தலைப்பு-திருவள்ளுவர், திருக்குறள், போற்றுங்கள்,திரு ; thalaippu_thiruvalluvar_thirukkural_poatrungal_thiru

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும்

திருக்குறளையும் போற்றுங்கள்!

  உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.

 இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்   திருக்குறளைக் கற்க வேண்டும் என்றார். ஆனால், நாம் குன்றிலேற்ற வேண்டிய நூலான திருக்குறள் நூலைக் குடத்தினுள் இட்டு வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையருக்குத் திருக்குறள்பற்றியோ திருவள்ளுவர்பற்றியோ தெரியவில்லை.

   திருக்குறள்பற்றி அறியாதவராக நம்நாட்டவர் உள்ளனர் என்பதற்கு ஒரு சான்று வருமாறு: என்னுடைய பெயர்   திருவள்ளுவன் எனத் தெரிவிக்கும் பொழுது சிலர் என்னிடம் கேட்டுள்ள கேள்விகள் வருமாறு

  1. உங்கள் பெயர் புதியதாக உள்ளதே!
  2. .நீங்கள் இசுலாமியரா? அதான் இந்தப்பெயர் வைத்துள்ளார்களா?
  3. உங்கள் பெயரைப்பார்த்தால் கிறித்துவர் போல் தெரிகிறதே!
  4. நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தானா? பெயரைப்பார்த்தால் தமிழ்மாதிரி தெரியவில்லை. ஆனால், நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே!
  5. யாருக்கும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று இந்தப் பெயரை வைத்தார்களா?

  பொதுவாக, நான் சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும்பொழுது தவறாமல் திருக்குறள் தெரியுமா எனக்கேட்பேன். பெரும்பான்மையருக்குப் புரியாது. “எப்படி இருக்கும் என்று தெரியுமா” எனக் கேட்பேன். “இனிக்கும், காரமாக இருக்கும், வட்டமாக இருக்கும்” என உணவுப்பொருள்போல் எண்ணி எதையாவது  கூறுவார்கள்.

 இதுதான் தமிழ்நாட்டின் நிலை.

  தமிழ்நாட்டிலேயே திருவள்ளுவரையும் திருக்குறளையும் அறியாத தலைமுறைகள் உருவாகி வருவதைத் தடுக்க, அனைத்துவகுப்பு நிலைகளிலும் திருக்குறள் பாடமாக வைக்கப்பெறவேண்டும். திருக்குறளைக் கல்வித்திட்டத்தில் இருந்து அகற்ற அவ்வப்பொழுது  சிலர் முயன்று வருகிறார்கள. சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 திருக்குறளும் கொண்ட முழுமையான அதிகார முறையில் பாடமாக வைப்பதை நீக்கினார்கள். 5 திருக்குறள் மட்டும் பாடமாக வைத்தனர். பின்னர்த் தமிழ்க்காப்புக்கழகம் இதனை எதிர்த்து முழு அதிகாரங்களாகத் திருக்குறள் பாடமாக வைக்கப்பெற வேண்டும் என்று வேண்டியதும் அரசு ஏற்றது. (நேரில் முறையிட்டதும் விரைந்து நடவடிக்கை எடுத்த அப்போதைய அமைச்சர் வைகைச்செல்வனும் பள்ளிக்கல்வித்துறைச் செயலரும் பாராட்டிற்குரியவர்கள்.)

 “பட்ட வகுப்புகளில் ஆங்கில இலக்கியத்தில் சேக்சுபியர் படைப்பு முழுமையாகப் பாடமாக வைக்கப்படுவதுபோல், திருக்குறள் முழுமையாகப் பாடமாக வைக்கப்பெற வேண்டும் என்று தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வலியுறுத்தி  வந்தார். அதற்கு வழி வகுக்கும் வகையில் நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இராசரத்தினம் என்பார் தொடுத்த வழக்கில்,  வரும் கல்வியாண்டு முதல்எல்லா வகுப்புகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்படவேண்டும் என்று சொல்லியுள்ளளார். இந்த ஆண்டில் அரசு இவ்வாறு நடைமுறைப்படுத்த வில்லை. இனியும் நடைமுறைப்படுத்துமா எனத் தெரியவில்லை.

  இப்பொழுது பத்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்திற்கு 10 திருக்குறள் என 3 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. அவற்றுள் ஐயைந்து மனப்பாடப்பகுதி. எனவே, பெரும்பான்மையான பள்ளிகளில் மனப்பாடப் பகுதிக்குமட்டும் ஆசரியர்கள் முதன்மை அளிக்கின்றனர். பிறவற்றிற்கான வினா-விடையை மட்டும் சொல்லித் தருகின்றனர். மேனிலை வகுப்புகளில் 4 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. இவ்வாறில்லாமல் திருக்குறள் பாடப்பகுதி முழுமையும் கற்றுத்தரவும் கற்றுத்தராத ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கவும் அரசு ஆவன செய்ய  வேண்டும்.

  தமிழ்மொழியைப் பாடமாக எடுக்காதவர்களுக்குத் திருக்குறள் என்றால் என்ன என்றே தெரியாது.

  இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில், தமிழே பாடமாக உள்ள வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளிலும்,  தமிழ்நாட்டில் பாடமாக உள்ள பிற மொழிகளிலும் திருக்குறள், திருவள்ளுவர்பற்றிய முழுமையான துணைப்பாட நூல்கள் வைக்கப் பெற வேண்டும்.  நூலைப் பார்த்து ஆனால், சிந்தித்து எழுதும் வகையில் தேர்வுத்தாள்கள் இருக்க வேண்டும்.

  மத்திய அரசும் தன்  பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ள கல்விக்கூடங்கள் அனைத்திலும் அனைத்து மொழிகளிலும் திருக்குறள்பற்றிய துணைப்பாட நிலையில் தேர்வுகள் நடத்த வேண்டும்.

  நம் நாட்டில் திருக்குறள்பற்றியோ தெய்வப்புலவர் திருவள்ளுவர்பற்றியோ அறியாதவர் யாருமில்லார் என்னும்  நிலையை உருவாக்க வேண்டும்.

  இந்திய அரசு, புத்தர் பிறந்தநாள், மகாவீரர் பிறந்தநாள், இயேசு பிறந்த நாள், குருநானக்கு பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள், காந்தி பிறந்த நாள் என்பனவற்றைக்  கொண்டாடுவதுடன் அரசு விடுமுறையும் விட்டுள்ளது. அதுபோல் இந்தியா முழுமையும், இந்தியத் தூதரகங்கள் உள்ள எல்லா நகர்களிலும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாட வேண்டும். நாம் தை முதல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் அன்று தமிழர்திருநாளாம் பொங்கல் வருவதால் மறுநாளான தை இரண்டைத் திருவள்ளுவர் நாளாகவும் கொணடாடி வருகிறோம். தை முதல் நாளை நாம் திருவள்ளுவர் நாளாகக்  கொண்டாடினால்  தமிழர் நாளின் சிறப்பு  மறைந்து விடும்.

  வைகாசித் திங்கள் பனைமீன்(அனுச நட்சத்திர) நாளில் திருவள்ளுவர் இயற்கை எய்தியதாக நம்பிக்கை உள்ளது. பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சியில் அந்தநாள் சிறப்பிக்கப்பட்ட முன் நிகழ்வும் உண்டு.

  எனவே, வைகாசிப் பனை நாளில் நாடு முழுமையும் திருவள்ளுவர் நாள்  கொண்டாட ஆவன செய்ய வேண்டும். இந்நாளில் திருக்குறள் பற்றிய இயலரங்குகள், இசையரங்குகள், நாட்டிய நாடக  அரங்குகள் நிகழ்த்த பொருளுதவி செய்ய வேண்டும். மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் சமயத்தலைவர் நாள்களைக் கொண்டாட உதவி வரும் மத்திய அரசு சமயம் சாராத உலகப்பெரும் புலவராம் திருவள்ளுவரைச் சிறப்பிக்க உதவுவதன் மூலம், பெருமை பெற வேண்டும். இதற்குத் தமிழக அரசும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் கொண்டாட வழிவகை  காண வேண்டும்.

  இந்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நாட்டிலுள்ள அனைத்துக் கல்விக்கூடங்களிலும் திருவள்ளுவர்  படங்கள் இடம் பெறச்செய்ய வேண்டும். முதன்முறை திருவள்ளுவர் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட  வேண்டும்.

  திருவள்ளுவர்-திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கட்டுக்கதைகள், திரிபுஉரைகள் இடம் பெறாவண்ணம் உண்மையான பெருமை மட்டும் இடம் பெறச்செய்ய வேண்டும்.

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

    பெற்றியார்ப் பேணிக் கொளல்(திருவள்ளுவர், திருக்குறள் 442).

என்பதுபோல்,நமக்குவந்துள்ள  துன்பத்தைப்போக்கவும் இனித் துன்பம் வராமல் காக்கவும் நமக்கு உதவுவது திருக்குறளே ஆகும். ஊழல் ஒழியவும் அறவழியிலான ஆட்சிகள் நடைபெறவும் மக்கள் மக்களாக நடத்தப்பெற்று உண்மையான மக்களாட்சி மலரவும் திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவரைப் போற்றி நாம் பெருமையுறுவோம்!

திருக்குறளைக் கற்று நாம் சிறப்புறுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 145, ஆடி 16 , 2047 / சூலை 31, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo