(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4. தொடர்ச்சி)

 

 

வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை

ங. களவியல் 

(வரிசை எண்கள் / எழுத்துகள்

கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)

 

  1. வாழ்க்கைத் துணைநலம்

 

                இல்லற வாழ்க்கை ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாகக் கூடி வாழும் வாழ்க்கையாகும். இருவருள் ஒருவர் இல்லையானாலும் இல்லறம் சிறப்புறாது. இல்வாழ்வு அமையப் பெறுவதற்கே இருவரும் ஒன்று கூட வேண்டும். இல்லற வாழ்வில் இருவருமே தலைவர்கள். கணவன் தலைவன்; மனைவி தலைவி. கணவன் தலைவி என்றால் மனைவி அடிமையல்லள்; மனைவி தலைவி என்றால் கணவன் அடிமையல்லன்; இருவருமே தலைமைப் பொறுப்புக்கும் பெருமைக்கும் உரியவர்கள். இல்லற வாழ்வு இனிமை பொருந்த நடை பெற வேண்டுமென்றால் இருவர் துணையும் வேண்டும். ஆயினும், இல்லறத்தில் தலைவனைவிடத் தலைவிக்கே பொறுப்பும் கடமையும் மிகுதி. அவளே இல்லில் தங்கி இல்லறம் ஓம்புதலில் இடையறாது ஈடுபடும் நிலைக்குரியவளாகிவிட்டாள். ஆகவே “இல்லாள்’    (=வீட்டிற்குரிவள்) என்றும், “மனைவி’  (=மனைக்குரியவள்) என்றும் அழைக்கப்படும் சிறப்புக்குரியவளாகி விட்டாள். “இல்லான்’  “மனைவன்’  என்று தலைவனை அழைத்தல் இல்லையன்றோ? ஆகவே, இல்லற வாழ்வு இனிது நடைபெறத் துணையாய் இருக்கும் அவள் வாழ்க்கைத் துணை என்று அழைக்கப்படும் சிறப்புக்குரியவளாகியுள்ளாள். இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புக்களைத் தொகுத்துரைப்பதே இல்லறவியல்.

                மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற்   கொண்டான்

                வளத்தக்கான் வாழ்க்கைத் துணை      (51)

           மனைத்தக்க=மனையறத்திற்கு ஏற்ற, மாண்புடையள் ஆகி=நல்லியல்புகள் பொருந்தியவள் ஆகி, தற் கொண்டான்=தன்னை மனைவியாகக் கொண்ட கணவனுடைய, வளத்தக்காள்=வருவாய்க்குத்தக்க வாழ்க்கை உடையவள், வாழ்க்கைத் துணை=சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்.

                மனையறத்திற்கு ஏற்ற மாண்புகள் யாவை?

                 தொல்காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளன:

      கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

     மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிநின்

     விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

     பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் 

                  (தொல்.பொருள்.கற்பியல் நூற்பா 11)

    இங்குக் காமம் என்ற சொல் காதல் என்னும் பொருளைத் தரும். இது தூய தமிழ்ச் சொல்லே. ‘காம்’  பகுதி.

                 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்  வாழ்க்கை

                  எனைமாட்சித் தாயினும் இல் (52)

    மனைமாட்சி=மனையறத்திற்கு ஏற்ற பெருமைக் குணங்கள், இல்லாள்கண்=வீட்டுக்குரிய மனைவியிடத்து, இல்லாயின்=இல்லையானால், வாழ்க்கை=இல்லற வாழ்வு, எனை மாட்சித்தாயினும்=செல்வம் முதலியவற்றால் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தாலும், இல்=பயனில்லை.

  ஒருவன் எல்லாச் செல்வங்களையும் பெற்று, அனைவரும் போற்றத்தக்க உயர்நிலையில் இருந்தாலும், இல்லறத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெறாவிட்டால் இல்லற வாழ்வு இனிமை பயவாது; கருதிய பயனைத் தராது. இல்லறத்தின் ஏற்றம் இனிய மனைவியால்தான் ஏற்படும்.

                இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

                இல்லவள் மாணாக் கடை       (53)

   இல்லவள் மாண்பானால்=வீட்டுக்குரிய மனைவி இல்லறத்திற்கு ஏற்ற பெருமைக்குணங்கள் உடையவளாய் இருந்தால், இல்லது என்=ஒருவன் பெற்றிராது என்ன? ஒன்றுமில்லை. இல்லவள்=மனைவி, மாணாக்கடை=இல்லற மாண்புகள், பெற்றிராதபோது, உள்ளது என்=பெற்றிருப்பது என்ன? ஒன்றுமில்லை.

        இல்லறத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெற்றால், இல்லறத்திற்குத் துணையாவனவற்றுள் எதையும் பெற்றிராதபோதும், எல்லாம் பெற்றுள்ளமை போன்றதாம். எல்லாம் பெற்றிருந்தும் இல்லத்திற்கு ஏற்ற மனைவி வாய்க்கப் பெறாவிட்டால், யாதும் பெறாத நிலைமை போன்றதாகும். இல்லறத்தின் சிறப்பு அதற்கு ஏற்ற மனைவியைப் பெறுவதே.

(தொடரும்)

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்