(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி)

வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை

ங. களவியல் 

(வரிசை எண்கள் / எழுத்துகள்

கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)

                 சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர்

                  நிறைகாக்கும் காப்பே தலை    (57)

             மகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும்? நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது.

                உலகெங்கணும் ஆண் பெண் உறவு சில அமயங்களில் சிக்கல் நிறைந்ததாகி விடுகின்றது. ஆண் மீது பெண் ஐயங் கொள்ளுதலும், பெண் மீது ஆண் ஐயங் கொள்ளுதலும், ஆங்காங்குத் தலைப் படுகின்றன. மேலை நாடுகளில் கணவனும் மனைவியும் சோடி சோடியாகச் செல்லுதல் இவ் வையத்தின் விளைவே என்பர். தமிழ் நாட்டில் கணவன் தன் மனைவிமீது ஐயங் கொள்வானேயானால் தக்க காவலுக்கு உட்படுத்துவான். சிலர் பூட்டி வைத்தலும் உண்டு. அரசு மாளிகைகளில் தக்க காவலுக்குட்படுத்தப்பட்ட பெண்கள், அக் காவலையும் கடந்து தம் விருப்பை நிறைவேற்றிக் கொண்ட கதைகளும் உள. ஆதலின், பெண்ணைப் பூட்டி வைத்துச் சிறைப்படுத்திக் காப்பதனால் பயன் இல்லை என்பது தெளிவாகின்றது. நிறையால் காக்கும் பெண் எங்குச் செல்லினும் எத்தனை அழகிய ஆடவர்க்கு நடுவில் இருப்பினும் மாசுற மாட்டாள். நிறையால் காக்கும் ஆற்றலற்றவளை எத்துணைக் கடுங்காவலுக்குட் படுத்தினும் பயனிராது. தமிழ்நாட்டில் பெண்களை ஆண்களுடன் பழக விடாமல் தடுப்பது சிறைக்காவல் போன்றதே. நிறையால் காக்கும் மகளிரே நமக்கு வேண்டும். ஆதலின், ஐயப்படாது மகளிர்க்கு உரிமை நல்கி அவர் விருப்பம் போல் இயங்குவதற்கு வசதியளித்தலே அவர்க்கு மதிப்பு அளித்தலாகும்.

                பெற்றான்  பெறின்பெறுவர்  பெண்டிர்  பெருஞ்சிறப்புப்

                புத்தேளிர் வாழும் உலகு    (58)

           பெண்டிர்=மகளிர், பெற்றான் பெறின்=தம்மை மனைவியாகப் பெறறவனைத் தம் குண நலன்களால் ஆட்கொள்ளப் பெறின், புத்தேளிர் வாழும் உலகு=வானவர் வாழும் உலகுக்கொப்பான, பெருஞ்சிறப்பு=பெரிய சிறப்பினை, பெறுவர்=அடைவர்.

       தம் கணவர் தம்மை உள்ளன்போடு விரும்புபவராகப் பெறின் பெண்கள் பெருஞ்சிறப்புப் பெற்றவராவர். புத்தேளிர் வாழும் உலகு என்பது இந்நிலவுலகினும் மேம்பட்டதாக எண்ணப்படுவது. இவ்வுலகில் காணப்படும் குறைபாடுகள் அவ்வுலகில் இரா. அது பேரின்பத்திற்கு நிலைக் களமாக எண்ணப்படுவது.  புலவர் கற்பனையால் படைக்கப்பட்டுள்ள அவ் வுலகம் எவர்க்கும் எட்டாத ஒன்றாகும். அவ்வுலகின் பேரின்பச் சிறப்பைக் கணவனின் அன்பைப் பெற காதலி அடைவாள் என்பதாம்.

புகழ்புரிந் தில்லோர்க் கில்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.(59)

புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்குத் தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன்னிலையில் ஏறுபோன்ற பெருமித நடை கிடையாது. (கற்பில்லா மனைவியைப் பெற்றவன் வெட்கத்தால் தலைகுனிந்து நடக்க வேண்டி வரும்.)

[குறிப்பு: இந்நூலுக்கான அண்மைப்பதிப்புகள்அனைத்திலும் இக்குறளுக்கான விளக்கம் விடுபட்டுள்ளது. எனவே, இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரையில் உள்ள விளக்கம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. மூலநூல் கிடைக்கும் பொழுது உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும்.]

     மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்

             நன்கலம் நன்மக்கட் பேறு  (60)

                மனைமாட்சி=இல்லறத்தின் சிறப்பு, மங்கலம் என்ப=நாட்டிற்கு நன்மை பயப்பதாகும் என்பர் பெரியோர், மற்றதன்=இல்லறத்தின், நன்கலம்=நல்ல அணிகலன், நன்மக்கட்பேறு=நல்ல மக்களைப் பெறுதலாகும்.

                பல வீடுகளைக் கொண்டதே நாடு. வீடுகள் இல்லையேல் நாடும் இல்லை. வீட்டின் சிறப்பே நாட்டின் சிறப்பாகும். வீடுகள் நன்முறையில் அமைவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். வீட்டின் நலனே நாட்டின் நலன்.

                வீடுகளே மக்களைத் தோற்றுவிக்கும் இடம். மக்கள் வாழ்வே நாட்டின் வாழ்வு. மக்கட் கூட்டம் இலலாமல் நாடேது? வெறும் நிலப்பரப்பு மட்டும் நாடாகுமா? ஆகாதன்றோ? ஆதலின், இல்லறத்தின் அணிகலன்களாக மக்களைக் கருதிப் போற்றினர். நாட்டு மக்கள் நல்லோராக அமைவதும் வீட்டையே சார்ந்துள்ளது. மக்களைப் பெற்று நன்முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பும் மனையறத்தைச் சார்ந்தேயாகும். அதனாலேயே நன்மக்கட்பேறு என்றார்.

(தொடரும்)

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்