திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்
(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி)
01 அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல்
பிறரது நல்உதவிகளை மறவாமல்,
நன்றியராய் இருத்தலை அறிதல்.
- செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும்,
வானகமும், ஆற்றல் அரிது.
தான்செய்யாப் போதும், பிறர்செய்
உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா.
- காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது.
காலத்தே செய்த நல்உதவி,
சிறி[து]எனினும், உலகினும் பெரிது.
- பயன்தூக்கார் செய்த உதவி, நயன்தூக்கின்,
நன்மை, கடலின் பெரிது.
பயன்கருதார் செய்த உதவியின்
நன்மை, கடலினும் பெரிது.
- தினைத்துணை, நன்றி செயினும், பனைத்துணைஆக்,
கொள்வர், பயன்தெரி வார்.
சிறிய உதவியின் பயனையும்
சிந்திப்பார், பெரிதாய் மதிப்பார்.
- உதவி வரைத்(து)அன்(று), உதவி; உதவி,
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
உதவியின் பெரும்பயன், உதவியைப்
பெற்றாரின், பண்பைப் பொறுத்தது.
- மறவற்க, மா(சு)அற்றார் கேண்மை; துறவற்க,
துன்பத்துள் துப்(பு)ஆயார் நட்பு.
தூய நட்பை மறக்காதே;
துன்பத்தில் உதவியவரைத் துறக்காதே.
- எழுமை எழுபிறப்பும், உள்ளுவர், தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
துன்பம் துடைத்தாரது நட்பை,
நன்றியர் எப்பிறப்பிலும், நினைப்பர்.
- நன்றி மறப்பது, நன்(று)அன்(று); நன்(று)அல்ல(து),
அன்றே, மறப்பது நன்று.
என்றும் செய்ந்நன்றியை மறவாதே;
அன்றே தீமையை மறந்துவிடு.
- கொன்(று)அன்ன, இன்னா செயினும், அவர்செய்த
ஒன்று,நன்(று), உள்ளக் கெடும்.
கொலைபோல், தீமைசெயினும், அவர்செய்
ஒருநன்மையால், அத்தீமை கெடும்.
- எந்நன்றி கொன்றார்க்கும், உய்(வு)உண்[டு]ஆம்; உய்(வு)இல்லை,
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
உதவியை, மறந்த எவருக்கும்,
உயிர்வாழ்க்கை என்றும் இல்லை
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply