(வள்ளுவர் சொல்லமுதம் 14: அ. க. நவநீத கிருட்டிணன்: நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை- தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்

அத்தியாயம் 10

பொருளும் அருளும்

உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண்டப்படும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது நம் பொய்யில் புலவரது பொன்னான மொழி.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றுள்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்

என்று நாலடியார் நவிலும். சீரிய வழியில் தேடிய செல்வம் படைத்தோர் சிறந்த அறத்தைச் செய்யலாம். உலகில் நிறைந்த இன்பத்தை அடைந்து மகிழலாம். இவை இரண்டும் அவர்க்கு எளியவாய் அமையும். இதனையே திருவள்ளுவர் பெருமானும்,

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு) எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு

என்று வலியுறுத்துவார். அறநெறியால் வரும் பொருளையே ஒண்பொருள் என்று குறிக்கின்றார், அறநெறியில் ஈட்டிய செல்வமே ஒருவற்கு இன்பத்தையும் புகழையும் எய்துவிக்கும். தீய வழியில் தேடிய செல்வம் பழியும் பாவமும் பயந்து வருந்துமாறு செய்யும். ஒருவன் தீய வினைகளைச் செய்து பிறர் வருந்துமாறு பெற்ற பொருள் எல்லாம் இப் பிறப்பிலேயே அவன் வருந்த அகன்று ஒழியும். தூய வழியில் வந்த செல்வத்தை முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பெரும் பயன் விளைக்கும். ‘அழக்கொண்ட எல்லாம் அழப் போம்’ என்பது வள்ளுவர் சொல்லமுதம். தீய நெறியால் தேடிய செல்வத்தை எத் துணைக் காவல் செய்து பேணினாலும் இருப்பதில்லை. அது பசுமட் கலத்துள் நீரைப் பெய்து காத்த செயலை ஒக்கும் என்பர் திருவள்ளுவர்.

அறநெறியில் ஈட்டிய செல்வமே ஒருவற்கு என்றும் நின்று இருமைக்கும் இன்பம் பயக்கும். ஆதலின் ஒருவன் பிறர்பால் காட்டும் அருளோடும், அவர் தன் பால் செய்யும் அன்போடும் கூடிவரும் செல்வமே சிறந்த செல்வம் என்பர் செந்நாப்போதார். பொருள் ஈட்டுதற்கு உரிய வழிகள் பல உள. உழவுத் தொழிலானும் பிற கைத்தொழில்களானும் வாணிகத்தானும் உத்தியோகத்தானும் பொருளைத் தேடலாம். ஆயினும் உழவுத் தொழிலால் பெறும் செல்வமே உயர்வுடையதாகும். உழவுக்கு மிகுதியான உடல் உழைப்புவேண்டும். ஆதலின் அதனால் வரும் மெய் வருத்தம் நோக்கி, மக்கள் பிற தொழில்களைச் செய்து திரிவர். எனினும் இறுதியில் உணவின் பொருட்டு அவ் உழவர்களேயே நாடுதல் வேண்டும். இக் கார ணத்தாலேயே “உழந்தும் உழவே தலை” ‘என்பர் தெய்வப் புலவர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் புவர்”

என்று உழவின் உயர்வை அழகுறப் பேசுவார்.

உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு

என்று தமிழ்மூதாட்டியார் வள்ளுவர் கருத்தையே மேலும் வற்புறுத்துவார். பொருள் தேடித் திரியும் மக்களைக் குறித்து அத் தமிழ்ச்செல்வியார் இரங்கிக் கூறும் மொழி நல் இதயத்தைத் தொடுவனவாகும். பாழான உடம்பைப் பாதுகாக்க நாள்தோறும் நாழி அரிசி வேண்டுமே! வயிற்றின் கொடுமையால் சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் வாழ்நாளை வீணாகப் போக்குகின்றனரே! என்று அவர் இரங்குவார். ஒருவன் கல்லா தவனாயினுங் கைப்பொருளைப் பெற்றவனான், அவனை எல்லாரும் சென்று எதிர்கொள்வார்கள். இல்லானை மணந்துகொண்ட இல்லாளும் விரும்புவதில்லை. ஈன்ற தாயும் வேண்டாள். அவன் வாய்ச் சொல்லும் செல்லாது என்று சொல்லுவார். இக் கருத்தையே வள்ளுவர் பெருமானும் மிகச் சுருங்கிய சொற்களால்.

இல்லாரை எல்லாரும் என்ஞவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

என்று தெளிவுற விளக்குவார். இல்லான் என்ற சொல், பொருள் இல்லாதவன், அறிவில்லாதவன் ஆகியோரைக் குறிக்கும். இல்லாள் என்ற சொல்லோ இல்லிற்கு உரிய நல்லாளை — மனைக்கு உரிய தலைவியாகிய மனைவியை அன்றோ குறிக்கும் . ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கத்தக்கவராகச் செய்யவல்லது செல்வமே. அது நந்தா விளக்குப்போல்வது. அதனைப் படைத்தவர்க்குப் பகை என்னும் இருள் மறைந்தொழியும். எல்லோரும் சுற்றமாவர்.

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவ
ர்” என்பர் சமண முனிவர். உலக வாழ்வுக்கு இன்றியமையாத செல்வம் நிலை பேறு உடையதன்று. நாடக அரங்கில் ஆடும் கூத் தினக் காண்பதற்கு மக்கட்குழாம் திரண்டு வருவது போன்றே ஒருவற்கு நல்வினை உளதாயின் செல்வம் வந்து சேரும். அவ் ஆகூழ் அவனைவிட்டு அகலு மாயின், அக்கூத்து முடிந்தவழிக் காண்போர்குழாம் விரைந்து நீங்குதல் போல நீங்கிப்போம் என்பர் வள்ளுவர். காலையில் தோன்றி மாலையில் மறையும் கதிரவனைப் போலச் செல்வம் ஒருவற்குத் தோன்றி மறையும் இயல்புடையது. செல்வம் என்று உறுவ தற்குச் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று என்று நவில்வார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்.

பொருட்செல்வமோ எண்ணற்ற பந்தங்களை இயைக்கும் ; தெய்வ சிந்தையை நீக்கும்;, உறக் கத்தை ஒழிக்கும்; பிறவிக் கடலுள் புகுத்தும்;. செருக்கு வந்து மூடிக் கொள்ளும். அச் செல்வச் செருக்கினால் வாயுள்ளார் ஊமை ஆவர். செவியுள் வார் செவிடர் ஆவர். கண்ணுள்ளார் குருடர் ஆவர். இத்தகைய இழிந்த பண்புகளை உண்டுபண்ணுவதால், புலவர்கள் செல்வத்தை வெறுக்கை என்ற பெயரால் குறித்தனர் என்பர் மகாவித்துவான் பிள்ளையவர்கள்.

செல்வத்தின் நிலையாமையை நாலடி நூலும் நன்கு விளக்கும். நூலின் தொடக்கத்திலேயே செல்வ நிலையாமையைத்தான் செப்புகிறது அந்நூல். இல்லாள் அண்மையில் அமர்ந்து அறுசுவை உணவை ஊட்ட, மறுசிகை நீக்கி உண்ட செல்வ மக்களும் வறிஞராய்ச் சென்று இரப்பர்.

அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால்போல வரும்.”

வண்டிச் சக்கரத்தைப் போன்று மாறிவரும் இயல்பு உடையது செல்வம். அதனை ஈட்டலும் துன்பம் ; காத்தலும் கடுந்துன்பம். அது குறைந்தாலும் மறைந் தாலும் பெருந்துன்பமே. துன்பத்திற்கே உறைவிடம் ஆவது அப்பொருள் என்று கூறுவர்.

ஆற்றில் கார்காலத்தில் வெள்ளம் பெருகி வருமாயின் பள்ளம் மேடாதலும், மேடு பள்ளமாதலும் இயல்பு. அதுபோன்றே செல்வமும் மாறும் இயல்பை உடையது. ஆதலின், மாநிலத்தீர் ஏழையர்க்குச் சோறிடும் தண்ணீர் வாரும் என்று தமிழ்ச் செல்வி யார் உலகினர்க்கு அறவுரை பகர்ந்தருளினார்.

“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று சொல்லி அருளிய வள்ளுவர் பெருமானே, “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்றும் அருளிச் செய்தார். வீட்டுலகம் அடையும் நாட்டமுடையார் எல்லாரும் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை அறத்திற்கு உதவுதல் வேண்டும். பிறர்க்கு உதவி செய்தார் பெருஞ் செல்வம் பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாக மாறும் என்று கூறுவர் சிவப்பிரகாசர். கடலில் நீர் பெருகி இருப்பினும் அது பிறர்க்குப் பயன்படுவதில்லை. புனல் சென்று அந்நீரை முகந்து நன்னீராக்கியே மக்கட்கு மழையாகப் பொழிந்து உதவுகிறது. அதுபோலவே கயவர் செல்வத்தை முரடர் பறித்துப் பலர்க்கும் பகுத்துக் கொடுப்பர்.

அறநூலோர் தொகுத்த நல்லறங்கள் அனைத் துள்ளும் பகுத்துண்ணும் அறமே தலையாயது என்பர் நம் பொய்யில் புலவர். பகுத்துண்டு பழகிய, நல்லோனை எந்காளும் பசிப்பிணி வருத்தாது என்று குறிப்பர். இவ் அறம் செய்ய எண்ணுவான், உள் ளத்தே இன்னருள் நிறைந்தவன் ஆவான். அவ் அருள் ஒருவற்கு எளிதில் அமைவதன்று. இயற்கை யில் அமையும் அரிய பண்பு என்பர் ஆன்றோர். ‘தயையும் கொடையும் பிறவிக் குணம்” என்று பேசுவர். இத்தகைய அருள் அன்பினின்று பிறப்பது. “அருளென்னும் அன்பீன் குழவி” என்பர்’வள்ளுவர்.

அன்புத்தாய் ஈன்ற அருங் குழவி ஆகிய அருள், பொருள் என்னும் செவிலியாலேயே இனிது வளர்க்கப் பெறும்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வக் செவிலியால் உண்டு

என்பது வள்ளுவர் சொல்லமுதம். செவிலி என்பவள்; வளர்ப்புத்தாய் ஆவள். பெற்ற தாயை நற்றாய் என்று கூறுவர். அருட்குழந்தையைக் காத்து வளர்க்கும் செவிலியும் செல்வச் செவிலியாக இருக்க வேண்டும் என்பர் நம், வள்ளுவர். அருள் நிறைந்த உள்ளத்தவனாக மட்டும் இருந்து யாது பயன்? அதனைச் செயல்முறையில் காட்டுதற்குப் பொருள் அன்றோ வேண்டும். இறக்கும் தறுவாயிலிருந்த கன்னன், “இல்லை என்று உரைப்போர்க்கு இல்ல்ைஎன்று உரையாத இதயம் அளித்தருள்” என்று கண்ணன்பால் வரம் வேண்டின்ை. கண்ணனோ மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு மனமலர் உகந்து இனிதருள் புரிந்தான். அவன், கன்னன் விரும்பிய கனிந்த இதயம் ஒன்றுமட்டும் வழங்கினானில்லை.

எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள்

ஈகையும் செல்வமும் எய்தி

முத்தியும் பெறுதி முடிவில்என்(று) உரைத்தான்

மூவரும் ஒருவனாம் மூர்த்தி

என்ற வில்லியின் சொல்லில் கண்ணபிரானுடைய கருணை உள்ளம் இனிது விளங்கக் காணலாம். ஈகை உள்ளம் இருந்து பயனில்லை. அவ் அறத்தை ஆற்று தற்குச் செல்வமும் வேண்டும் என்பதை நினைந்தருளிய கண்ணன், கன்னனுக்கு “ஈகையும் செல்வமும் எய்துக” என்று வரம் அளித்தருளினான்.

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்பர் அதிவீரராமர். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐம்புலத்தையும் செல்வர் ஓம்புதல் வேண்டும். தானும் துய்க்காது பிறர்க்கும் வழங்காது பொருளைப் புதைத்துவைத்து இழக்கும் புல்லர்களை என்னென்று சொல்லுவது? கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கு என்சொல்லு வேன்‘ என்று இரங்குவார் பட்டினத்தடிகள். பணம் இல்லாதவன் பிணம் என்பது பழமொழி. பணம் இருந்தும் மணம் பெற மகிழ்ந்து வாழாதவனும் பிண மென்றே பேசுவர் பெருநாவலர். மேலும் ஈயாத உலோபிக்கும் பேய்ப்பிறப்பே உளதாகும் என்பர். பொருளை ஈட்டுதலையே விரும்பி இசை வேண்டாத மக்களின் தோற்றம், மாநிலத்திற்குப் பெரும் பாரமே யாகும். பல்கோடிச் செல்வம் தேடி அடைந்தாலும் அருளால் பிறர்க்குக் கொடுப்பதும் தாம் துய்ப்பதும் இல்லார் வறியரென்றே அறிஞரால் எண்ணப் பெறுவர்.

பொருளைப் பெரிதும் தேடிய செல்வர்கள் அப் பொருளைக் காத்து வைக்கும் சிறந்த கருவூலம் வறிஞர்கள் வயிறே என்று இயம்புவர் வள்ளுவர். வறிஞரை வாட்டும் பசியை அகற்றுவது சிறந்த அறமாகும். பொருளை உணவாக மாற்றி அவர்தம் வயிறாகிய இருப்புப்பேழையில் சேமித்து வைத்தால் அப் பொருள் இப் பிறவியில் மட்டுமே அல்லாமல் எடுக்கும் பிறவிதோறும் உறுதுணையாய் வந்து உதவும்.

அருள் நிறைந்த செல்வ வள்ளல் நடுவூருள். பழுத்த நன்மரத்திற்கு ஒப்பிட்ட நாயனார் வறியார்க்கு உதவாத செல்வனை நடுவூருள் பழுத்த நச்சு மரத்திற்கு, ஒப்பிட்டு உரைப்பார். உண்டவர் உயிரைக் கொண்டு மாய்க்கும் நச்சுப்பழத்தை நல்கும் பெருமரம் ஊரின் நடுவே உயர்ந்தோங்கி வளர்ந்து யாது பயன்? அது கனிகள் பலவற்றைப் பெற்றும் பயன் என்ன? எவரும் அவற்றை விரும்பார் ! அருகிலும் செல்லார். அது போலவே உலோபியை எவரும் விரும்பமாட்டார்கள். ஆதலின் பெற்ற பொருளால் அருளைப் பேணி ஆருயிர்க்கு அன்பு செய்தல்வேண்டும். அதுவே. அருள் வடிவான பரம்பொருளைக் காணுதற்கும். அவனது அருளைப் பெறுதற்கும் உரிய வழியாகும்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்