– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்

 ஆற்ற விளைவது நாடு.

(குறள் 732)

 பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.

 நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள் பெற்றிருப்பது கண்டு அயல்நாட்டாரும் விரும்பி நட்புக் கொள்வர். நாட்டில்  மக்களுக்குத் துன்பம் தரும் கேடுகளும் உளவாதல் கூடாது. பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல் அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள்  அற்றிருக்க வேண்டும். இவையனைய கேடுகள் நாட்டின் விளைவைக் கெடுத்து மக்களை வறுமையில் ஆழ்த்தும். அருங்கேடு -அருமை+கேடு-கேடின்மை, ‘ஆல்’ மூன்றாம் வேற்றுமை உருபு கருவிப்பொருளில் வந்துள்ளது.

4.         கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா

 நாடுஎன்ப நாட்டின் தலை.

(குறள் 736)

வள்ளுவர் வகுத்த அரசியல் கேடு – அழிதலை, அறியா-அறியாததாய், கெட்ட இடத்தும் – அழிந்தபோதும், வளங்குன்றா – செல்வத்தில் குறையாத, நாடு – நாட்டினை, நாட்டில் – நாடுகளில், தலை என்ப – சிறந்தது என்று சொல்லுவார்கள்.

 மழை பெய்யாததனாலும், மழை மிகுதியாகப் பெய்வதாலும் நாடு அழிதல் உண்டு. பயிர்ப் பூச்சிகள், நோய்கள், காட்டு விலங்குகள் முதலியவற்றாலும் பயிர்கள் அழிவுற்று, செல்வம் குறைவுறும். மழை பெய்யாத போதும் வேண்டிய நீர்வளம் உடையதாக இருத்தல் வேண்டும். நீர் நிலைகளைப் பெருக்கி வைத்துக்கொள்ளுதல் வேண்டும். மழை மிகுதியாகப் பெய்யுமேல் வேண்டாத நீரைக் கடலிலும், பேரேரிகளிலும் விடுவதற்குரிய வழிகள் இருத்தல் வேண்டும். இயற்கையாலோ பகையரசர்களாலோ நாட்டுக்குக் கேடு வருமேல், அக் கேட்டை நீக்கி நாட்டை வளங்குன்றாது காத்தல் வேண்டும்.

எக்காலத்திலும் எல்லாவகையாலும் நாடு வளங்குன்றாது இருத்தல் வேண்டும். அந் நாட்டில்தான் மக்கள் துன்பமின்றி வாழ்தல்கூடும். அந் நாடே சிறந்தநாடு ஆகும்.

கேடு அறியாத நாடு, வளம் குன்றாத நாடு என்று கூட்டிக் கொள்ளுதல் வேண்டும். ‘அறியாத’ ‘குன்றாத’ என்னும் சொற்களில் உள்ள தகரங்கள் (‘த’) குறைந்து உள்ளன.

 

5.         உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

 சேராது இயல்வது நாடு.

(குறள் 734)

 உறுபசியும் -உறுகின்ற (இயற்கையாய் அடைகின்ற) பசியும், ஓவாப் பிணியும் – நீங்காத நோயும், செறுபகையும் அழிக்கின்ற பகையும் (பகைவரும்), சேராது – அடையாது, இயல்வது – நடப்பது, நாடு – நாடாகும்.

 மக்களுக்குப் பசி வேண்டியதுதான். ஆனால், அப் பசி உடனே நீங்கிவிடவேண்டும். குறித்த காலத்தில் தவறாது உண்ணும் நிலையில் உள்ளவர்கட்குப் பசி என்பதே தெரியாது என்று கூறலாம். அந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் இருத்தல் வேண்டும்.  பசியை ஒரு துன்பம் தரும் நோயாகக் கருதும் நிலையில் மக்கள் வருந்துதல் கூடாது.

  ஒழியா நோய், உணவுக் குறைவாலும் உண்டாகலாம்; உணவு மிகுதியாலும் உண்டாகலாம். பசி கூடாது என்னும்போது, ஓயாது உண்ணலாம் என்று கருதி அளவுக்கு மிகுந்து உண்டுவிடுதல் கூடாது என்பதை அறிவுறுத்தவே அடுத்தும் பிணி கூடாது என்று மொழிந்தார் போலும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வமாகும். ஆதலின், நாட்டு மக்கள் பிணியின்றி வாழ்தல் வேண்டும். ‘பகை’ என்பது, நாட்டு மக்களுக்குள்ளேயே சாதி, மதம், கட்சி காரணமாகப் பகை யுண்டாவதையும், வேற்று நாட்டார் பல காரணங்களால் பகை கொள்வதையும் குறிக்கும். அகப்பகை, புறப்பகை, இரண்டும் கூடாவாம். பகை தோன்று மேல் அழிவும் கூடவே வரும். ஆதலின், நாடு பகையற்று இருத்தல் வேண்டும்.

 

6.            பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்

  கொல்குறும்பும் இல்லது நாடு.

(குறள் 735)

 நாடு – நாடாவது, பல்குழுவும்- தன்னலம் காரணமாக, ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட பல சிறு சங்கங்களும், பாழ் செய்யும் – அழிவை உ ண்டாக்கும், உட்பகையும் – வெளிப்படத் தோன்றாது காத்திருந்து சமயம் வந்தவிடத்துக் கேட்டினைத் தரும் பகைமையும், வேந்து அலைக்கும் – அரசுபுரிவோரை வருத்தும், கொல்குறும்பும் கொலைத்தொழில் புரிவோரும், இல்லது – இல்லாததே.

 இன்று மக்களாட்சிமுறை நடைபெறுகின்றது. மக்களாட்சி வெற்றி பெறக் கொள்கை அடிப்படையில் கட்சிகள் அமைந்து நாட்டுக்குத் தொண்டாற்றுவதால் தீமையில்லை. ஒரு குறிப்பிட்ட கொள்கையில்லாது தலைமைக்காகக் கட்சிகள் அமைத்துக்கொண்டு தேர்தல் காலங்களில் தோன்றுகின்றனர் சிலர். இம்முறையால் நாட்டுநலன் கெடுகின்றதை நாம் அறிகின்றோம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டு கட்சிகளே இருத்தல் நல்லது. பல சிறு கட்சிகளாகச் சிதைந்து உருவானால் நாட்டில் நிலைத்த அமைதியான ஆட்சி ஏற்படாது. ஆகவே,  ‘பல்குழு’ நாட்டுக்கு நன்மை பயவாது என்று கூறினாரேயன்றி ஒரே கட்சிதான் இருத்தல் வேண்டுமென்று கூறினாரென்று கருதிவிடக் கூடாது.

 திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் கட்சி ஆட்சிமுறை இருந்திருக்க முடியாது. ஆயினும் பல குழுக்கள், மதம், கடவுள் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று அறியலாம்.

 ‘உட்பகை’ அன்றும் உண்டு;  இன்றும் உண்டு. அன்று வெளிப்படத் தோன்றாது சமயம் வந்துழித் தொல்லை கொடுத்து அரசைக் கவிழ்த்தது. இன்று நாட்டுமக்களுக்குள்ளேயே சாதி, மதம், கட்சி காரணமாகப் பகைமை வளர்ந்துகொண்டிருக்கின்றது. உட்பகை நாட்டை அயலார்க்கு அடிமைப் படுத்திவிடும். ஆகவே, மக்கள் பகைமையற்றுத் தோழமையோடு வாழுதல் வேண்டும்.

 ‘வேந்து அலைக்கும் கொல்குறும்பு’: அன்று தனியொருவன் முடிசூடி மன்னன் என்ற பெயரில் நாட்டை ஆண்டான். அவனுக்குத் தொல்லை கொடுத்தல் நாட்டின் அமைதிக்குத் தொல்லை கொடுத்ததாயிற்று. இன்று தனியொரு மன்னன் ஆளாதுபோயினும், ஆட்சி மக்கள் பேரால் நடைபெறுகின்றது. ‘வேந்து’ என்ற சொல் ஆகுபெயராய் ஆட்சிமுறையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆட்சிமுறையை மாற்றியமைக்க மக்கள் கட்சியமைத்துக்கொண்டு முயலலாம். ஆனால், தனிப்பட்ட சிலர் ஆட்சிக்குத் தொல்லை கொடுப்பதற்கு முயலுதல் கூடாது. நல்லாட்சி முறை நடைபெறாமல் மக்களை வதைப்போரைக் ‘கொல்குறும்பர்’ எனலாம். ‘குறும்பர்’ என்பது நெறிமுறையில்லாது மக்களை வருத்துவோரைக் குறிப்பிடும். குறும்பு+அர் = குறும்பர். ‘குறும்பு’ என்ற சொல்லே சில இடங்களில் ‘குசும்பு’ என்று வழங்குகின்றது; விளையாட்டு வகையில் செய்யும் சிறு தொல்லைகளைக் குறிக்கின்றது.

7.            ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம்   இன்றே

  வேந்துஅமைவு இல்லாத நாடு.

(குறள் 740)

வேந்து – நல்லாட்சி, அமைவு இல்லாத – பொருந்தி இராத, நாடு – நாடானது, ஆங்கு – நூல்களில் கூறியாங்கு, அமைவு எய்தியக்கண்ணும் – வளங்கள் எல்லாம் பொருந்துதல் அடைந்திருந்த பொழுதும், பயம்  இன்றே – பயன் இல்லையே.

  நாடு, எல்லா வளங்களும் பெற்றிருப்பினும் நல்லாட்சியில்லையேல் மக்கள் அப் பயன்களைத் துய்க்க (அனுபவிக்க) முடியாது. ஆதலின் நல்லாட்சியே நாட்டுக்கு இன்றியமையாதது. ‘வேந்து’ இங்கு ஆகுபெயரால் ஆட்சிமுறையைக் குறிக்கும்.

8.            பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

   இறைஒருங்கு நேர்வது நாடு.

(குறள் 733)

 பொறை-பாரம், ஒருங்கு-ஒருசேர (முழுவதும்), மேல் வருங்கால்-தன்னிடம் சேரும்போது, தாங்கி-சுமந்து, இறை – வரி, ஒருங்கு-முழுவதும், இறைவற்கு – அரசனுக்கு (அரசுக்கு) நேர்வது – விரும்பிக் கொடுப்பதே, நாடு -நாடாகும்.

  அயல்நாடுகளில் ஏற்படும் போர், கொடிய ஆட்சி முறை, உள்நாட்டுக் குழப்பம், பஞ்சம் முதலியன காரணமாக அந் நாடுகளிலிருந்து மக்கள் வந்தால், வந்தோரைப் பாதுகாக்கும் வளம் நிறையப் பெற்றிருக்க வேண்டும். தன் மக்கள் வேற்றுநாட்டு மக்கள் ஆகியோரைக் காப்பது அல்லாமல் ஆட்சிமுறை நடைபெறுவதற்கு வரிகளும் மனம் விரும்பிக் கொடுத்தல் வேண்டும். நாட்டின் செல்வம் சிறப்புற்றிருந்தால்தான் இந் நிலை கூடும். இன்று நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை நாம் அறிவோம். நம் நாட்டு மக்களுக்கே போதிய வளம் இன்று: அயல்நாட்டு மக்களை (அகதிகளை)ப் புரப்பது எங்ஙனம்? பட்டினிகிடந்து சாகும்போது வரிப்பொருளை மனம் விரும்பிக் கொடுப்பது எவ்வாறு? குறள் கூறும் குறிக்கோள் என்று நிறைவேறுமோ?

9.

பிணிஇன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இ(வ்) ஐந்து.

(குறள் 738)

 பிணிஇன்மை-நோய்இன்மை, செல்வம்-பொருள் கல்விச் செல்வங்கள், விளைவு-விளைதல், இன்பம் -இன்பம் நுகரும் வாய்ப்பு, ஏமம்-உரிமைப் பாதுகாவல், இ ஐந்து – இவ்வைந்தினையும், நாட்டிற்கு அணி என்ப-ஒரு நாட்டிற்கு அழகு என்று சொல்வார்கள்.

 ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென்பதை இக்குறட்பாவில் தொகுத்துரைத்திருக்கின்றார். நாட்டு மக்கள் நோயின்றி வாழ்தல் வேண்டும். மக்கள் வறுமையற்று வாழும் அளவுக்கேனும் செல்வம் நிறைந்திருக்க வேண்டும். வேண்டிய பொருள்கள் விளைவிக்கப்படத்தக்க வாய்ப்பு இருத்தல் வேண்டும். இவையெல்லாம் பெற்றும் இன்பவாழ்வு வாழ்வதற்குரிய சூழ்நிலை யில்லையானால் பயனின்று அன்றோ?  நோயற்றவராய் இருந்தும், வேண்டிய செல்வம், விளைவு முதலியவற்றைப் பெற்றும் இன்பமின்றி வாழும் மக்களைக் காண்கின்றோம் அல்லவா? ஆதலின், இன்பத்துடன் வாழும் இனிய சூழ்நிலை நாட்டில் நிலவ வேண்டும். இவையெல்லாம் பெற்றும் மக்கள் உரிமை பறிபோகுதல் கூடாது. வழிபடும் உரிமை, பேசும் உரிமை, எழுதும் உரிமை, எண்ணும் உரிமை, வாழும் உரிமை முதலியன பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுரிமைகள் பறிபோகாதவாறு பாதுகாவல் இருத்தல் வேண்டும்.

  ஒரு நாடு இன்ப நாடு அல்லது நல்நலநாடு (Welfare State) என்று கருதப்படவேண்டுமானால் இவ் வைந்தும் வேண்டும். ஒன்று குறையினும் இன்ப நாடு ஆகாது என்று அறிதல் வேண்டும்.

10.          இருபுனலும், வாய்ந்த மலையும், வருபுனலும்

  வல்லரணும், நாட்டிற்கு உறுப்பு.

(குறள் 737)

 இருபுனலும் – கடலும், வாய்ந்த – எல்லைகளாகப் பொருந்தியுள்ள, மலையும் – மலைத்தொடரும்,வருபுனலும் – மலைகளிலிருந்து ஓடிவரும் ஆறுகளும், வல்அரணும்-செயற்கையாக அமைத்துக் கொள்ளப்பட்டுள்ள, மதில் சுவர், காடு, படை அமைப்புகள் முதலியன பொருந்திய பாதுகாவலும், நாட்டிற்கு உறுப்பு -நாட்டிற்கு வேண்டிய பகுதிகளாம்.

 

  தனித்தனி நாடுகள் இருக்கும்வரை, ஒரு நாடு இன்னொரு நாட்டை அடிமைப்படுத்தும் சூழ்நிலையும் அவ்வப்போது உண்டாகலாம். வேற்று நாட்டுத் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள இயற்கையாய் அமைந்துள்ள கடல், மலை, காடு முதலியன பெருந்துணைபுரியும். ஆறுகள் அரணாவது நாட்டு எல்லைகளாக அமைந்து பகைவர்கள் கடத்தற்கு அரியனவாக இருத்தலால் மட்டுமன்று. வற்றாத நீரோட்டம் உடையதாக மாரி வறப்பினும் தான் பொய்யாததாக இருந்து, வேண்டும். விளைவுப் பொருள்களை உண்டுபண்ணிக் கொள்ள உதவி, உணவுக்கும் பிறவற்றிற்கும் வேற்றுநாட்டை எதிர்பார்த்திராமல் வாழச் செய்வதாலும் அரணாகும். ‘இருபுனல்’ என்பதற்குப் பரிமேலழகர் கீழ்நீர், மேல்நீர் என்று பொருள் கூறியுள்ளார். ‘கீழ்நீர்’ என்றால் ஊற்று நீரையும், ‘மேல்நீர்’ என்றால் மழை நீரையும் குறிப்பிட்டுள்ளார் போலும். இவ்விதம் கூறுவதைவிட இருபுனல் – பெரும்நீர், அஃதாவது கடல் என்று கூறுவது மிகப் பொருத்தமன்றோ?

 

 (தொடரும்)