்குறளை, அரசியல், இல்லறம் முதலான பல்வேறு பகுப்பு அடிப்படையில் நூல்களை எழுதி வெளியிட்டார். பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில், திருக்குறள் விளக்கக் கதைகள் என்பன போன்று பகுதி, பகுதியாக விளக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கப் படைப்பாளியாகப் பேராசிரியர் வெ.அரங்கராசன் திகழ்கிறார்.

  ஏழு சீர் திருக்குறளுக்கு ஆறு சொல்லில் உரை தரும் இவரின் ‘திருக்குறள்அறுசொல்உரை’ இவரின் உரை நயத்திற்கும் எழுத்து வன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது. அதன்பின்னரும் பல்வேறு தலைப்புகளில் திருக்குறளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் நூல்களைப் படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த அடிப்படையில் வெளியான குறள்பொருள் நகைச்சுவை’, குறட்சுவையும் நகைச்சுவையும் என்னும் இவரது இரு நூல்களும் இவரின் திருக்குறள் புலமையையும் நகைச்சுவைத் திறனையும் எடுத்துக் காட்டுவனவாகும்.

  இப்பொழுது திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் என்று நமக்கு இலக்கிய விருந்து அளித்துள்ளார். ‘திருக்குறள் தேனீ’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவராகக் குறள்மலர்களில் உள்ள தேனை எடுத்துப் பக்குவமாக நமக்கு அளிக்கிறார். அதே நேரம், பிறரிடமிருந்து வேறுபட்டு, நகைச்சுவையுடன் இணைத்துக் குறட்சுவையை நமக்கு ஊட்டுகிறார். நகைச்சுவைத் தேனில் அறிவுரை மருந்தைக் குழைத்துத் தருவதால் இவரது நூலினை எடுத்தவர்கள் படித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார்கள்.

  ‘திருக்குறள் தேனீ’, ‘குறளாய்வுக் குரிசில்’, ‘திருக்குறள் பரப்புநர்’, ‘நகைச்சுவை நாயகர் என இவருக்கு வழங்கப் பெற்ற விருதுகளே திருக்குறளில் இவருக்குள்ள ஈடுபாட்டையும் நகைச்சுவைத்திறனையும் எளிதில் விளக்கும். ‘உலகத்திருக்குறள் உயராய்வு மையம்’ முதலான திருக்குறள் அமைப்புகளில் பொறுப்பாளராக இருந்து திருக்குறள் தொண்டும் ஆற்றி வருகிறார். பொழிவுகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல வழிகளிலும் திருக்குறளைப் பரப்பி வருகிறார்.

  நகைச்சுவையை விரும்பாதோர் நானிலத்தில் உள்ளரோ? இலரே! எனவே, நகைச்சுவையுடன் அளிக்கும் இவரின் திருக்குறள் படைப்புகள் படிப்போரின் விருப்பங்களாக மாறி விடுகின்றன. அயற்சொல் கலவாத நல்ல தமிழ்நடை, கவிதைத் தொடர் இழையோடும் சுவையான நடை, உள்ளத்தை ஈர்க்கும் சொல்லாட்சியுடன் கூடிய உயரிய நடை என இவரது படைப்புகள் நடைச்சிறப்புடன் திகழ்கின்றன. இவ்வகையில் இவரின் படைப்பான ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ என்பது மற்றுமோர் இலக்கிய விருந்தாகும்.

  இந்நூலில் நான்கு திருக்குறளை எடுத்துக்கொண்டு பல்சுவை நோக்கில் விளக்குகிறார். சுவைக்கவும் சிந்திக்கவும் இவர் தரும் தலைப்புகளும் திருக்குறள்களும் வருமாறு:

  1. முதலில் வீடு, அடுத்தது நாடு

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நலலாற்றின் நின்ற துணை.

2.இன்பச் சொல் சொல்! துன்பச்சொல்லைக் கொல்!

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந்தற்று

  1. வெல்லும்படிச் சொல்லைச் சொல்லும் வல்லமை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம

யாநலத்து உள்ளதூம் நன்று.

  1. நல்வழிப் பொருளே நன்மைகள் நல்கும்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

தீ(து) இன்றி வந்த பொருள்.

  ஒவ்வொரு தலைப்பிலும் தொடக்கத்தில் திருக்குறள் பற்றிய ஆன்றோர் உரை, இயல்பான உரை, விரிவான உரை, பிறரின் மாறுபட்ட உரைவிளக்கங்கள், விளக்கவுரை, இவருடைய கவிதை, நகைச்சுவைக் கதை, நகைச்சுவைத்துணுக்குகள், திரைப்பாடல் எனப் பலவகையிலும் திருக்குறள் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறார்.

  திருக்குறளின் மையக்கருத்தை விளக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறார். சான்றாக, ‘இயல்புடைய மூவர் யார்?’ என்பதற்கு 61 அறிஞர்களின் உரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இவற்றுள் சிலரின் கருத்துக்கேற்ப மூவர் என்பது பெற்றோர், மனைவி மக்களைக் குறிக்கும் என்கிறார். அதற்கு விளக்கமாக, “இயல்பாக – இயற்கையாக வந்து அமையும் உறவினர்களாகிய பெற்றுவளர்த்து ஆளாக்கிய பெற்றோர், பேணிக்காக்க வந்த மனைவி, பேறுகளுள் எல்லாம் பெரும்பேறாய் வந்தமைந்த பிள்ளைகள் ஆகிய மூவகையினர்” எனச் சிறப்பாக நமக்குத் தெரிவிக்கிறார். திருமணமாகாதவர்க்கு மனைவி, மக்கள் பொருந்தாது மணமாகியும் மகப்பேறு வாய்க்காதவர்க்கு மக்கள் என்பது பொருந்தாது எனவேதான் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவர், தொண்டர், அறிவர் என்பார். எனினும் தம் கருத்தை அழகுற விளக்கியுள்ளார். “மனைவி என்பவள் குருதிவழி உறவினளாக இருப்பினும் இல்லாவிட்டாலும் இல்லாளாக வந்த பின்னர், அக்குடும்பத்தின் குருதி ஓட்டத்தில் கலந்து விடுகிறாள். அதனால் இல்லத்தரசியும் இயல்புடைய உறவள் எனும் நிலைக்கு மாறிவிடுகிறாள். தாய், தநதைக்கு எத்துணை உரிமையும் கடமையும் முதன்மைப்பாடும் உண்டோ அத்துணையும் அவளுக்கும் அமைந்து விடுகிறது. அதனால் செயற்கை உறவளாக இருந்திருந்தாலும் குடும்பத்துக்குள் வந்தபின் இயற்கை உறவளாக மாறிவிடுகின்றாள்”. என இவர் தரும் விளக்கம் பெண்களின் உயர்வை உணர்த்துவதாக உள்ளது. மாறுபடுவோர் ஏற்பதற்காகப் பிறர் விளக்கமும் அளித்துள்ள பாங்கும் பாராட்டிற்குரியது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

ஆசிரியர், அகரமுதல மின்னிதழ்,

www.akaramuthala.in

Thiru. Tiruuvalluvan, ஒளிப்படம்-இலக்குவனார் திருவள்ளுவன்