வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
ஈ. படைச்செருக்கு
படைச் செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி.
1.
என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர் (குறள் 771)
[என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.]
தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து, கல்லின்கண் நின்ற வீரர், பலர்-பலராவார், ஆதலின், என்ஐமுன்-என் தலைவன் முன், நில்லன்மின்-போரேற்று நிற்றலை ஒழிமின்.
இப் பாட்டில் வீரன் ஒருவன் தன் வீரத்தைத் தன் தலைவன்மேல் வைத்துக் கூறுகின்றான். ஐ=தலைமை:
இச் சொல்லிலிருந்துதான் ‘ஐயர்’ என்ற சொல் பிறந்துள்ளது. ‘ஐயர்’ தலைவர். இன்று தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் பட்டப் பெயராக வழங்குகின்றது.
கல்நிற்றல்: போர்க்களத்தில் போர்புரிந்து மடிந்த வீரனைப்பற்றிக் கல்லில் எழுதி அதனை நட்டு வழிபடல் பண்டைக் காலத்திலிருந்ததொரு பழக்கமாகும். ‘வீரன் கல் நின்றான்’ என்றால் கல்லின்கண் பொறிக்கப்பட்டு வழிபடும் நிலையை அடைந்துவிட்டான் என்பதாகும். இக் கல் பின்னர்க் கடவுள் அடையாள உருவமாக வழிபடும் நிலையை அடைந்தது; கோவில் முதலியன கட்டினார்கள்.
கல்லில் நிறுத்தி வழிபடும் வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகின்றது. யாரேனும் இறந்தால் பதினைந்தாம் நாளிரவில் கல்நிறுத்துதல் என்றுகொண்டாடப் படுவதுதான் அது. ‘காடாத்து’ என்று கூறுவது, ‘காடு ஏற்று’ ஆகும். இஃதாவது சுடுகாட்டின் கண்வழிபடுதல் என்று பொருள்.
வீரன் இறந்தால் பெயரும் பெருமையும் எழுதி கல் நட்டார்கள். பின்னர் யாவர்க்கும் கல் நடத் தொடங்கி விட்டார்கள்.
2.
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது (குறள் 772).
[கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.]
கானமுயல் – காட்டில் வாழும் முயலை, எய்த – குறி தவறாமல் கொன்ற, அம்பினில்- அம்பைத் தாங்குவதைவிட, யானை பிழைத்த – யானைமீது எய்து குறி தவறிய, வேல்ஏந்தல்- வேலைத் தாங்குதல், இனிது – நல்லது.
முயல்வேட்டையும் யானைவேட்டையும் பண்டு உண்டு. முயல்வேட்டைக்கு அம்பும், யானைவேட்டைக்கு வேலும் பயன்பட்டன. முயல்வேட்டைக்குச் சென்று முயல்களைக் கொன்று மகிழ்வதைவிட யானை வேட்டையில் யானைமீது வீசிய வேல் தவறினாலும் யானை வேட்டையால் வரும் மகிழ்ச்சியே சிறந்தது. அது போல, வீரமில்லாப் பலரை வெல்வதைவிட வீரமுடைய ஒருவனை வெல்ல முயன்று தவறினாலும் சிறப்புடைத்து என்று விளக்குகின்றார்.
இதனால், படை வீரரல்லாப் பிறர் அறிய வேண்டியது செயற்கு எளியன செய்து வெற்றி பெறுதலைவிட, செயற்கு அரியன செய்து தோல்வியுறுதல் சிறந்தது என்பதாம்.
3.
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றுக்கா
லூராண்மை மற்றத னெஃகு (குறள் 773).
[பேராண்மை என்ப தறுகண்; ஒன்று உற்றக்கால்
ஊர்ஆண்மை மற்றதன் எஃகு.]
தறுகண் – பகைவரிடம் இரக்கம் காட்டாது பொரும்(சண்டையிடும்) வீரத்தை, பேராண்மை – பெரிய வீரம், என்ப-என்று சொல்லுவர், ஒன்று உற்றக்கால் – பகைவர்க்குப் போர்க்களத்தில் ஒரு குறைவு ஏற்பட்டால், ஊராண்மை (அக் குறைவை நீக்கிக் கொள்ளும் பொருட்டு) உதவி செய்தல், அதன் எஃகு (என்ப)- அதற்குக் கூர்மை (சிறப்பு) என்று சொல்லுவர்.
போர்க்களத்தில் பகைவரொடு போர் புரியுங்கால், இரக்கத்திற்கு இடமில்லைதான். ஆனால், பகைவர், போர்க் கருவி யிழந்தோ ஊர்தியிழந்தோ தம்மொடு சமத்துவ நிலையில் இல்லாதபோது, இரக்கம் காண்பித்துத் தம்மைச் சரிசெய்துகொண்டு வருமாறு விடுதல்தான் உண்மையான வீரமாகும். இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட பகைவரை வெல்லுதல் வீரமன்று.
ஒத்த கருவி இல்லாதாரோடு போர்புரிதலை வீரமென்று கருதினாரிலர். வாள் வைத்துள்ளவன் பகைவனிடம் வாளிருந்தால்தான் வாளால் போர் செய்யவேண்டும். இல்லையேல் தன் கைவாளைக் கீழே போட்டுவிட்டுப் பகைவனைப்போல் வெறுங்கையோடுதான் போர் செய்தல் வேண்டும். இதுவே, வள்ளுவர் விரும்பும் போரியல் நெறி; பண்டைத் தமிழ்வீரர் போற்றி வந்தவழி.
4.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் (குறள் 774).
[கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.]
கைவேல் – தன் கையின்கண்ணுள்ள வேலை, களிற்றொடு – தன்மீது பொரவந்த யானை வீரனின் யானைமீது, போக்கி – செலுத்தி, வருபவன்-பின் யானைமீது வீச வேலைத் தேடி வருபவன், மெய்வேல்-தன் மார்பின்கண் பாய்ந்துள்ள வேலைக் கண்டு, பறியா-பறித்து, நகும் – மகிழும்.
யானை வீரன் ஒருவன், யானை வீரனோடு போர் செய்யுங்கால், நிகழ்ந்ததைப் போன்று வீரன் மறம் விளக்கப்படுகின்றது. யானைப்போர் செய்கின்றவன் தன்மீது வேல் பாய்ந்ததையும் அறியாமல் இருக்கின்றமையும், தன்மீது பாய்ந்துள்ள வேலே தனக்குக் கருவியாகப் பயன்படுகிறது என்பதையறிந்து மகிழ்கின்றமையும் அவன் வீரத்தைப் புலப்படுத்துகின்றன.
வெறும் யானையோடு போர் புரிந்தான் என்பது அவ்வளவு சிறப்புடைத்தன்று.
5.
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு (குறள் 775).
[விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.]
விழித்தகண் – பகைவரைச் சினந்து பார்த்த கண், வேல் கொண்டு எறிய – அவர் வேலைக்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் – அதனால் அஞ்சிப் பார்த்த கண்ணை மூடித்திறப்பின், வன்கணவர்க்கு – வீரர்க்கு, ஒட்டு அன்றோ-புறங்கொடுத்து ஒடுதல் அல்லவா?
வீரன் பகைவனைச் சினந்து நோக்குகின்றான். பகைவன் வேலை எறிகின்றான்; எறிந்த வேலைக் கண்டு கண்ணை மூடித் திறந்தாலும் வீரனுக்குத் தோல்விதான் என்கின்றார். அஞ்சாத் தன்மையுடைய வீரன் விழித்தகண் கொட்டாது வேலெறிதலையும் நோக்குதல் வேண்டும்.
6.
விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து (குறள் 776).
[விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.]
தன்நாளை – தனது கழிந்த நாள்களை, எடுத்து – நோக்கி எண்ணி, விழுப்புண் – போரின்கண் சிறந்த புண்களை, படாத நாள் எல்லாம்-பொருந்தாத நாள்களை எல்லாம் வழுக்கினுள்-பயன்படாது கழிந்த நாள்களுள், வைக்கும் – வைப்பான்.
வீரனுக்கழகு மேலெலாம் (முகத்திலும் மார்பிலும்) விழுப்புண் பெறுதல். வீரனுடைய தழும்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு உரைக்கும். போர் புரிந்துகொண்டிருக்கும் நாளே பிறந்தநாள் என்றும், போர்புரியாது கழிந்த நாள் பிறவா நாள் என்றும் கருதுகின்றவனே சிறந்த வீரன். பயன்படாத நாள் பிறந்தும் பிறவாமை போன்றதுதானே.
முகத்திலும் மார்பிலும் பட்ட புண்ணே விழுப்புண் என்பது, எதிர்த்து நிற்கும்போது புண்படும் இடங்கள் அவையாதலின்.
7.
சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து குறள் 777).
[சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.]
சுழலும் இசை-வையகத்தைச் சூழ்ந்து நிற்கும் புகழை, வேண்டி-விரும்பி, வேண்டா உயிரார் – உயிர்வாழ்தலை விரும்பாதார், கழல் யாப்பு – கழலைக் காலில் அணிந்து கொள்ளுதல், காரிகை நீர்த்து – அழகிய தன்மையை உடையது.
வீரர் போரினைச் செய்து நாட்டுக்காகத் தம் உயிரை விடுவரேல், அவர் புகழ் என்றும் அழியாது நிற்கும். புகழார்வம் காரணமாக உயிரைவிடத் துணிகின்றவர் உண்மையான வீரர். அவர் காலில் வீரர் என்பதற்கு அடையாளமாக அணிந்துகொள்ளும் கழல் அவர்க்கு உண்மையான அழகைத் தரும். வீரமில்லார் அணியும் வீரக்கழல் அழகுடைத்தன்று.
கழல் = வீரர் அணியும் கால் அணி.
8.
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர்குன்ற லிலர் (குறள் 778).
[உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.]
உறின்-போர்வரின், உயிர் அஞ்சா-தம் உயிரை இழக்க நேரிடுமே என்று அஞ்சாது (போரில்) ஈடுபடும், மறவர் -வீரர், இறைவன் – தம் அரசன், செறினும் – போர் செய்யச் செல்லுதலை வேண்டாவென்று தடுப்பினும், சீர்குன்றல்-அவ் வீரமிகுதி – குறைதல், இலர் – இல்லாதவர் ஆவார்.
பண்டைத்தமிழ் வீரர்கள் ‘போர்’ ‘போர்’ என்று போரை நாடி நிற்பார்களாம். அவ்விதம் நிற்போர் போர் வந்துவிட்டது என்றால் உடனே போர்க்களம் புகமுனைவர். சில காரணங்களை முன்னிட்டுப் போர் செய்யச் செல்வதில் சிறிது காலத்தாழ்வு செய்தாலும், வீரர் வீரமிகுதி குன்றாது ஆவலோடு விரைவர். இதனால், போரெனில் அஞ்சிப் பல பொய்க்காரணம் காட்டி விடுமுறை பெற்றுக்கொள்ளும் இக்கால வீரர் சிலரைப் போன்றவரல்லர் பண்டை வீரர், வள்ளுவர் விரும்பும் வீரர் என்று அறியலாம்.
9.
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர் (குறள் 779).
[இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.]
இழைத்தது – தாம் கூறிக்கொண்டது (வஞ்சினம்), இகவாமை – தப்பாமல் இருக்க, சாவாரை – சாவவல்ல வீரரை, பிழைத்தது – அது தப்பியது (சொல்லி), ஒறுக்கிற்பவர் – தண்டிப்பவர் (இகழ்பவர்), யார் – யாருளர்.
வஞ்சினம், இன்னது செய்யாவிட்டால், இன்னபடி யாவேன் என்று உறுதி செய்துகொள்வது. வஞ்சினம் கூறிய வீரன், வஞ்சினம் நிறைவேறுவதற்கு முன் அதன் பொருட்டு உயிரைவிட்டாலும் இழுக்கின்று. வஞ்சி னத்தை நிறைவேற்றாமல் இறந்துவிட்டானே என்று யாரும் இகழமாட்டார்கள்; தண்டிக்கமாட்டார்கள். இறந்த பின்னர்த் தண்டிப்பது என்பது கூடாமையின், ஒறுத்தல் என்பதற்கு இகழ்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.
10.
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகி்ற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து (குறள் 780).
[புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.]
புரந்தார்-போர் செய்யவேண்டு மென்பதற்காக வைத்துப் பாதுகாத்தார், கண்-கண்கள், நீர்மல்க-நீர்பெருக, சாகிற்பின் போரின்கண் செத்தால், சாக்காடு-அச் சாவு இரந்து – வேண்டி, கோள்தக்கது உடைத்து-கொள்ளும் தகுதியை உடையது.
பிறந்தவர் இறப்பது உறுதி. நோயால் வீட்டில் இறப்பதால் பயன் என்ன? நாட்டுக்காகப் போர்க்களத்தில் உயிரை விட்டால், நாட்டுத் தலைவர் இறந்த வீரரை நினைத்து வருந்துவர். அவ்விதம் வருந்தும் ஒன்றே வீரர்கட்குப் பெரும்பேறாம்.
(தொடரும்)
பயனுள்ள தகவலுக்கு நன்றி.