(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!
முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு!
இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்!
உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு!
கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்!
இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
அந்த மாநாட்டில் பங்கேற்றோர் அனைவரும் 10 டாலர் நுழைவுக் கட்டணம் செலுத்தி மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்கள். இரு நாள் மாநாடும் மாலை நேரத்தில் மட்டுமே. இரு நாளும் நுழைவுக் கட்டணம் தனித்தனியே செலுத்த வேண்டும்.
உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவாம். ஆனால், அதற்குரிய கட்டணம் செலுத்தி வாங்கிச் சாப்பிடலாம். சிறப்புவிருந்தினரின் சொற்பொழிவுக்குப் பிறகு கேள்வி- பதிலுக்கு நேரம் இல்லாவிட்டால், அதற்காக அடுத்த நாள் மாலையில் கூடுகிறார்கள் அந்தத் தமிழர்கள்- மாநாடு மூன்று நாள்களாகிவிடுகிறது.
எழுத்தாளர் மாத்தளை சோமுவின் “தமிழ் ஓசை’ மாத இதழ் நடத்திய இந்த மாநாடு குறித்த ஒவ்வொரு வரிச் செய்தியும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, இலக்கியப் பிரியர்களுக்கு ஆச்சரியமான செய்தியாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் தலைவர் அமுதன் அடிகள் மாநாட்டைப் பற்றி விவரிக்கிறார்:
“”கட்டணம் செலுத்தி முதல் நாள் பங்கேற்றவர்கள் 250 பேருக்கும், மறுநாள் 300 பேருக்கும் மேற்பட்டோர். அதுவும்கூட, குறிப்பிட்ட அந்த நாள் வரிசையில் முன்னும்- பின்னும் தொடர்ந்து அரசு விடுமுறைகள் வந்ததால் தமிழர் குடும்பங்கள் சுற்றுலா சென்றுவிட்டதால் இத்தனைக் குறைவான எண்ணிக்கை” என்கின்றனர் ஆசுதிரேலியத் தமிழர்கள்.
இந்தியத் தமிழர்கள் குறைவே. இலங்கைத் தமிழர்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர், பொறியாளர்கள். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தலுக்குப் பிறகு மாநாடு தொடங்கியது.
வீரமாமுனிவரின் திருக்குறள் பணிகள், தனிநாயகம் அடிகளாரின் திருக்குறள் சொற்பொழிவுகள் குறித்து நான்
பேசினேன்.
பைபிளுக்கு அடுத்து, சமயநூல் அல்லாத நூல்களில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறளே. 18ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் லத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தார் வீரமாமுனிவர்.
திருக்குறளின் சமயம் சாராத தன்மையைத்தான் எல்லோரும் போற்றிப் பாராட்டுகின்றனர். அதனாலேயே அனைத்துச் சமயத்தவரும் திருக்குறளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். நமக்குக் கிடைத்தவரை பா வடிவத்தில்- குறள் வெண்பாவில் வெளிவந்த முதல் நூல் திருக்குறள்தான்.
வெறுமனே வாசிப்பு நூலாகவே திருக்குறளைக் கொள்ளாமல், வாழ்வியல் நூலாக அதைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்” என்கிறார் அமுதன் அடிகள்.
மாநாட்டில் பங்கேற்ற சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் கூறியது:
“கடல்கடந்து வாழும் தமிழர்கள் பெரும்பாலும் நகைச்சுவைப் பட்டிமன்றங்களையும், அரட்டை அரங்கங்களையும் நடத்தி வரும் நிலையில், சிட்னியில் நடைபெற்ற இந்த மாநாடு ஆராய்ச்சிக் கருத்தரங்காக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அந்த மக்களும் இரவு 10.30 மணியைத் தாண்டியும் அமைதியாக அமர்ந்து பொழிவுகளைக் கேட்டனர். ஈழத்தமிழர்களுக்குத்தான் தமிழின் அருமை தெரிகிறது. நம்மவர்கள் பணம், பங்களா வாழ்க்கையுடன் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது வருந்தத்தக்கச் செய்திதான்” என்றார் மறைமலை.
மாநாட்டில் பங்கேற்ற தருமை ஆதீனப் புலவர், பேராசிரியர் மு. சிவச்சந்திரன் கூறியது:
“நம்முடைய பணத்தின் மதிப்புக்கு த் தோராயமாக உரூ. 1200 கொடுத்து (இரு நாள் கட்டணம்) திருக்குறள் பொழிவை மக்கள் கேட்டனர் என்பது முக்கியமான செய்தி. அந்த அளவுக்கு அவர்கள் திருக்குறளை மதிக்கிறார்கள். மாநாடு நடைபெற்ற துர்க்கை அம்மன் கோவில் வாயிலில் 6 அடி உயரத் திருவள்ளுவர் சிலை இருக்கிறது.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, மாநாட்டில் பேச வந்திருந்த எங்களையெல்லாம் மாலை அணிவித்து மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்துச் சென்றனர். மாநாட்டுச் சிறப்பு நூலாக வெளியிடப்பட்ட திருக்குறள் மஞ்சரியை பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பணம் கொடுத்துப் பெற்றுச் சென்றனர்” என்றார் சிவசந்திரன்.
இலங்கையில் இருந்து தமிழருவி சிவகுமாரன், மலேசியாவில் இருந்து குறள் நாவலர் ரெ. சிதம்பரம் ஆகியோரும் ஆசுதிரேலியாவுக்கு வெளியே இருந்து பங்கேற்ற அறிஞர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் நடனம், தீபநடனம் இவற்றுடன் ஆசுதிரேலியாவில் வாழும் அறிஞர்களும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளனர்.
திருக்குறளுக்கென முதன்முதலாக நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாடு இதுதான் என்கின்றனர் தமிழறிஞர்கள்.
– சா. செயப்பிரகாசு
– தினமணி ஞாயிறு கொண்டாட்டம்
ஆசுதிரேலியாவில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுச் செய்திகளைச்சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுகள். இச் செய்தி விழாக் குழுவினருக்கு ஊக்கமாக அமையும். பிற தமிழ் அமைப்பினருக்கு இதுபோல் விழா நடத்த உந்துதலாக அமையும். ஆனாலும் இச்செய்தியில் ‘முதன் முதலாக உலகத் திருக்குறள் மாநாடு’ எனக் குறிக்கப்பட்டுள்ளது தவறாகும்.
திசம்பர் 2000-இல் (எம்.ஏ.உசைன், மருத்துவர் கண்ணப்பன் முயற்சியால்) உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 5, 6, இல் குன்றக்குடி அடிகளார் தலைமையில் உள்ள திருக்குறள் பேரவை, மதுரையில் உலகத்திருக்குறள் மாநாட்டை மதுரையில் நடத்தியது. சூன் 18, 2005 இல் மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் ( வி.சி.பி. முதன்மைப் பங்களிப்பில்) உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. வேறு யார்,யார் நடத்தி உள்ளனர் எனத் தெரியவில்லை. தனித் தனி அமைப்பினர் உலகத் திருக்குறள் மாநாடு என்ற பெயரில் நடத்தினாலும், தாங்கள்தாம் முதலில் மாநாடு நடத்துவதாக எண்ணிக் கொள்கின்றனர். அதற்கு இது போன்ற தவறான செய்திகளும் காரணமாகும். உலகத்திருக்குறள் மாநாடு பற்றிய தகவல்களை யாராவது தொகுத்துத் தந்தால் சரியான விவரங்களை அறியலாம். எனினும் திருக்குறள் மாநாடு சிறப்பாக நடைபெற்றமைக்கும் அதனைத் தாங்கள் வெளியிட்டமைக்கும் பாராட்டுகள்.
அயல்வாழ் தமிழர்கள் கட்டணம் செலுத்தித் தமிழ் மாநாடுகளுக்குச் சென்று வருவதுபோல், இங்குள்ளவர்களும் தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கும் தமிழ்நெறி பரப்புரை கூட்டங்களுக்கும் வருகை தந்து தமிழை வாழ வைக்க வேண்டும். பிற நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்களே முன்னோடியாக இருக்க வேண்டும்.
செய்தியாளர் பா.செயப்பிரகாசிற்குப் பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கட்டணம் செலுத்தி இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் தமிழர்கள் என்பது உண்மையிலேயே மிக நல்ல, இனிமையான செய்திதான். தமிழ் மக்கள் மீது நம்பிக்கை வைத்துத் துணிச்சலாக இப்படியொரு முயற்சியை மேற்கொண்டதற்கே பாராட்டலாம்.
ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களை ஈழத் தமிழர்களோடு ஒப்பிட்டுக் குறைத்துப் பேசுவது வருத்தமளிக்கிறது! குற்றச்சாட்டு என்னவோ உண்மைதான்; மறுக்கவில்லை. ஆனால், அதற்குக் காரணம் உண்டு.
ஈழத் தமிழர்கள், தமிழர்களாக இருக்கக்கூடாது எனக் காலங்காலமாக நெருக்கடி கொடுக்கப்பட்டவர்கள். எனவே, இயற்கையாக எழும் எதிர்ப்புணர்ச்சி காரணமாக, வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் தங்கள் தமிழ்ப்பற்றை, தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் உள் உந்துதல் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் தொடர்ந்து தமிழர்களாகவே இருக்கத் தலைப்படுகிறார்கள், முயல்கிறார்கள், அத்தகைய வாழ்முறையை அமைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை. இங்கே தமிழ் பேசக்கூடாது என்றோ, தமிழர் எனும் அடையாளத்தை வெளிப்படுத்தினாலே கொடுமைப்படுத்தப்படுவோம் என்றோ அடக்குமுறை நிலைமை ஏதும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்தியத் தேசியம், பரந்த மனப்பான்மை, பெருந்தன்மை, நாட்டுப்பற்று போன்ற பல பெயர்களில் இங்கு தமிழர்கள் தனித்தன்மை இழக்க வைக்கப்படுகிறார்கள் என்பது தனிக்கதை! ஆனால், இலங்கையில் இருப்பது போன்ற வெளிப்படையான அடக்குமுறை ஏதும் இங்கு இல்லை. வெளிநாடுகளில் இருப்பது போல், சுற்றிலும் வேறு பண்பாட்டுக்கு நடுவில் தங்கள் பண்பாட்டைக் காத்துக்கொள்ள வேண்டிய அயற்சூழலும் இங்கில்லை. எனவேதான், சொந்த மண்ணில் சுதந்திரத்தோடு வாழ்கிறோம் எனும் (தவறான) நினைப்பில் தமிழர்கள் இங்கு தம் மொழி, இனம், இவற்றின் அடிப்படையிலான அடையாளம் ஆகியவற்றின் மீது அவ்வளவாக அக்கறை இன்றி இருக்கின்றனர். இதைத் தவறு எனச் சொல்ல முடியாது. விடுதலை மனப்போக்கு தரும் அசட்டை, அவ்வளவுதான். இது தவறுதான். ஆனால், இதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது உணர்வாளர்களின், அறிஞர் பெருமக்களின் கடமை!