‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது

காதல் வாழ்க்கை’

  1. பதிப்புரை

    தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சென்று திருக்குறளைப் பரப்பிய பேரறிஞர்; ‘குறள்நெறி‘ என்னும் பெயரில் திங்கள் இதழ், திங்களிருமுறை இதழ், நாளிதழ் நடத்திக் குறள்நெறி அன்பர்களை உருவாக்கிய இதழியல் அறிஞர்; ’எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ , ‘அமைச்சர் யார்?’, ‘வள்ளுவர் வகுத்த அரசியல்’ முதலான பல நூல்கள் மூலம் படிப்போர் வட்டத்திலும் குறள்நெறி எண்ணங்களைப் பரப்பியவர்.

    பேராசிரியர் சி.இலக்குவனாரின் நூற்படைப்புகளில் ஒன்றுதான் ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ என்னும் அரிய நூல். 1971ஆம் ஆண்டு சென்னையிலுள்ள மீனா புத்தக நிலையம் இந் நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலை மறுபதிப்பாக வெளியிடுவதில் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்‘ பெருமை கொள்கிறது.

        இந்நூல் வெளியீட்டில் மீனா புத்தக நிலையம் பின்வருமாறு பதிப்புரை வழங்கியுள்ளது.

      “திருவள்ளுவப் பெருமான் இயற்றியருளிய பொய்யா மொழியெனும் பொதுமறைச் செல்வமாகிய திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பால்களுக்கும் விளக்கங்கள் பல அறிஞர் பலரால் இயற்றப்பட்டு வெளி வந்திருக்கின்றன. ஆனால், காமத்துப்பால் எனப்படும் இன்பத்துப்பாலில் அடங்கியுள்ள கருத்துச் செறிவு எளிதில் புலனாகும் வண்ணம் தெளிவான விளக்கங்கள் இதுவரை வெளிவரவில்லை. பேராசிரியர் சி.இலக்குவனார், எம்.ஏ.எம்.ஓ.எல்பி.எச்.டி.  அவர்கள், திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் உள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் ஆகிய நான்கு அதிகாரங்களையும், இன்பத்துப்பாலுக்குரிய களவியல், கற்பியல் ஆகியவற்றின் இருபத்தைந்து அதிகாரங்களுடன் இணைத்துச் சுவை செறிந்த ஒரு நாடகக் காட்சியென அமைந்திருக்கும் முறை, படிப்பவர் உள்ளத்தைக் கவர்ந்து ஈர்க்குமாறுள்ளது. இவற்றிற்கு மிகத்தெளிவான இனிய எளிய உரை கூறி, இவற்றிற் செறிந்துள்ள கருத்து எளிதிற் புலனாகுமாறு விளக்கியிருக்கும் முறை, கலைகள் பல கற்றுத் துறைபோய புலவர் பெருமக்களும், எழுதப் படிக்க மட்டுமே அறிந்துள்ள பிறமக்களும் விரும்பிப் படித்து மகிழுமாறுள்ளது.

 பொதுவாக, தமிழறிந்த அனைவரும் மீண்டும் மீண்டும் பன்முறை படிக்க அவாக் கொள்ளும் வகையில் இலக்கியச் சுவை குன்றாமல், பண்டைத் தமிழ் மக்களின் காதல் வாழ்க்கைச் சிறப்பு தெள்ளிதிற் புலàகும் வண்ணம் இயற்றியளித்துள்ளார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள்”

   திருக்குறள் வகுப்புகள் மூலம் எளிய முறையில் திருக்குறள் நெறியை விளக்கிய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு எளிய நடையில் திருக்குறள் விளக்கம் தருவது என்பது எளிய செயலாயிற்று. எனவே, தமிழ் மாணாக்கர் மட்டுமல்லாமல் ஓரளவு தமிழறிந்த அனைவரும் நன்கு புரிந்து கொள்ளும் முறையில் திருக்குறள் தொடர்பான நூல்களை உலகிற்கு அளித்துள்ளார் அவர். அதே வரிசையில்தான் இந்நூலையும் படைத்துள்ளார்.

           வாழ்வியல் கல்வியைக் கற்க வேண்டிய அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தலைவன், தலைவி உரையாடுவது போலவும் எண்ணுவது போலவும் நாடகப் பாங்கில் சுவையுடன் பேராசிரியர் சி.இலக்குவனார் இந் நூலைப் படைத்துள்ளார். அதே நேரம் திருக்குறள்களைத் திருவள்ளுவர் நோக்கத்தில் இருந்து மாறுபட்டுத் தம் கருத்து முலாம் பூசும் முறையைச் சிறிதும் பின்பற்றவில்லை. இடையிலே பூசப்பட்ட ஆரிய வண்ணங்களை அகற்றிய தமிழிய அறிஞர்கள் பலர், எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டுகளாக எண்ணாமல் பகுத்தறிவு நோக்கில் புதுப்புது விளக்கங்கள் அளித்துள்ளனர். பேராசிரியர் அவ்வாறு இல்லாமல் மக்களிடையே நிலவிய புராணக் கதைகளை எடுத்துக்காட்டுவதற்காகத் திருவள்ளுவர் கையாண்டுள்ளாரே தவிர, அவரின் நோக்கம் தமிழ்நெறிக் காப்பு மட்டுமே என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே, இந்திரன் உலகம் முதலான கற்பனைகளைக் கற்பனைகளாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் விளக்கியுள்ளாரே தவிர கற்பனைகளை உண்மை என நம்பும்படியோ புதிய விளக்கங்களை ஏற்றியோ விளக்கம் அளிக்கவில்லை. 

     பரிமேலழகர் முதலானவர்கள் கருத்துகளை மறுக்கும் பொழுதும் அக்கால நெறியும் திருவள்ளுவர் கருத்தும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என உணரும் வகையில் விளக்கியுள்ளார். திருவள்ளுவரை ‘வையகத்தின் முதல் புரட்சியாளர்‘ எனக் கூறும் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், அதற்கேற்பவே இந்நூலையும் படைத்துள்ளார்.

    இவருக்கு முன்னரும் பின்னரும் யாரும் விளக்காத வகையில் பல கருத்துகளை ஆங்காங்கே தரப் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் தவறவில்லை. எடுத்துக்காட்டாகக் கள்ளின்பத்தைவிடக் காதல் இன்பம் சிறந்தது என்பதைக் கூறும் பொழுது ”கள் தரும் துன்பம் போல் காதலாலும் துன்பம் விளையும்” என விளக்கியுள்ளதைக் கூறலாம். இலக்கணக் குறிப்புகள், நாம் அயற்சொற்களென மயங்கியுள்ள அமிழ்தம், முத்து முதலான சில தமிழ்ச் சொற்களின் விளக்கம்  ஆகியவற்றைத் தேவையான இடத்தில் தந்துள்ளார்.

     “சான்றோன் எனக் கேட்ட தாய்”,”தந்தை மகற்காற்றும் நன்றி”, “மகன் தந்தைக்காற்றும் உதவ”, ”கொழுநன் தொழுதெழுவாள்” முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச் சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கியுள்ளார். இவ்வாறு பெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும் படித்தறிந்து பின்பற்ற வேண்டியன வாகும்.

       இவற்றை யெல்லாம் நூலிலேயே படித்தறிந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கு விளக்கவில்லை.

          “தனித்தமிழ் நூலாம் திருக்குறள் தமிழ் மரபு தழுவி முதல் நூலாகத் தமிழிலேயே இயற்றப்பட்டது” என்பதையும் பேராசிரியர் சி.இலக்குவனார் விளக்கத் தவறவில்லை.

      மேலும் பேராசிரியருக்குத் திருக்குறள் அதிகார வைப்புமுறையை மாற்ற வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. அதே நேரம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கிணங்கத் தேவையான முறையில் தொகுத்துத் தருவதே எளிய முறையில் விளக்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை உடையவர். எனவேதான்,”திருக்குறள்  எளிய பொழிப்புரை’யை நடைமுறை அதிகார வரிசைக்கு இணங்கவே அளித்துள்ளார். அதே நேரம் இல்லறப் பொருண்மையை விளக்கும் வகையில் இந்நூலில் இன்பத்துப்பால் 25 அதிகாரங்களுக்கு முன்னும் பின்னும் அறத்துப்பாலில் இரண்டிரண்டு அதிகாரங்களை இணைத்து நூற் கருத்தை முழுமையாக்கியுள்ளார். இதே போல், ஒரு சில அதிகாரங்களில் திருக்குறள் வரிசைமுறையையும் மாற்றி விளக்கியுள்ளார். இவ்வாறு சுவைபடத் தொகுத்து எளிய இனிய தமிழில் பேராசிரியர் தந்துள்ள விளக்கங்களைப் படித்துக் குறள்நெறி வழி வாழ்வோம்! குவலயம் ஓங்கச் செய்வோம்!

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

தி.பி.2040 / கி.பி.2009

பேசி: 98844 81652