(பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014   இதழின்  தொடர்ச்சி)

  Thirukural04

இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம்.

நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும் (298)

  வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை உருவகமாகப் பயன்படுத்துகிறார். இவ்வாறு தோன்றும் இரண்டொரு காட்சிகளை இங்குக் காண்போம்.

  விருந்தினனாய்த் தன் இருப்பிடத்திற்கு வந்து உண்டு உறங்கிய அரசனை நள்ளிரவில் மாக்பெத்து வாளால் குத்திக் கொன்றுவிடுகிறான். அரசைப் பெறவேண்டுமென்ற ஆசையும். தீமையே உருக்கொண்ட அவனது மனைவியின் ஆர்வமும் மாக்பெத்தைக் கொலைகாரனாக்குகின்றன. இக்கொடுஞ் செயலுக்குப் பின் அவன் கையில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அதைக் கண்டவுடன் மனம் துணுக்குற்று, தனது தீய செயலின் தன்மையை எடுத்துரைக்கிறான். அப்போது அவன் ‘‘மாபெரும் கடல்களில் நீர் அனைத்தும் கையில் படிந்துள்ள இவ்விரத்தத்தை அறவே கழுவிநீக்கப் பயன்படுமோ?’’ என்று சொல்லித் தன்னை நொந்து கொள்கிறான். அவனது மனைவியோ ‘‘இச்செயலின் அடையாளத்தைக் கழுவ கொஞ்சம் தண்ணீரே தேவை! எவ்வளவு எளிது?’’ என்கிறாள். வாய்மை அழிவதால் எழும் உள்ளத்து மாசை அவ்வளவு எளிதாகக் கழுவ முடியுமா? பின்னர் அவள் நோயிலாழ்ந்து, தன்வயமிழந்து, இரவில் தூக்கமின்றி நடந்து செல்கிறாள். அப்போது கைகளை நீரால் கழுவுவதுபோல் மீண்டும் மீண்டும் தோற்றம் செய்கிறாள்! ‘‘அழிக்கும் இரத்தக்கறையே, அழிந்துபோ! மறைந்து போ… என்ன?… இக்கைகள் ஒருபோதும் தூய்மையாக இராவோ? கையைக் கழுவு!’’ என்றெல்லாம் பிதற்றுகிறாள். வாய்மையில்லாது, வஞ்சனையாக அன்பு கொண்டது போல் நடித்து, கொலைச் செயல் புரியத் தூண்டிய மாக்பெத்தின் மனைவி தனது அகத்தில் தோன்றிய மாசைக் கழுவி நீக்க வல்ல நீரைத் தேடுகிறாள்! உடலோடு ஒட்டிய அழுக்கை நீக்கும் நீர் உள்ளத்தில் ஊறியமாசையும் எளிதில் கழுவும் என்றவள் நினைத்தது பொய்யாகிறது. எல்லாம் வாய்மையின்மையால் வந்த தீப்பயன்! இவ்வாறு திருவள்ளுவரிடம் காணப்படும் நீர் தூய்மை உருவகம் சேக்சுபியர் உள்ளத்தில் நாடக உருக்கொள்கிறது.

  ஊரார் நீருண்ணும் குளத்துநீர் ஒப்புரவின் உருவகமாகிறது. ஆயினும் குளம் கரையில்லாது போயின், அது நிறைந்தும் பயனில்லை. அப்போது நீர் தீங்கின் அடையாளமாகிறது. இப்பொருள் பாதுகாக்கும் சுற்றத்தார் இல்லாதவனின் துன்ப வாழ்க்கைக்கு உருவகமாகிறது.

 தோண்டிய அளவிற்கு நீர்ஊறும் மணற்கேணி கற்ற அளவு ஊறும் நல்லறிவிற்கு அடையாளமாக நிற்கிறது. இங்கு இறைப்பதால் ஊறும் நீர் கற்பதால் எழும் அறிவிற்கு உருவகமாகிறது.

  இவ்வாறே இறைக்க, இறைக்க மிகும் ஊற்று நீர் மறைத்தாலும் தானே கட்டுமீறி வளரும் காம நோய்க்கும் உருவகமாகிறது. கல்வியறிவின் ஆழத்தையும், காமத்தின் மிகுதியையும் எடுத்துக் காட்ட நீர் உருவகம் பயன்படுகிறது. காமம் பெருகுங்கால் கடும்புனலாக மாறுகிறது. இரவில் தனியேயிருக்கும் தலைவி இவ்வெள்ளத்தில் நீந்திக் கரைசேர முடியாது தவிக்கிறாள். இவ்வாறு, கரை சுற்றத்தாரின் ஆதரவிற்கும், தலைவனின் அன்பிற்கும் உருவகமாகிறது. கரைபுரண்ட வெள்ளம் தீங்கின் வடிவாகிறது. இக்கரையற்ற கடும் புனலில் சிக்கிய தலைவியின் கண்களும் வெள்ளமாகிய கண்ணீரில் நீந்தி வருந்துகின்றன! மனமோ கணத்தில் கரைசேர்ந்து காதலரோடு உறவாடுகிறது! இவ்வாறு வெள்ளம் தீமைக்கும், கரை காப்பிற்கும் உருவகங்களாகின்றன. பயிர் நீரால் செழிக்கிறது. இப்பொருள் அன்னையின் கடுஞ்சொல்லால் வளரும் காமநோய்க்கு உருவகமாகிறது. இங்கு நீர் செழுமையின் சின்னமாகிறது. நீர் ஊடல் உருவகத்தை முன்னர்க் கண்டோம் (1323).  அன்புடைய தலைவனிடம் ஊடல் இனிது; அன்பற்றவரிடம் ஊடுதலால் பயனில்லை. இதை எண்ணிப்பார்த்த திருவள்ளுவர், நீரின் தன்மையை மீண்டும் நினைவுறுத்துகிறார். வெள்ளமாக நீர் பெருக்கெடுக்கையில் அதில் பாய்ந்து நீந்திக் கரைசேர வெண்ணுதல் வீணானது. இது தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதற்கு ஒப்பான வீண் செயல். அன்பில்லாத தலைவனிடம் ஊடல் செய்தலின் பயனற்ற தன்மையைக் குறிக்க இவ்வாறு வெள்ளம் ஊடல் உருவகம் பயன்படுகிறது. கட்டுக்கடங்காது, தன் விருப்பப் படி எல்லாவற்றையும் இழுத்துச் செல்லும் இயல்புடையது வெள்ளம். மற்றெல்லா உணர்ச்சிகளையும் அழித்து, உடலையும் உள்ளத்தையும் வருத்தி அலைக்கழிக்கும் காமமும், பிரிவால் எழும் கண்ணீரும் (விரைவாலும் மிகுதியாலும்) வெள்ளமெனப் படுகின்றன. காமக்கடும்புனல் என்ற தொடர் இரு குறட்பாக்களில் தோன்றுகிறது.

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை (1134)

காமக் கடும்புனல் நீந்திக்கரை காணேன்

யாமத்தும் யானே உளேன் (1167)

முதற்பாட்டில், காம வெள்ளத்தில் வீழ்ந்த தலைவன் தனது துன்பத்தை எடுத்துரைக்கிறான். நாணமும் நல்லாண்மையும் இங்கு தோணிகளாகச் சொல்லப்படுகின்றன. அத்தோணிகளைக் காமவெள்ளம் இழுத்துச் செற்றுவிட்டதால், காதலன் துன்பவயப்படுகிறான். இதுபோலவே இரண்டாவது பாட்டில் காமவெள்ளத்தில் சிக்கிய தலைவி துன்புறுகிறாள். இரவில் தனிமையில் வருந்தும் அவள் காமவெள்ளத்தை நீந்த வகையறியாது வருந்துகிறாள். இவ்விரு பாடல்களிலும், ‘வெள்ளம் – காமம்’ ‘தோணி – துணை’, ‘கரை – இன்பம்’ உருவகங்கள் இணைகின்றன. கரை காப்பின் வடிவாதலால், கரை புரண்ட வெள்ளம் தீங்கின் வடிவாகிறது. வெள்ளத்தைக் கடக்க உதவும் தோணியும் காப்பின் சின்னமாகிறது.

(தொடரும்)

குறள்நெறி : பங்குனி 2, தி.பி.1995 / 15.03.64