இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி
தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய் தமிழ்இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.
தமிழால் வாழ்ந்தோர் பலர். தமிழுக்காகவாழ்ந்தோர் மிகச்சிலர். அம் மிகச் சிலருள் ஒருவரானபேராசிரியர்சி.இலக்குவனார் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்,மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பேராசிரியர், உணர்ச்சிக்கவிஞர் ,எழுச்சியூட்டும் இதழாளர், தமிழினப்போராளி எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர்.தமிழின் இரு கண்களாக இலங்கும் தொல்காப்பியத்தையும் திருக்குறளை யும்நுட்பமாய் ஆய்வுசெய்து அறிவுலகிற்கு வழங்கியவர். இவர் ஆற்றிய பல்வேறு பணிகளுள் எக்காலத்தும் நிலைத்த புகழ் தருவதாய்த் தமிழின் மேன்மையை உலகிற்குஉணர்த்துவதாய் அமைந்தது அவரது தொல்காப்பிய ஆராய்ச்சி யேயாகும்.தொல்காப்பியத்தின் அருமைபெருமை களைப் பிறமொழி அறிஞர்கள் உணரவேண்டு மென்கிறஉயரிய நோக்குடன் அதை ஆங்கிலத்தில் செம்மையாக மொழியாக்கம் செய்திருப்பதுடன் மொழியியல் பார்வையில் ஆழமும் விரிவும் பொருந்தியதொரு திறனாய்வையும்வழங்கியிருப்பது அவரது விரிந்த நூலறிவையும் புலமைசார் ஆய்வுஅணுகுமுறையையும் பல்லாண்டுக் கடும் உழைப்பினையும் புலப் படுத்திநிற்கின்றன.
தொல்காப்பிய ஆய்வு மேனாட்டு அறிஞரிடையே பரவுவதற்குச் சீரிய பணியாற்றிய முன்னோடிகள் என இலக்குவனாரால் குறிப்பிடப்படும் பேராசிரியர்கள் நாவலர் சோம சுந்தரபாரதியார், பி.சா.சுப்பிரமணியசாத்திரி ஆகிய இருவருமாவர். நாவலர் மேற்கொண்ட ஆய்வு தொல்காப்பியம் முழுமைக்குமாக அமையவில்லை. சாத்திரியாரின் ஆய்வு முழுமையானது; ஆனால் சமற்கிருதச் சார்பு மேலோங்கி நிற்பது.
நூலாசிரியரும் உரையாசிரியர்களும் வகுத்துத் தந்த அடித்தளத்தின்மீது நின்று ஆய்வு நேர்மையினின்று வழுவாது மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோராய்த் திட்பமும் தெளிவும் நிறைந்த மொழிபெயர்ப்பினையும் புலமை நுட்பம் வாய்ந்த திறனாய்வினையும் ஆங்கிலத்தில் இலக்குவனார் தந்திருப்பது அறிஞர்களால் பெரிதும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
தொல்காப்பிய நூற்பாக்களின் பொருள்சிதைவுபடாமல் எளிய தெளிவான தரமான ஆங்கில நடையில் படிப்போர் புரிந்துகொள்ளும்வண்ணம் துல்லியமாக மொழிபெயர்ப்புப் பணியை இலக்குவனார் நிறைவேற்றியிருப்பது வியந்து போற்றத்தக்கதாகும்.
நூற்பா அடிகளின் வரிசைமுறை பிறழாமல் மொழிபெயர்ப்பு அமைந்திருப்பது நோக்கத் தக்கது.
தமிழ் மூலத்தையும் உரோமன் எழுத்துப்பெயர்ப்பையும் இணைத்து இம்மொழிபெயர்ப்பு நூல் மறுபதிப்பாக உயர்தரத்தில் உருவாக்கப் பட்டு வெளிவருதல் நிறைவேற்றப்படவேண்டிய இன்றியமையாத பணியாகும்.
திருவள்ளுவரின் காலம் கி.மு.31 என அறிஞர்குழுவால் ஒருதலையாக அறுதி முடிவெடுத்துத் தமிழக அரசு அதை ஏற்குமாறு செய்ததுபோல் தொல்காப்பி யருக்கும் கால வரை யறை செய்யப்பட வேண்டும். கி.மு. 10000 முதல் கி.பி.1000 வரையிலான பல் வேறு காலக் கட்டங்கள் பலராலும்சுட்டப்படுகின்ற நிலையில் இலக்குவனார் தொல் காப்பியரின் காலம்கி.மு.600க்கு முற்பட்ட தாகவும் கி.மு.1000த்திற்குப் பிற்பட்டதாகவும் இருக்கவேண்டுமென வரையறுக்கிறார். மொழி, இலக்கியம், வரலாறு தொடர்பான பல்வேறுசான்றுகளுடன் அவர் நிறுவியுள்ள இந்தக் கால வரையறையை ஆய்வாளர்கள் மனங்கொளல்வேண்டும். தமிழறிஞர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய பணிகளுள் முதன்மையானது தொல்காப்பியரின் காலத்தை ஒருதலையாக அறுதிமுடிவெடுத்தலாகும்.
தமிழ் எழுத்தின் தோற்றம், வளர்ச்சிகுறித்து வேறுபாடான கருத்துக்கள் நிலவுகின்றன. தொல்காப்பியர் காலத்திற்குமுன்பே எழுத்துக் கள் தோன்றி அவை காலப்போக்கில் மாற்றங்கள்அடைந்துவந்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (தொல். 15)
மெய் எழுத்துக்களின் மீது புள்ளிவைக்கவேண்டுமெனத் தொல்காப்பியர் கூறுகிறார். ஆய்தம் முப்புள்ளிகளால் ஆனதுஎன்பதையும் குறிப்பிடுகிறார்.
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல். 2)
பின்னால் தோன்றி வளர்ந்த பிராமி எழுத்துகளும் கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்து களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றே கொள்ளவேண்டும் என்பது பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் துணிந்த முடிபாகும். சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே தமிழர்களுக்கு எழுதும் பழக்கம் இருந்ததென்பது கருதத்தக்கது.
தொல்காப்பியத்தில் பயின்றுவரும் சொற்களுள் சமற்கிருதச் சொற்கள் எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை சுட்டிக்காட்டியவற்றுள் ஒன்றிரண்டு தவிரப் பெரும்பான்மை மூலத்தில் தமிழ்ச்சொற்களே என இலக்குவனார், டாக்டர் கால்டுவெல் அவர்களின் சான்றுகளைத் துணைக்கொண்டு திறம்பட நிறுவியுள்ளார்.
வையாபுரிப் பிள்ளை அவர்கள் சமற்கிருதச்சொற்கள் எனச் சுட்டிக்காட்டிய ‘உவமம்’, ‘காலம்’, ‘காரம்’, ‘காயம்’, ‘திசை’, ‘ஆசிரியர்’, ‘இமை’ போன்ற சொற்களுக்குரிய வேர் சமற்கிருதத்தில் இல்லை, தமிழிலேயே உள்ளது என்பதை இலக்குவனார் உறுதிசெய்துள்ளார்.
பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் ‘அந்தணர்மறை’, என்னும் சொற்றொடருக்கு ‘scriptures of the Brahmins’ எனப் பொருள்தரும் நிலையில் இலக்குவனார் அதை மறுத்து“Book of the Learned” எனப் பொருள்கொள்வது கருதத்தக்கது.தொல்காப்பியர் சமற்கிருத இலக்கணங்களின் அடிப்படையில் தொல்காப்பியத்தைப் படைக்க வில்லை என்பதை உறுதிபடப் பல்வேறு சான்றுகளுடன் இலக்குவனார் நிறுவியுள்ளார்.
மொழிப் பொதுமைகள் (language universals) எனக் குறிப்பிடும்வகையில் தொல்காப்பியர் யாத்துள்ள சிலநூற்பாக்களை இலக்குவனார் அடையாளங்காட்டியுள்ளமை அவரது நுட்பமான மொழியியல்அறிவிற்குச் சான்றாக நிற்கிறது.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.640)
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர் (தொல்.641)
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (தொல்.683)
பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம்பின்றே(தொல்.874)
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா(தொல்.877)
இலக்கணம் என்பது தொடரமைப்பைஅடிப்படையாகக்கொண்டே உருபுகள், சொற்கள் தொடர்பான ஆய்வுகளைமேற்கொள்ளவேண்டும் என்பது இன்றைய மொழியியல் கொள்கைகளில் ஒன்றாகும். இதைத் தொல்காப்பியர் உணர்ந்து இலக்கணம் யாத்துள்ளமையை இலக்குவனார் நுண்ணிதின் ஆய்ந்து விளக்குகிறார்.
வினையின் தோன்றும் பாலறி கிளவியும்
பெயரின் தோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே(தொல். 494)
என்னும் நூற்பாவில் எழுவாய்க்கும் பயனிலைக்கு மிடையிலான பிணிப்பு (concordance) குறித்துப்பேசுவது ஓர் எடுத்துக் காட்டாகும்.
பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே (தொல். 916)
என்னும் நூற்பாவும் தொடரியல் சார்ந்ததே.
பொருளதிகாரத்தில் இடம்பெறும் சில நூற்பாக்கள் இடைச்செருகல் என்பது இலக்குவனாரின் துணிபு.
வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று
அன்னவை பிறவும் ஆங்கவன் நிகழ
நின்றவை களையுங் கருவி என்ப (தொல். 1041)
என்னும் நூற்பா அமைப்பிலும் பொருண்மையிலும் முன், பின் நூற்பாக்களுடன் பொருந்த வில்லை என வாதிடுகிறார்.
தொல்காப்பியத்தில் சில விடுபாடுகளைப்பற்றியும் இலக்குவனார் சுட்டிக்காட்டுகிறார். காலத்தை மூன்றாகப் பகுத்ததொல்காப்பியர் கால உருபுகளைப்பற்றி எதுவும் குறிப்பிட வில்லை என்பதும் வினாப் பொருளில் வரும் ‘யாது’, ‘எவன்’ சொற்களைக் குறிப்பிட்டவர் ‘யா’காரத்தையும் ‘எ’கரத்தையும் வினா எழுத்துகளாக எடுத்துக்கூறவில்லைஎன்பதும் எடுத்துக் காட்டுகள். இதுபோன்று தொல்காப்பிய நூற்பா மொழியில் இடம்பெறும் பல இலக்கணக் கூறுகள் நூற்பாக்களில் விளக்கப் படவில்லை என்பதுகூர்ந்து ஆராயத் தக்கதாகும்.
எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் ஒலி, எழுத்து, சொல்லுருபு, சொல், தொடர், பொருண்மை குறித்த இலக்கணவியல். பொருளதிகாரம் வாழ்வியலை உள்ளடக்கிய இலக்கியவியல் என்பது இலக்குவனாரின் கருத்தாகும். தொல்காப்பியத்தைக்கொண்டு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுற்பட்ட தமிழகத்தின், தமிழரின், தமிழின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இயலும் என்பது அவரது திறனாய்விலிருந்து புலப்படும் உண்மை. தொல்காப்பியத்தில் பொதிந்துள்ள இலக்கணவியல் இலக்கியவியல் கோட்பாடுகள் உலகிற்கே வழிகாட்டுவதாய் அமையும் என்பது அவரது உள்ளக்கிடக்கை. மேனாடுகளில் பிளாட்டோவும் அரிசுடாட்டிலும் பாடநூல்களில் இடம்பெறுவதுபோல் தொல்காப்பியரும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பாடநூல்களில் இடம் பெறவேண்டுமென்பது இலக்குவனாரின் வேட்கை.
Leave a Reply