(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி)

 வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை

ங. களவியல் 

(வரிசை எண்கள் / எழுத்துகள்

கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)

                அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை

               பண்பும் பயனும் அது (திருக்குறள்  45)

                இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும்,  உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம்  பெற்றிருத்தலாகும்.

அன்பு

  பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை அன்பு” என்றார். இல்லறத் தலைவனும் தலைவியும் காதலால்  பிணைப்புண்டு வாழ்க்கையறத்தை மேற்கொண்டுள்ளவராதலின், இருவரும் ஒருவர் மாட்டொருவர் அன்பு கொண்டிருப்பராதலின் அவ்வன்பு இல்லறப் பண்பு எனல் ஆகாது. இங்கு அன்பு என்பது தொடர்பில்லார் மாட்டுக் காட்டும் பரிவைத்தான் குறிக்கும். அதன் சிறப்புக் கருதியே தனியாக ’அன்புடைமை’ என்னும் இயலின் விளக்கப்படுகின்றது.

அறம்

   “பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறம்” என்றார் பரிமேலழகர். பிறர்க்குப் பகுத்துண்டல் இல்லறக் கடமைகளுள் ஒன்று. அதனை மட்டும் பயன் எனல் பொருந்தாது.

  “அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்” இல்லறக் கடமைகளாகக் கருதப்பட்டன. இல்லறக் கடமைகளாம் அவற்றை ஆற்றும் முறைகளும் அறவழிப்பட்டனவாக இருத்தல் வேண்டும். எங்ஙனமும் பொருளீட்டி மனைவியைப் போற்றி மக்களைப் புரந்து வாழ்தல் வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அறநெறியில் செல்லுதலே இல் வாழ்க்கையின் பயனாகும்.

   ஆகவே, இல்லறத்தின் பண்பு அன்பு: இல்லறத்தின் பயன் அறநெறியில் வாழ்தல்.

                அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

                போஒய்ப் பெறுவது எவன்?   (திருக்குறள் 46)

    அறத்து ஆற்றின்=அறவழியில், இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, ஆற்றின்=செலுத்தினால், (எல்லா இன்பங் களையும் எய்துதல் கூடும்.) புறத்து ஆற்றில்=அறத்திற்குப் புறம்பாகிய தீயநெறியில், போஓய்=சென்று, பெறுவது எவன்=அடைவது என்ன?

    இல்லற வாழ்க்கையை அறநெறியில் செலுத்தினால் நல்லின்பங்களை நன்கே பெறலாம். சிலர் அங்ஙனமின்றி அறநெறியினின்றும் விலகி மறநெறியில் வாழத் தலைப்படுகின்றனர். இஃது, அறநெறியில் செல்வதினும் தீய நெறியில் செல்லுதலை எளிதாகக் கருதுவதனால் உண்டாகும் விளைவாகும். ஆனால், அறத்திற்குப் புறம்பான நெறியில் எதனையும் எய்திவிட முடியாது. எய்துவதுபோல் தோன்றினும் பின்னர் நிலைத்து நில்லாது துன்பத்திடையே கொண்டு செலுத்தும். ஆதலின், வாழ்வதே பயனுடைத்து என அறிதல் வேண்டும்.

   “புறத்தாறு=இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் போஒய்ப் பெறுவது எவன் என்றார்” இங்ஙனம் பரிமேலழகர் கூறுகின்றார். அவர் கூற்றுப்படி துறவறத்தினும் இல்லறமே பயனுடைத்து என்பதாகும்.

  பரிதியாரும், கவிராச பண்டிதரும் ‘புறத்தாறு’ என்பதற்குப் ‘பாவத்தின் வழி’ என்று பொருள் கூறுகின்றனர்.

                இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

                முயல்வாருள் எல்லாம் தலை   (திருக்குறள்  47)

இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கையை, இயல்பினான்=அதற்குரிய இயல்பு முறைப்படி, வாழ்பவன் என்பான்=வாழ்கின்றவன் என்று சொல்லப் படுபவன், முயல்வாருள் எல்லாம்=இன்பங்களை அடைவதற்கு முயல் கின்றவர் அனைவருள்ளும், தலை=முதன்மையாகக் கருதி மதிக்கப்படுபவன் ஆவான்.

  இன்பங்களை அடைவதற்கு, இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்களைவிட இல்லற நெறியில் வாழ்கின்றவரே உயர்ந்தவர்  தமக்கும் பிறர்க்கும் பயன்படுகின்ற வகையில் இயற்கை யோடிசைந்து வாழ்ந்து இன்ப நலன்களைத் துய்ப்பவர்  என்பது அறியற்பாலது.

 “முயல்வார்=முற்றத் துறந்தவர் விட்டமையின் முயல்வார் என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை” என்பர் பரிமேலழகர். மூன்றாம் நிலை என்பது மனைவியுடன் காட்டுக்குச் சென்று கடுந்தவம் செய்யும் நிலையாகும். இது தமிழர் வாழ்வியல் நெறிக்குப் பொருந்தாது. தமிழர் நால்வகை நிலைகளை ஏற்றுக் கொண்டாரிலர். பிரமச்சரியம், கிரகத்தம், வானப்ரத்தம், சந்நியாசம்என்னும் நால்வகை நிலையும் வடவர்க்கே உரியன. ஆதலின், ‘முயல்வார்’ என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை என்பது பொருந்தாது.

(தொடரும்)

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்