(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனாரின்தமிழ்ப்பணிகள், கருத்தரங்கம், தொகுப்புரை, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_thamizhpanigal_thokuppurai_ilakkuvanar-thiruvalluvan

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி

திருநெல்வேலி

 

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 4/7

  தொல்காப்பியம் முழுமைக்கும்  தெளிவும் எளிமையும் வாய்ந்த விளக்க நடை மூலம் விழுமிய ஆராய்ச்சி உரை வழங்கியுள்ளார் இலக்குவனார்; பெயர்க்காரணம், முறைவைப்பு ஆகியவற்றை நடைநலத்துடனும் மதிநுட்பத்துடனும் விளக்குகிறார்; தொல்காப்பியர் கருத்து இக்காலத்திலும் தேவையாகிறது என்பதை நுட்பமான ஆராய்ச்சித்திறனுடன் உணர்த்துகிறார்; இவற்றை, “எண்வகை மெய்ப்பாடுகள்: இலக்குவனாரின் ஆராய்ச்சித் திறன்”  கட்டுரை மூலம் ஆய்வாளர் ப.சுதா அழகுபட விளக்கியுள்ளார்.

  தொல்காப்பியர் கருத்திற்குப் பொருந்தாத செய்திகள் மரபியலில் இடைச்செருகல்களாக அமைந்துள்ளன; இளமைப்பெயர்கள்  பொருள் மாற்றத்திற்கு ஆளாகி உள்ளன; ஆண்பாற்பெயர்கள், பெண்பாற்பெயர்கள், உயிரினப்பாகுபாடும் மாற்றமுற்றுள்ளன;  இவ்வாறு நமக்குச் சான்றுகளுடன் அறிவியல் நோக்கில் இலக்குவனார் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்; இவற்றை ஆய்வாளர் ச.இராசலெட்சுமி “சி.இலக்குவனார் பார்வையில் மரபியல்” மூலம் நமக்கு விளக்குகிறார்.

 இக்காலக் கல்வியையும் முற்காலக் கல்வியையும் ஒப்பிட்டுப் பழங்காலத்தை அறிந்து போற்றி, நிகழ்காலத்தைக் கண்டு, வருங்காலத்தைத் திட்டமிடும் நாடே சிறந்து விளங்கும்; சங்கக்காலத்து மக்கள் வானியல், கட்டடவியல், கனிமவியல், சிற்பம், உழவு, போர்ப்பயிற்சி, ஓவியம் போன்ற கல்வியினைப் பற்றிய அறிவயைும் பெற்றிருந்தனர்; கல்வியின் பெருமையை அறிந்து அதைமுறைப்படி வகுத்துத் திட்டமிட்டுக் கலவி கற்று அதன் பயனைத் துய்த்து வாழ்ந்த பழந்தமிழர் காலம் கல்வியின்  பொற்காலமாக அமைந்திருந்தது; இவ்வாறு இலக்குவனார்  ஆராய்ந்தளித்துள்ளதை ஆய்வாளர் சா. சாந்திஃச்டெல்லா, “இலக்கியம் கூறும் தமிழர் கல்வி” மூலம் நிரல்பட விளக்குகிறார்.

  இலக்குவனார் இலக்கணக்கூறுகளை மதிப்பீட்டு முறையிலும் எளிமையான முறையிலும்  ஆராய்ந்து ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ அளித்துள்ளார்; நுட்பமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்;  தொல்காப்பியர்தான் விளி வேற்றுமையைத் தனியாக ஆராய்ந்துள்ளார்; பிற அறிஞர்களின் கருத்துகளை மறுத்துரைக்குமபோது தக்க சான்றாதாரத்துடனும் தகுந்த விளக்கத்துடனும் விவரிக்கிறார்; பிற மொழி வேற்றுமை உருபுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்குகிறார்; இவரின் ஆராய்ச்சி உரை நயத்தால் தொல்காப்பியம் குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிர்கின்றது;  இவ்வாறு,  ஆய்வாளர் அ.சத்திபதி, “தொல்காப்பியம் சுட்டும் எண் வேற்றுமைகள் – இலக்குவனாரின் ஆராய்ச்சி உரைத்திறன்”  என ஆய்ந்து அளிக்கிறார்;

  ஆய்வாளர் ச.காந்தி என்ற  இரேவதி, இலக்குவனார் விளக்கும் “நற்றிணைப் பாடல்களில் புலப்பாட்டு நெறி” என்பதை விரித்துரைக்கிறார்; நற்றிணையில் காணும் பாடல்கள் ஒப்பீடு, பொற்பொருள் விளக்க உத்தி, வினா-விடை உத்தி, ஆராய்ச்சி உத்தி முதலான பல்வகை ஆய்வு உத்திகளைப் பயன்படுத்திப் பேராசிரியர்  ஆளுமை மேம்பாட்டுடன் சங்கப் பாடல்களை விளக்கியுள்ளார்; மோனை நடை, முரண் நடை,  ஆகியவற்றை விளக்கிச் சிறப்பான மொழிநடையைக் கையாண்டுள்ளார்; அழகான வருணனையை அளிக்கிறார் – என்கிறார்.

  முதுமுனைவர் ம.கா.அறிவுடைநம்பி,  இலக்குவனாரின் “திருக்குறள் உரைத்திறன்”பற்றிக் கூறுகிறார்; இதன் வழி, அதிகார விளக்கம், பொழிப்பு முறை, விளக்க முறை, எனப் பலவகையிலும் பேராசிரியர் இலக்குவனார் எக்காலத்திற்கும் பொருந்தும் உரை நல்கிய திறனை விரிவாக விளக்குகிறார்; திருக்குறள் விளக்க அமைப்பு முறை, பதிப்புமுறை, சொற்பொருள் விளக்கம் தரும் முறை ஆகியவற்றில் பேரா.இலக்குவனார் புலமை வெளிப்படுவதைப் போற்றுகிறார்; அரசர் என வரும் இடங்களில் எல்லாம் தலைவர்களுக்கும் பொருந்தும் வண்ணம் உரை விளக்கம் அளித்துள்ள சால்பினையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார். சி.இலக்குவனார் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுத் திருக்குறள் கருத்துகளைப் பொதுமக்களிடையே பரப்புவதில் அளவிலா இன்பம் கண்டு தம் வாழ்நாளைக் கழித்தவர் என்பார் கூற்றைக் கட்டுரையாளர் வழிமொழிகிறார்.

  “பேராசிரியர் இலக்குவனாரின் பழந்தமிழ்ப்பற்று” குறித்து  ஆய்வாளர் பா.மனோன்மணி உரைக்கிறார். இலக்குவனார், தமிழே இயற்கை மொழி என்பதை இலக்கியப் புலமையுடனும் காலமுறை அறிவுடனும் ஆராய்ந்துள்ளார்; பழந்தமிழ் மொழியின் இயல்பு, அமைப்பு, இலக்கியப் பழமை, தமிழ்மொழியின் மலர்ச்சி யென யாவற்றையும் ஒப்பியல் நோக்கில் தந்துள்ளார்; எழுத்துமொழி குறித்தும் அதன் தேவை குறித்தும்  எளிய இனிய நடையில் திறம்பட விளக்கியுள்ளார்; தமிழே இயற்கை மொழி என மெய்ப்பிக்கிறார்; தமிழ்மொழி வரலாற்றுக் காலத்தைப் புதிய முறையில் பகுத்துள்ளார்; இந்திய மொழிகளின் இலக்கியத்தோற்றத்தை முதன் முறையாக நமக்கு அளித்துத் தமிழின் தொன்மைச் சிறப்பை உணர வைக்கிறார் என நமக்குக் கட்டுரையாளர் விவரித்துள்ளார்.

  “இலக்குவனாரின் கோட்பாடு” என்பதன் மூலம், முனைவர் பி.பகவதி பேராசிரியரின் அருந்தமிழ்க் கோட்பாடுகளைக் கவினுற விளக்குகிறார்; தமிழரின் தொன்மை, கடவுள் கொள்கை, திருமண முறை முதலானவை குறித்த ஆரிய மாயையை அகற்றுகிறார் இலக்குவனார் என்கிறார்; வேற்றுமொழிகளின் வரவால் அரியணை இழந்து உருக்குலைந்த தமிழ் அன்னையை மீண்டும் அரியணையில் அமர்த்தி அனைவரும் வணங்கிப் போற்ற வேண்டும் என்பது இலக்குவனாரின் வேண்டுகோளை நாம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறார்; ஆரிய வருகைக்கு முன்பே தனக்கென உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டு விளங்கியது தமிழகம் என்ற அவரது கோட்பாட்டை விளக்கியுள்ளார்.

  “தமிழர்நலம் காத்த போராளி செந்தமிழ்க்காவலர்”, மாணவப் பருவத்திலிருந்தே சாதி, சமய, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தமிழுரிமைக்காகவும் போராட்ட வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்; இளமையிலேயே தனித்தமிழ் நாட்டமும் பகுத்தறிவுக் கோட்பாடும் சீர்திருத்தக் கருத்துகளும் குடி கொண்டு வாழ்ந்தவர்; தொல்காப்பியத்தை வடமொழிச் சார்புடையதாகப் பிறர் கூறி வந்த சூழலில் தொல்காப்பிய நெறி தமிழ்  நெறியே என்று மெய்ப்பித்து அரிமாவெனத் திகழ்ந்தவர்; பொதுத்தொண்டும் போராட்டக் குணமும் ஒருங்கே கொண்டு பகுத்தறிவுக் கோட்பாட்டை முழங்கியவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்; பள்ளி கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்க வித்திட்டவர்; பதவிகளைப் பறித்தபோதும் நெருக்கடிகளைத் தந்தபோதும் கொள்கை பிடிப்போடு தமிழ் நலத்திற்காகச் சிறைவாசம் மேற்கொண்டவர் என ஆய்வாளர் வ.இளங்கோவன்  கட்டுரையை வடித்துத் தந்துள்ளார்.

 ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ நூலின் மூலம் “இலக்குவனார் காட்டும் குறள்நெறி”யை முனைவர் ச.கண்ணபிரான் அங்குமிங்குமான ஆய்வுமுறையில் நமக்கு அளித்துள்ளார்; இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், குறிப்பறிதல், பிரிவாற்றாமை, பசப்புறுபருவரல் ஆகிய ஐந்து அதிகார விளக்கங்களை எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு கட்டுரையை அமைத்துள்ளார். இலக்குவனாரின் மொழிநடை, பொருட்செறிவு, புலப்பாட்டு நெறி, ஆகிய அனைத்தும் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள தன்மையை விளக்கியுள்ளார்.

  “இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சியில் தமிழ்மரபு” குறித்து முனைவர் ச.இரபேல் சிறப்பாக விளக்கியுள்ளார்; தமிழ்மரபு தழுவியும் அறிவியல் முறையில் கால ஆய்வு செய்தும் முன்னோடி விளக்கம் அளித்துள்ளார்; தொல்காப்பியத்திற்கான முந்தைய உரைகளில் தமிழ்நெறிக்கு ஒவ்வாத வடநூல் கருத்துகள் செயற்கையாக வலிந்து புகுத்தப்பட்டுள்ளன எனத் தக்க சான்றுகளுடன் இடஞ்சுட்டிப் புலப்படுத்துகிறார்; உரையாசிரியர்களின் வடமொழித் திணிப்பையும் வேதம்சார் உரைகளை மறுத்தும் ஒல்காப்புகழ்மிகு விளக்கம் தந்துள்ளார் என்கிறார் கட்டுரையாளர். ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும்  ஆய்வுநூல் பழையவுரைகளைக் குற்றம் காணும் நோக்கில் எழுதப்பட்டதன்று; உரைகளில் தமிழ் மரபு புறக்கணிக்கப்படுகிறது என்று சுட்டி உணர்த்துவதற்காகவும் தொல்காப்பியத் தொடுகடற்பரப்பை எளிதில் நீந்திக் கடப்பதற்கு உதவ வேண்டியும் எழுதப்பட்டது; தொல்காப்பியம் கற்போருக்குச் செம்மையான வழிகாட்டியாக இலங்குகிறது என்றும் கட்டுரையாளர் தெரிவித்துள்ளார்.

 

இலக்குவனார்திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum