thirukkural02

  பொதுவாக உலக வழக்கில் ‘உண்மை’ ‘வாய்மை’ என்னும் இரு சொற்களையும் ஒரு பொருள் குறிப்பனவாகவே மக்கள் வழங்கிவருகின்றனர். ஆனால், இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருளைச் சுட்டி நிற்பனவாகும்.

  உண்மை என்னும் சொல், உள்ளதை அல்லது நிகழ்ந்த ஒன்றைக் குறிப்பது. மாங்காய் புளிக்கும்; கரும்பு இனிக்கும்; மரம் முறிந்தது; இவை அனைத்தும் உண்மைகள். முயல் கொம்பு; வாடாத நறுமலர்; தேயா நிலவு; இவை இல்லாத அல்லது நிகழாத இன்மைப் பொருள்களைச் சுட்டுவன. இதனின்று உண்மை என்னும் சொல் இன்மை என்பதன் எதிர்ச்சொல் என்று இனிது புலனாகின்றது.

  ஆனால், வாய்மை எனும் சொல் இன்மையின் எதிர்ப்பொருளைக் குறிப்பதன்று. மாறாக, அது பொய்மை என்னும் சொல்லுக்கு எதிரானதாகும். எக்காலத்தும் நிலை பெற்று, எல்லாராலும் ஏற்புடையதென ஒப்புக்கொள்ளப்பட்டு, யாருக்கும் தீமை சிறிதும் பயவாத வாய்மொழியே & மெய்ம்மையே வாய்மையாகும். அஃது உள்ளதையோ, நிகழ்ந்ததையோ தவறாது சுட்ட வேண்டும் என்பதில்லை. பொதுவாக யாருக்கும் தீமை விளைவிக்காத ஆனால் எல்லார்க்கும் நன்மை பயக்கும் சொற்களை வாய்மை என்றும், பிறர்க்குத் தீமை தரும் சொற்களைப் பொய்ம்மை என்றும் கொள்ளலாம். இக்கருத்தையே,

‘‘வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல்.’

என்ற குறட்பாவால் வள்ளுவர் பெருமான் இனி விளக்குகின்றார்.

  செந்நாப் போதாரின் இவ்வுயரிய கருத்துப் பின்வரும் எடுத்துக்காட்டால் இனி விளங்கும். வழிப்போக்கன் ஒருவன் கைப்பொருளுடன் கானகத்தினூடே தனிமையில் சென்று கொண்டிருந்தான். கொலைக்கஞ்சாத கொடிய கள்வர் சிலர் அவனை வழிமறித்து, கைப்பொருளைப் பறித்துக் கொண்டனர். அத்துடன் அமையாது அவளைக் கொல்லவும் துணிந்தனர். உயிருக்கு அஞ்சிய வழிப்போக்கன் வெருண்டு ஓடி அருகிருந்த குடிசை ஒன்றில் அடைக்கலம் புகுந்தான். அங்குத் தவ ஓழுக்கம் மேற்கொண்டு வாழ்ந்திருந்த முனிவர் நடந்ததை அறிந்தார். வழிப்போக்கன் உயிரைக் காக்க அவனை ஒரு தாழியின் கீழ் மறைத்து, அதன் மேல் புலித்தோலிட்டு அமர்ந்தார். கள்வர்கள், குடிசையுள் புகுந்து, வழிபோக்கன் எங்குற்றனன் என்று முனிவரை வினவினர். உண்மை கூறின் வழிப்போக்கன் கொல்லப்படுவான். எனவே உள்ளதைச் சொல்ல முனிவருக்கு மனம் வரவில்லை. ஆயின், நெஞ்சறிந்த ஒன்றை மறைத்து இல்லது கூறவும் அவர் மனம் ஒருப்படவில்லை. இறுதியில் உள்ளம் தேறி, அடைக்கலம் புகுந்தோன், உயிரைக் காக்க வேண்டி, ‘‘நீங்கள் தேடுபவன் என் புட்டத்தின் கீழ் இருக்கிறான்’’ என்று முனிவர் நகை செய்து உரைத்தார். கள்வர்கள் மேலுங் கீழும் நோக்கி, முனிவர் வேடிக்கை செய்வதாக நினைத்து அகன்றனர். வழிப்போக்கன் உயிர் தப்பினான்.

  முனிவர் இங்கு நிகழ்ந்ததை – உள்ளதை – அவ்வாறே கூறவில்லை. என்றாலும் அவர் வாய்மொழியால் யாருக்கும் தீமை நேரவில்லை. அதே நேரத்தில் வழிப்போக்கன் பெருநன்மை அடைந்தான். எனவே, முனிவரின் கூற்று யாதொன்றும் தீமையிலாத சொல்லான வாய்மையாயிற்று.

  எனினும், இங்கு ஒரு தவறான கருத்திற்கு நாம் இடமளித்து விடக்கூடாது, யாதெனில் நன்மை தரும் சொல்லாதாயின், அது பொய்யாக இருந்தாலும், வாய்மை என்று கொள்ளத் தகும் எனச் சிலர் மேற்போக்காகக் கூறுவதை நாம் ஏற்புடையதென்று கொள்ளுதல் ஆகாது. இவ்வாறு கருதுபவர்கள், துரோணருக்கு இறுதி விளைக்கும் நோக்கத்துடன், ‘அசுவத்தாம ஃகத குஞ்சர’’ என்று கவர் பொருள் படத் தருமர் கூறியது வாய்மையே என்று நிலை நாட்ட முயல்வர். ஆனால், தருமரின் கூற்று, வள்ளுவர் இலக்கணப்படி, வாய்மையாகாது. ஏனெனில், தருமரின் வாயுரை பாண்டவர்க்கு நன்மை விளைத்த போதிலும், துரோணருக்கும் அசுவத்தாமருக்கும் அது பெருந்தீமை பயந்தது. எனவே, தருமரின் மாற்றம் வாய்மையின் மாறுபட்டதாக முடிந்தது. இவ்வுண்மையை,

‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.’’

என்னும் குறட்பா தெளிவாக விளக்குகிறது. அஃதாவது, குற்றம் சிறிதும் கலவாத, எட்டுணையும், தீமை இல்லாத, நன்மை பயந்தால் மட்டுமே பொய்ம்மை ‘வாய்மை’ என்று கொள்ளத்தகும் என்பது வள்ளுவர் கருத்து.

  இவ்விரு அருங் குறட்பாக்கள் மூலம், உண்மையினும் உயர்ந்த வாய்மைக்கு இலக்கணங் கூறி, அதன் நல்லியல்பை வள்ளுவர் பெருந்தகை இனி விளக்கியிருக்கும் பெற்றி அறிஞரால் நினைத்து இன்புறற்பாலதாகும்.

– குறள்நெறி :  02.01.1995 / 15.01.64