திருக்குறளில் உருவகம் 4 – பேராசிரியர் வீ.ஒப்பிலி
(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)
இப்பொருள் அரசனின் செங்கோலைக் குடிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கி வாழ்தலின் உருவகமாகிறது. இம்முறையில் ஆராய்ந்தால், அரசர்க்கரசனான இறைவனின் கருணையே மழையாக மண்மீது பொழிகிறது எனலாம். அரசன் முறைதவறி கொடுங்கோலாட்சி செய்வானகில், வானம் பெய்யாது என்கிறார் வள்ளுவர். கருணை வடிவான மழையும் இங்குத் தன்னிலை மாறிவிடுகிறது. ஒப்புரவின் உருவாயமைந்த மழை கொடுங்கோன்மையால் பெய்யாதுபோகிறது. அரசனது அருள் குன்றியழிந்தால் இறைவனின் கருணையும் குறைவதாக உட்பொருள் தோன்றுகிறது. இவ்வாறே உலகில் நன்மை குன்றுமாயின், நன்மையே உருவான மேகம், வெறுமையுற்றதாகக் காண்கிறார் வள்ளுவர். வறண்ட மேகம் சீருடைய செல்வர் உற்ற வறுமைக்கு உருவகமாகிறது.
பெய்யாது போனால் மழை அழிவின் அடையாளமாகிறது; காலத்தே பெய்யுங்கால், இது கெட்டார்க்குத் துணையாய் நின்று காக்கும் சின்னமாகிறது. இவ்வாறு மழை இறைத்தன்மை கொண்டு இந்நிலத்தின் உயிரியக்கத்திற்கு உறுதுணையாக விளங்குகிறது.
மழை – மனைவி :- இனி, திருவள்ளுவர் எடுத்துக் காட்டிய மழையின் குண நலன்களை மனத்திற் கொண்டு பின்வரும் குறளை உருவக முறையில் ஆராய்ந்து பார்ப்போம்.
தெய்வந் தொழாள் கொழுநன் தொழுதொழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)
கற்புள்ள மனைவியின் மாண்பை எடுத்துக் காட்ட, செயற்கரிய செயலைக் கூற விரும்புகிறார் கவிஞர். செயற்கரிய செயல்புரிந்த கற்புள்ள பெண்டிரின் புராணங்களும் பல உள்ளன. கதிரவனை எழாது மறைந்த நளாயினியையும், இயமனையும் வென்ற சாவித்திரியையும், முக்கடவுளரையும் சிறுகுழந்தைகளாக்கிய அனசூயையும் திருவள்ளுவர் அறிந்திருக்கமாட்டாரா? இருப்பினும் இக்குறளில் கற்பின் சிறப்பைக் காட்ட வேறு ‘புராணம்’ புனைகிறார்(Myth-making power) கவிஞர். கணவனைத் தெய்வமாகப் போற்றும் மனைவியை எண்ணிய கவிஞர் மழையை எண்ணுவதேன்?
வையத்துள் வாழ்வாங்கு வாழும் கணவன் வானுறைத் தெய்வமாகிறான். வாழ்க்கைத்துணை எனப்படும் இல்லாள் அவ்வாறே கணவனைத் தெய்வமாகப் போற்றுகிறாள். தெய்வம் என்ற சொல்லை இக்குறளில் பயன்படுத்திய வள்ளுவர், வானோர் உலகையும், அவர்தம் உணவான அமிழ்தத்தையும் பின் உலகிற்கு அமிழ்தமெனப்படும் மழையையும் நினைத்துப் பார்த்திருப்பார். மேலும் பருவத்தே பெய்யும் மழையின் குண நலன்கள் யாவும் கணவனையே தெய்வமெனத் தொழும் மனைவியின் குண நலன்களை ஒத்திருப்பதைக் காணலாம். பண்புள்ள மனைவி, உணவாகி உணவாக்குகிறாள்; பசி தீர்க்கிறாள்; குடும்பத்தைக் காக்கிறாள்; கணவனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக நிற்கிறாள். அவனிடமிருந்து பயனை எதிர்பாராது குறிப்பறிந்து சேவை செய்கிறாள். அவள் நற்பண்பு இழந்தால், மேகம் வறண்டது போல், குடிகெட்டு அழிந்து விடும் என்ற பொருளும் தோன்றுகிறது. இவ்வாறு இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்புகளையுடைய மனைவி கவிஞருக்கு காலத்தே பெய்யும் மழையை நினைவுறுத்தியிருக்க வேண்டும். ‘‘தெய்வம்’’ – ‘’மழை’’- ‘‘மனைவி’’ இம்மூன்றும் உருவக முறையில் இணைந்து தோன்றுகின்றன. வானோரும், வானோருலகும், அவர்தம் அமிழ்தமும் வானின்று வீழும் அமிழ்தமாம் மழையும் ஒருங்கே சேர்ந்து திருவள்ளுவர் மனத்தில் இக்குறளை எழுதுங்கால் தோன்றியிருத்தல் வேண்டும். இக்காரணத்தால்தான் பண்புள்ள மனைவியும் தெய்வத்தோடு இணைந்து ‘‘புத்தேளிர் வாழும்’’ உலகில் சிறப்பிக்கப்படுகிறாள்.’
பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (58)
மேலும், உயிர் வாழும்போதும் அவள் தெய்வத் தன்மை பெற்று, தானே இயற்கையாகக் கொட்டும் கருணைவடிவான மழையையும், தன் அருள் மிக்க ஆட்சிக்குள் அடக்கியாளும் தன்மையைப் பெறுகிறாள். கருணை வடிவான மழையும், இறை மாட்சி கொண்ட கற்புள்ள மனையாளின் அருள்நோக்கி வாழ்வதாக மழை – மனைவி உருவகம் அருமையாக எடுத்தாளப்படுகிறது.
நீர் :– இனி இக்குறளுடன் கற்பியலில் காணப்படும் பின் வரும் குறளையும் உருவக முறையில் ஆராய்ந்து ஒப்பிடலாம்.
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. (1323)
கற்புநலம் மிகுந்த தலைவியின் ஊடலின்பத்தை எடுத்துச் சொல்ல எண்ணிய கவிஞர் தேவருலகத்தை எண்ணிப் பார்க்கிறார். வானோர் உணவான அமிழ்தம்போன்ற மழை பூமியில் பெய்யுங்கால், நிலமும் நீரும் பொருந்திக் கலக்குங்கால், அது வானோர் உலகைவிடச் சிறந்து விளங்குகிறது. பிரிக்கவியலாது பொருந்திய நீரும் நிலமும் உடலால் வேறுபட்டும் உள்ளத்தால் ஒன்றிய காதலனின் அன்பிற்கு உருவகமாகிறது. இத்துணை அன்புடைய காதலன் கணவராயின், அவன் ‘வாழ்வாங்கு வாழும்’ தெய்வத்தன்மை பெறுகிறான்; அவன் வாழும் உலகமும் மற்றொரு சிறந்த தேவருலகம். அவனைத் தொழும் அடியாளான கற்புள்ள மனைவியும் தெய்வத்தன்மையுடையவள். அவள் பெய்யெனப் பெய்யுமல்லவா மழை? அமரர் உணவான அமிழ்தம் இறைவனது கைம்மாறு வேண்டாத கருணையால் பூமியின் மேல் மழையாகக் கொட்டுகிறது. அதில் மூழ்கிய உலகம் அமரர் உலகைவிடச் சிறந்து விடுகிறது. அங்குவாழும் கற்புடைய நல்லாளும் அமரரின் ஆற்றலோடு ஒளிர்கிறாள்.
இதுகாறும் மழையைப் பற்றிக் கூறியவற்றால் நாம் திருவள்ளுவரின் எண்ணப்போக்கை உருவகங்கள் துணை கொண்டு பின்வருமாறு தொகுத்துகூறலாம். கருணைக்கும், கைம்மாறு வேண்டா அருளுக்கும் அடையாளமான மழை, அமரர் உலகிலிருந்து மண்மீது கொட்டும் அமிழ்தமாகி, நிலத்தொடு பொருந்தி, அன்பு வெள்ளம் பெருக்கி, அன்பு கொண்ட காதலரை இணைத்து வாழச் செய்து, அவர்கள் வாழும் நிலத்தை வானுலகைவிடச் சிறப்புறச் செய்து, இல் வாழ்க்கையையும் நிலை பெறச் செய்கிறது.
(தொடரும்).
– குறள்நெறி : மாசி 18, தி.ஆ. 1995 / 01.03.1964
Leave a Reply