(மார்கழி 6, 2045 /  திசம்பர் 21,2014 தொடர்ச்சி)

arangarasan pic

thiruvalluvamaalaiyin_melaanmai

10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்      

     திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்.,

10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]

     [உருவம்இல்லாததெய்வஒலி]

  •  சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர்

திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது.

  • நுட்பங்கள்.

     திருக்குறள் உலகுதழீஇய நுட்பச்சிந்தனைகள், உயர்நிலைக்கொள்கைகள், உயிர்மைக்கோட்பாடுகள், என்றும் எவருக்கும் பொருந்தும் அறநிறை கொள்கைகள், பலதுறைசார்ந்த கருத்தியல்கள், மனிதனைத் தெய்வமாக உயர்த்தும் அனைத்து அடிப்படையான நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள், எண்ணற்ற அருமை, பெருமை, வலிவு, பொலிவுஅழகு, விரிவு, ஆழ்மை, ஆளுமை போன்ற அனைத்தையும் தன்னகத்தேகொண்டு, அது தனக்கு உவமை இல்லாது [0007] உயர்ந்துநிற்கின்றது.

     இவற்றைப் படித்தும், கற்றும், ஓதியும், தோய்ந்தும், ஆய்ந்தும் நோக்கியும், உரைகள் ஆக்கியும் கண்டவர்கள் பற்பலர். அவர்களுள் சிலர் திருக்குறளை ஒருவர் செதுக்கியிருக்க முடியாது என்பர். வேறு சிலர், பலர் உருவாக்கிய பாடல்களின் தொகுப்பு என்பர். வேறு சிலர் மனிதனால் ஆக்கியிருக்க முடியாது; தெய்வம்தான் இதைச் செய்திருக்க முடியும் என்பர். இயல்பான மனிதனால் செய்தற்கு இயலாத ஒன்றை மாமனிதர் திருவள்ளுவர் செய்திருக்கிறார் என்னும் நம்பிக்கையால்தான், திருவள்ளுவரைத் தெய்வம் என்றே நம்பினர். அதனால்தான் தெய்வத்திருவள்ளுவர் என அப்பாடல் பதிவுசெய்து பாராட்டுகிறது.

  தமிழ்விடுதூது நூலாசிரியரும் தெய்வமொழிப்பாவலர் எனவும், மாக்கவி பாரதியாரும் தெய்வவள்ளுவ எனவும் வழிமொழிந்து அக்கருத்திற்கு ஒளியூட்டிஉள்ளனர்.

அரும்பொருள் ஆய்ந்த திருவள்ளுவருக்கு அப்பாடல் வழங்கியிருக்கும் விருதுதான், தெய்வ என்னும் பொய்யில் அடைமொழி.

அது திருவள்ளுவர் மாபெரும் ஞாலப்பேராற்றலர், தெய்வச்சீராற்றலர் என்னும் நுட்பத்தைத் திட்பமுற நுவல்கிறது.

 

(தொடரும்)