(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி

திருநெல்வேலி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 2/7

 

இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு:

  பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார்.

  “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில் மொழி மாற்றங்கள்” என்னும் தலைப்பின் கீழ் மூவகை மொழி மாற்றங்களைச் சிறப்பாக விளக்குகிறார்; பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் பெறுதலையும் சுட்டிக்காட்டியுள்ளார்; பழஞ்சொற்களைப் போற்ற வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்பனவற்றை முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம் சிறப்பாக விளக்கியுள்ளார்.

  “சி.இலக்குவனாரின் சங்க இலக்கியப் பாடல்களின் உரைத்திறன்” மூலம் முனைவர் நா.உசாதேவி, மாமூலனார் பாடல்களுக்குப் பேராசிரியர் தரும் சிறப்பான உரைவளத்தை விளக்கியுள்ளார். 1945-47 ஆம் ஆண்டுகளில் பேரா.சி.இலக்குவனார் நடத்திய ‘சங்க இலக்கியம்’ இதழ்களில் வெளிவந்து, பின்னர் ‘சங்க இலக்கியச்  சொல்லோவியங்கள்’ என்னும் நூல் வடிவம் பெற்றவை மாமூலனார் பாடல்கள். உரை அமைப்பு முறை, சொல்லாராய்ச்சி, இலக்குவனாரின் வரலாற்று அறிவு, உவமைச்சிறப்பு, நாடகவிளக்க மாண்பு எனத் தனித்தனியே ஆராய்ந்து சிறப்பாகப் படைத்துள்ளார்.

  “செவ்விலக்கிய ஆய்வில் சி.இலக்குவனார்” கொண்டுள்ள நுண்மாண் நுழைபுலம் குறித்து முனைவர் யாழ் க.சந்திரா விளக்கியுள்ளார்.  பேராசிரியரின்  தொல்காப்பிய மொழிபெயர்ப்பு  – திறனாய்வு நூல் மூலமும் சங்க இலக்கியப் படைப்புகள் முதலான பிற மூலமும் இவற்றை அழகுபடத் தெரிவித்துள்ளார். பேரா.இலக்குவனாரின் ‘தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆராய்ச்சியுரையும்‘ நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆய்வேடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது; அவரது ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்க காலம்’, சமூகவியல்  நோக்கில் இக்களத்தில் எழுந்த முதனூல்; அவரது இந்நூலும் ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்களும்’ சங்க இலக்கிய ஆராய்ச்சியில் முன்னோடி நூல்கள்; சங்க இலக்கியக் கால வரையறை சிறப்பு மிக்கது; வேற்றுமை பற்றிய ஆராய்ச்சியும் கால்டுவெலின் கொள்ளத்தக்கக் கருத்துகளை ஏற்றும் தள்ளத்தக்கனவற்றை ஆய்ந்தும் தெரிவிக்கும் திறனாய்வு முறையும்  மிகச் சிறப்பானவை; அவரது ‘மாணவர் ஆற்றுப்படை’ சங்க இலக்கிய வகைப்பாட்டினது; அவரது குறள்வழிப் படைப்புகளும் ‘குறள்நெறி; இதழ்களும் அரிய குறள்நெறிப்பணிகளாகும்; என ஆராய்ந்து எழுதிப்  பேராசிரியர் சி.இலக்குவனாரின் செவ்வியல் புலமையை எடுத்துரைக்கிறார்.

  “பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச்சிறப்பு” தலைப்பில் முனைவர் கே.இரவிசங்கர் எடுத்துரைக்கிறார்; இன்றைய நிலையிலும் திருக்குறள் நிலைத்து நிற்பதற்குக் காரணம், அவரின் திருக்குறள் உரை எனப் பிற உரையாசிரியர்கள் கருத்துகளுடன் ஒப்பிட்டு நயம்பட எடுத்துரைக்கிறார். எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகச் சுருக்கமாகவும் அதே நேரம் தெளிவாகவும் உரை வழங்கியுள்ளார்;  நடைமுறை வாழ்க்கையைப் பொருத்திக் காண்பதில்  பிறருக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்; எண்ணும் எழுத்தும் என்பதை முதன்முறையாக அறிவியலாகவும் கலையியலாகவும் பேராசிரியர் விளக்கியுள்ளார்; எளிமையாகவும் ஆராய்ச்சிப் போக்குடனும் எழுதிக் காலம் கடந்தும் தம் உரையை நிலைக்கச் செய்துள்ளார்; என்றும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

  முனைவர் க.அ.கருணாநிதி, சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியங்களாக மாற்றப் பேராசிரியர் மேற்கொண்ட முயற்சிகள்;  தொல்காப்பியத்தை உலகம் அறியும் வகையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள அருமை; அந்நூலைத் தமிழாராய்ச்சி உலகிற்குக் கலங்கரை விளக்கமாகப் படைத்த புலமை; ஆரியத்தைத் தழுவித் திருக்குறளைத் திருவள்ளுவர்  படைத்தார் என்னும் பொய்யாபுரியார்களின் கருத்துகளுக்கு  நுண்மாண்நுழைபுல ஆய்வறிவுடன் மறுப்பு;   மொழியியல் நூல்கள் மூலம் தமிழின் செம்மொழித்தன்மையை அனைவரும் அறியச் செய்த வகைமை; சொல்லாலும் செயலாலும் யாரேனும் தமிழுக்குக்கேடு புரியும் பொழுது எதிர்க்கும் துணிவு ஆகியன குறித்தும் “பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழின் வெற்றி” என்பதன் மூலம் எடுத்தியம்புகிறார்.

  முனைவர் சா.நடராசவேலு, வடிவ வழி எதிர்மறைக்குப் பேராசிரியர் வழிகோலியுள்ளார் என்று ”சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழில்’ எதிர்மறைகள்” என்னும் கட்டுரை மூலம் இனிதே விளக்கியுள்ளார்; சொல்லின் அகத்தே இடம் பெறும்எதிர்மறைகள், சொல்லின் புறத்தே இடம் பெறும் எதிர்மறைகள், வடிவவழி எதிர்மறையின் வகைகள், எதிர்மறை உணர்த்தும் கிளவிகள், ஆகியன பற்றிய பேரா.இலக்குவனாரின் விளக்கங்களைத் தருகின்றார்;  பேராசிரியர் பழந்தமிழ் நூலில் கையாண்டுள்ள எதிர்மறைத்தொடர்களையும் எடுத்தாண்டு விளக்குகிறார்.

  பழந்தமிழின் தொன்மையும் மேன்மையும்  குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார், பழந்தமிழ் நூல் மூலம் பதிய வைத்துள்ளதை முனைவர் கு.நீதா முறையாக விளக்கியுள்ளார்; தமிழின் தொன்மையை உணர்த்தல், காலத்தை ஆறுநிலைகளில் பிரித்தல், தமிழின் மேன்மையை நிலைநாட்டல், திராவிட முதல்மொழி என்பது பழந்தமிழே என நிறுவல், சிந்துவெளிப் பழந்தமிழும் இன்று வழங்கும்  தமிழும் ஒன்றே என ஆய்ந்துரைத்தல், அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை மறுக்கும்  வையாபுரியின் கருத்தை மறுத்தல்,  அறிஞர் கால்டுவெல், அறிஞர் ஈராசு முதலான அறிஞர்களின் கருத்துகளை நடுநிலையோடு அணுகல் எனப் பேராசிரியரின் ஆய்வு முறைகளையும் அளித்துள்ளார்.

 “பேராசிரியர் சி.இலக்குவனாரின் உரையில் நடைநயம்”  குறித்து முனைவர் இர.கற்பகம் கவினுற விளக்கியுள்ளார். இதில், பண்பாட்டுச் செய்திகள் கூறல், நாடகமுறை வழக்கை விளக்குதல், அந்தாதி நடை,  கூட்டுறவு சொல்லாட்சி, திருக்குறளில் உகரச்சுட்டு வருதல்,  இலக்கணம், சொல் வருவித்தல், சொற்பொருள் வருவித்தல், சொற்பொருள் விரித்தல், சொற்களை முறைமாற்றி அமைத்துப் பொருள் கூறல் போன்றவற்றைக் கையாண்டுள்ள சிறப்பைக் கூறியுள்ளார்.

   “குறள்நெறி பரப்பிய  பேராசிரியர் சி.இலக்குவனார்” குறித்துப் பெருமைபட விளக்கியுள்ளார் முனைவர் வ.அரிகரன். திருக்குறள் தொடர்பான தம்முடைய ஆறுநூல்கள் மூலமும் குறள்நெறி இதழ்கள் மூலமும் அமைப்புகள் நிறுவனங்கள் மூலமும் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையைத் தருகிறார். மாணவநிலையில் குறள்பரப்பும் பணியைத் தொடங்கினார்; ஆசிரியராகவும் பேராசிரியராகவும் இருந்து மாணாக்கர்களிடையே குறள்நெறிப் பணியை விரிவாக்கினார்; பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளராக இருந்து பொதுமக்களிடையே குறள்நெறி விழிப்புணர்வை உண்டாக்கினார்; நூல்கள் வாயிலாகவும்  இதழ்கள் வாயிலாகவும் நிறுவனங்கள் வாயிலாகவும் குறள்நெறியை நிலைக்கச் செய்தார்; குறள்நெறிக்காவலராகத் திகழ்ந்தார் என்று பேரா.சி.இலக்குவனார் மேற்கொண்ட குறள்நெறிப் பரப்புரையை அழகுபட நமக்குத் தெரிவித்துள்ளார்.

   “சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் வழிப் புலனாகும் பேராசிரியர் இலக்குவனாரின் வரலாற்று அறிவை”  முனைவர் தி.முத்துலெட்சுமி திறம்பட விளக்கியுள்ளார். இதில் உரைத்திறன், மொழித்திறன்,  வரலாற்று அறிவு, ஆராய்ச்சித்திறன், தமிழ்ப்பற்று, பொதுமக்களுக்கு உரியதாகச் சங்க இலக்கியத்தை  முதன் முதலாக வழங்கிய சிறப்புடைமை, ஊரும் பேரும் பற்றி ஆராய்ந்து அளித்தல், தமிழர்க்கு உரிமைநாடாக இருந்த வேங்கடமலை இன்று நம்மிடையே இல்லை என்பதுபோன்று இக்காலத்தோடு ஒப்பிட்டு உரிமை உணர்வைத் தூண்டுதல்,   பழந்தமிழ் நாகரிகம், பண்பாடு, வாழ்வியல், சிறப்புற்ற நாடுகள், நாடாண்ட மன்னர்கள் எனப் பல்வேறு அறியப்படாத செய்திகளை வழங்குதல் முதலானவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வெளிப்படுத்தியுள்ளதை நமக்குக் காட்சிப்படுத்தியுள்ளார்.

  “தொல்காப்பிய ஆராய்ச்சியில் காதல் இயல்”  மூலம் பேராசிரியர் இலக்குவனார் உணர்ச்சி வழிச் செயல்பாடுகளையும் அவை அறிவுவழிச் செயல்பாடுகளாக மாறி விடுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்; கற்புநெறி போற்றும் காதல் வாழ்க்கையைக் கூறியுள்ளார்;  தொல்காப்பியரின் கூற்றை வழுவாத காதலாக, அறமுடைய காதலாக, கற்புடைய காதலாக விளக்கியுள்ளார்; இவை எக்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது என ஏற்றமுடன் முனைவர் செ.சிவகாமசுந்தரி செப்பியுள்ளார். மேலும், தொல்காப்பியம் இலக்கணமாக இலங்குவதுடன் மொழிநூலாகவும் இலக்கிய ஆராய்ச்சிக்கருவி நூலாகவும் விளங்குவதைப் பேரா.இலக்குவனார் நமக்கு எடுத்துரைப்பதை விளக்குகிறார்.

சி.இலக்குவனார் அகத்திணையியல் முப்பொருள் சிந்தனை”கள் குறித்துச் சீர்மையுடன் விளக்கியுள்ளார்  இள முனைவர் சு.இரம்யா. இதில், முதல், கரு, உரிப் பொருள்பற்றியும் இவற்றின் அடிப்படையில் நிலம், பொழுது குறித்தும் கடவுள் தன்மை சிறப்பு குறித்தும் நிலத்திற்குரிய கடவுள்கள் குறித்தும் தொல்காப்பியர் குறிப்பிடுவனவற்றைச் சிறப்பாக இலக்குவனார் விளக்கியுள்ளார் என்கிறார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum