(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)

 வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை

ங. களவியல் 

(வரிசை எண்கள் / எழுத்துகள்

‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)

தென்புலத்தார்

    “படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்ட கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசையாதலின் தென் புலத்தார் என்றார்” என்பது பரிமேலழகர் கூறும் உரையாகும். உலகத்தை அயன் படைத்தான் என்பதும் அப்பொழுது படைக்கப்பட்டவர்  தென்புலத்தில் உளர் என்பதும் அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவர்கள் ஏன் படைக்கப் பட்டார்கள்? அவர்களுடைய கடமை யாது? தென் திசையில் அவர்கள் யாண்டு வாழ்கின்றார்கள்? அவர்களை மக்கள் போற்ற வேண்டியது ஏன்? என்பன போன்ற கேள்விகட்கு விடை கூறுவார் இலர். ஆதலின் பரிமேலழகர் உரை இங்குப் பயனற்று விடுகிறது.

  தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை  தென் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்Ùக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.

     “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.

தெய்வம்

   ‘தெய்வம்’ என்பது தூய தமிழ்ச் சொல்லே. இச்சொல் தொல்காப்பியத்தில் கருப்பொருள்களில் ஒன்றாக முதன்மையிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

                தெய்வம் உணுவே மாமரம் புள்பறை

                செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய

                அவ்வகை பிறவும் கருவென மொழி.

   உணவுக்கு முந்தியதாகத்  ‘தெய்வம்’ கூறப்பட்டுள்ளதிலிருந்து தெய்வ உணர்வு மாந்தர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது எனத் தமிழ் முன்னோர் கருதி வந்துள்ளனர் என்பது அறியற்பாலது.

    தெய்வத்தை ஓம்புதல் என்பது எவ்வாறு? ஒவ்வோர் உடலும் இறைவன் உறைவிடமாகும். ஆகவே, உயிர்கட்குச் செய்யும் தொண்டே கடவுள் தொண்டாகும். தன்னாட்டுப் பற்றுடைய மாந்தன் பிறவுயிர்களையும் போற்ற வேண்டும் என்பதனைக் கருதி அடுத்துத் தெய்வத்தை வைத்துள்ளார்.

விருந்து

   புதிதாகத் தம் வீட்டை நாடி வரும் அயலார் யாவரே யாயினும் அவரை உவந்து வரவேற்று ஓம்புதல் அக்காலத்து மிகவும் வேண்டப்பட்டதாகும். சிற்றுண்டி விடுதிகளும் பேருண்டி இல்லங்களும் இக் காலத்தில் உள்ளனபோல் அக் காலத்தில் இருந்திருக்க இயலாமையால் வெளியூர்களிலிருந்து வருவோர்க்குப் புகலிடம் வீடுகள்தாம். ஆகவே, விருந்தினரைப்புதிதாக வருவோரைப் புரக்க வேண்டுவதும்  இல்லறத்தான் கடமையாய் விட்டது.

  இக் காலத்திலும் வெளிநாடுகளில், ஏன் நம் நாட்டில் சில பகுதிகளிலும் அயலவரைத் தம் வீட்டில் தங்க வைத்து உணவு உறையுள் அளித்து ஓம்புகின்றனர். அவற்றிற்கெனக் கட்டணமும் பெற்றுக் கொள்கின்றனர். அவ்வயலவர் ‘கட்டணம் செலுத்தும் விருந்தினர் (Paying Guests) என்று அழைக்கப்படுகின்றனர்.

க்கல்

    செல்வ நிலையிலிருப்போர் செல்வமற்ற தம் சுற்றத்தாரை ஓம்புதல் மிகமிக வேண்டற்பாலது. இதனைச் ’சுற்றம் தழாஅல்’ என மீண்டும் (பொருட்பால் 53) தனியியலில் வள்ளுவர் பெருமான் வலியுறுத்துகின்றார்.

                சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்

                 பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் 524)

என்பதூஉம் காண்க.

தான்

   தன்னை யோம்புதல் மிகமிக இன்றியமையாதது. தானின்றி உலகேது? தான் நன்கு வாழ்ந்தாலன்றோ எல்லாக் கடன்களையும் நன்கு ஆற்ற இயலும்! ஆகவே, தன்னையும் ஓம்புதல் அறநெறியின் பாற்பட்ட கடன்களுள் ஒன்Ùக வைக்கப்பட்டுள்ளது. தன்னைப் போற்றுதலைக் குற்றம் என்போரும் உளர். அழியும் உடலை அழிய விடுஎன உதட்டளவில் பிறர்க்கு உரைத்து, உள்ளத்தால் பற்றுவிடாது கரவு முறையில் தம் ஊன் பெருக்குவார் உள்ளீடு இது. ஆகவே, வள்ளுவர் பெருமான் வெளிப்படையாகவே “உன்னையும் போற்றிக் கொள்” என உலகறிய உரைக்கின்றார்.

                பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்  வாழ்க்கை     

வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்  (திருக்குறள் 44)

      பழி அஞ்சி=குற்றங்களை அஞ்சி(பொருளை ஈட்டி), பாத்து ஊண்=பிறருடன் பகுத்து உண்ணும் உணவை, உடைத்தாயின்=பெற்றிருக்குமாயின், வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, வழி எஞ்சல்=அற்றுப் போதல்,எஞ்ஞான்றும்=எப்பொழுதும்,இல்=இல்லை.

   இல்லற வாழ்க்கை மக்களது நாகரிகப் பண்பாட்டின் முதிர்ச்சியாகும். உழைத்துப் பொருளீட்டி இல்லாதார்க்குப் பங்கிட்டு உண்ணுதலே இல்லறப்பண்பின் முதிர்ச்சியாகும். பிறர்க்கு அளித்து வாழாதார் இல்லறம், இல்லறமேயன்று.

(தொடரும்)

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்