தமிழ்த் தென்றல் 

 தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன். ‘தேச பக்தன்’ என்ற ஒரு நாளிதழை நடத்தி, அதன் ஆசிரியராக இருந்து, அதன் தலையங்கங்களில் சிக்கலான செய்திகளைக்கூட எளிய தமிழில் முதன் முதலாக எழுதி வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு. அக்காலத்தில் அரசியல் கூட்டங்களில் பல தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். அத்தகையோரை மீறி, நல்ல தமிழில் அரசியல் மேடைகளில் பேசி, பொது மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பெரும்: பாராட்டுதலைப் பெற்றவர் திரு. வி. க. அவர்கள்.

  புதுமையான கருத்துகளைக் கொண்ட சிறந்த நூல்கள் பலவற்றை அழகிய தமிழ் மொழியில் எழுதி அவர் தமிழ் மக்களுக்கு வழங்கியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. அவற்றில் மிகச் சிறந்து விளங்குவது ‘பெண்ணின் பெருமை’யும், ‘காந்தியடிகள் வரலாறு’ம். அக்காலத்தில் தமிழகத்தை அரசாண்ட ஆங்கிலேயர்கள் திரு. வி. க. அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டிச் சிறையில் அடைத்து விட்டனர். அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவர்கள்  வயவர்(சர்) பி. தியாகராச(செட்டியா)ர் அவர்களும், வயவர்(சர்)  ப.தி.(P. T.) இராசன் அவர்களும், ஆளுநர் அவர்களிடம் தூது சென்று அவர்களை விடுவித்து மகிழ்ந்த செய்தி இன்னும் என் நினைவில் இருக் கிறது.

 ஒரு முறை குற்றாலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். திரு. வி. க. அவர்கள் அருகிலுள்ள வ.வே.சு.ஐயரைப் பார்க்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது, அவர் சொல்லிய, சொற்களைக் கண்டு நான் பெரிதும் வியந் தேன். அச்சொற்கள் : ‘இவர் திருச்சி இளைஞர். விசுவநாதம், ஈவேரா.வின் தொண்டர். நாயக்கருக்கு செல்லுமிடமெல்லாம் இப்படிப்பட்ட நல்ல இளைஞர்கள் கிடைத்து விடுகிறார்கள், நமக்குக் கிடைப்பதில்லை. என்ன செய்வது” என்பது தான்.

(தொடரும்)

முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம்

எனது நண்பர்கள்