(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

3. மன்பதை வாழ்க்கை

தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார்.

காமம் சான்ற கடைக்கோட் காலை,

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி,

அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

(தொல்காப்பியம்: பொருள்.192)

எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே எதிர்நோக்கினர் எனத் தெளிவாக தெரிகிறது.

 திருமண வாழ்க்கை வாழ்வின் அடிப்படையாகும். திருமண உறுதிமொழி குறித்து ஒன்றும் காணப்படவில்லை. மன்பதை ஒற்றுமை என்பது தங்கள் உண்மையான அன்பினால் சமநிலையில் இலங்கும் கணவனும், மனைவியும் பங்கு பெறும் குடும்பமாக இருந்தது.

வரலாற்று அறிஞர் பாசம் என்பார், “வருணம் தென் தமிழர்களிடம் (திராவிடர்களிடம்) பிற்காலத்தில்தான் புகுந்தது.. முற்காலத் தமிழ் இலக்கியங்கள், ஒருவரைவிட மற்றொருவர் மேல் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத பழங்குடியினக் குழுக்கள் அமைந்த மன்பதையையே காட்டுகிறது” என்றார்.(The wonder that was India, Page 138)

கிடைத்திருக்ககூடிய தமிழ் நூல்களில் முதலிடம் வகிக்கும் தொல்காப்பியம், நன்கு மேம்பட்ட பண்பாடான மன்பதையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது; இம்மன்பதை பழங்குடியினங்களாகப் பிரிக்கப்படாத, கட்டமைப்பான தொழில் முறை அமைப்பை உடையது.

புவியியல் மண்டலங்களுக்குகேற்ப நிலப்பாகுபாடு மலைவாழியமாக (tribalism) கருதப்பட வேண்டியதில்லை.  ஒருவரைவிட மற்றொருவர் முன்னுரிமை பெற்றது,  தொழில் முறையினாலேயன்றிப் பிறப்பினால் அன்று எனவும் காணப்படுகிறது. (சொல்: 444,445&446)

 தீண்டாமை, அணுகாமை, நிழல்படக்கூடாமை அவர்கள் அறியாதனவாகும்.

3.1 குடும்பம்:    குடும்ப அமைப்பு முறையே நாகரிகத்தின் உண்மையான அடையாளமாகும்.

 பேராசிரியர் இலக்குவனார்ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்து இருவராலும் ஏற்றுக் கொள்ளும் மணவாழ்க்கையே, நாகரிகம், பண்பாடு மிக்க மன்பதையின் சிறந்த திருமணமுறை ஆகும்.

  வாழ்க்கையின் முதன்மைப் பங்கேற்பாளர்கள் கணவனும், மனைவியும் ஆவர். காதல் அடிப்படையில் மட்டும் தன்விருப்பில் திருமண வாழ்க்கையில் ஒன்று சேருவர். விதிவயத்தால் காதலர் இருவரும் சந்திப்பர் (பொருள்:93).  அவர்கள்  சந்திப்பில் அவர்களின் கண்களே ஒருவருக்கு ஒருவர் பேசும்(பொருள்:96). தொல்காப்பியர் ஆரிய மணவாழ்க்கையின் எட்டு முறைகளையும் நன்கு அறிந்தவராய்த், தமிழர்களின் காதல் வாழ்க்கையை ஆரிய கந்தர்வ மணத்துடன் ஒப்பிடுகிறார்(பொருள்:92).

  வாழ்க்கைத் துணைவர்கள் ஒத்த நிலையில், அதாவது பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, அகவை(வயது), வடிவம், காதல் உணர்ச்சி, நிறை, அருள், அறிவுடைமை, திரு (செல்வம்) என்னும்  பத்திலும் ஒத்திருக்க வேண்டும் (பொருள்: நூற்பா 273).

  திருமணம் பெற்றோர்களின் ஒப்புதலுடன் நடைபெறும். காதலியின் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தார்கள் எனில் காதலி காதலனுடன் உடன் போகி அவனுடைய இடத்தில் திருமணம் நடைபெறும் (பொருள்: 15,143). இதனால், மணமகனின் பெற்றோர் அவனுடைய வாழ்க்கைத் துணையின் தெரிவிற்கு எவ்வகை மறுப்பும் தெரிவிப்பது இல்லை என்று தோன்றுகிறது.

  குடும்ப மரபிற்கேற்ப திருமணம் விழாவாக நிகழ்த்தப்படும். எனினும் திருமண விழாவை நிகழ்த்துவதற்கு புரோகிதர் வகுப்பு எதுவும் இல்லை. அவர்கள் குடும்பத்திலோ, குமுகாயத்திலோ மூத்தவர், திருமணத்தை நிகழ்த்துவார். தொல்காப்பியர் திருமண நிகழ்வினைக் குறிப்பதற்குக் ‘கரணம்’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது திருமணம் எழுத்து மூலமாகவும் பதியப்படும் முறையை கொண்டு இருந்தது என உய்த்துணரச் செய்கிறது(பொருள்.145).

  காதலன் சில நிலைகளில் காதலியை விட மேலான நிலையில் இருக்கலாம்(பொருள்:93). ஆனால் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் சமமாகி விடுகின்றனர். எனவே அவர்கள் தலைவன், தலைவி என அழைக்கப்பெறுகின்றனர். மனைவி எவ்வகையிலும் தம் கணவனுக்கு கீழ்நிலையில் அல்லள்.

பெண்கள் ஆண்களுடன் முழுஉரிமையையும், சமநிலையையும் துய்த்து மகிழ்ந்து இருந்தனர்.

 

3.2. திருமணம் கற்பு என அழைக்கப்பட்டது; அஃதாவது திருமணம் தன்மறுபாலினர் உடனான உறவில் நன்னெறிகளைப் பின்பற்றுவதற்குக் கட்டுப்படுத்தும் அவர்களின் ஒழுக்கநிலையை உறுதி செய்கிறது. ஆடவன் தான் விரும்பும் பெண்ணின் காதலைப் பெற இயலாத பொழுது மடலேறும் வழக்கத்தை கொண்டு இருந்தனர். பெண்ணுக்கு அவள் விருமபுகின்றவனின் கைகளைப் பற்ற இயலாதபொழுது, இவ்வாறு மடலேறும் பழக்கத்தைக் கொண்டிலர்.

  காதலைப் புரிந்து கொள்ள இயலாத சிறுமியிடம் கொள்ளும் காதல், விருப்பம் இல்லாத பெண்ணிடம் கட்டாயமாகக் கொள்ளப்படும் காதல், அகவையில் மூத்தவருடான காதல் ஒருவருக்குகொருவர் ஏற்பு நிலையில் இல்லாது மிகையாக வெளிப்படுத்தப்படுகிற காதல் ஆகியன மன்பதையால் வெறுக்கப்பட்டன.

காதலன்  தோழன், காதலியின்  தோழி, செவிலித்தாய்,  நூல் வல்லார், பாணன், பாடினி,  பணியாளர்கள, விருந்தினர், கூத்தர், விறலியர், அறிஞர், காதலர்களை எதிர்பாராமல் சந்திப்போர் ஆகியோர் திருமணத்திற்கு முன்னரும் பின்னரும் குடும்ப வாழ்க்கையை நிகழ்த்துவதற்கு முதன்மைப் பங்கேற்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்(பொருள் : 193).

  வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்குச் செறிவும், நிறைவும், செம்மையும் (மனக்கோட்டமின்மையும்), செப்பும்(கூறத்தகுவன கூறலும்), அறிவும், அருமையும் பெண்ணிற்கு இன்றியாமையாது எதிர் நோக்கப்படுகின்றன (பொருள்:  209).

  நிலையிற்றிரியாத அடக்கமும், மறைபுலப்படா வாறொழுகும் நிறையும் மனக்கோட்டமின்மையும்  காலமும் இடமும் அறிந்து கூறத்தகுவன கூறலும்    நன்மை   தீமைகளை  ஆராய்ந்து   கொள்ளும் அறிவும்  தம் உளத்தினைப்  பிறர்  எளிதின் அறியவொண்ணா  தொழுகும்  அருமையும் பெண்பாலார்க்குரிய திறன்களாகும்.

  விருந்தினரைப் புரக்கும் இயல்பு, சுற்றத்தாரைப் பேணல், பிறர் குறையைப் பொருட்படுத்தாத பொறையுடைமை, உள்ளத்தை ஒரு வழி நிறுத்தும் ஆற்றலுடைமை முதலியன தலைவியின் தலைமைப் பண்புகளாகும்(பொருள் : 152).

  இரண்டாவது  திருமணமும் காமக்கிழத்தியைக் கொண்டு இருத்தலும் நடைமுறையில் இருந்தன. (பொருள். 151,172 &187).

  ஆசை நாயகியர், காமக்கிழத்தி எனவும் பரத்தை எனவும் அழைக்கப்பெற்றனர். காமக்கிழத்தி என்பதன் நேர் பொருள் அன்பிற்குரிய பெண் என்பதாகும். எனவே அவள் மனைவிக்குரிய நிலையைக் கொண்டு இருப்பாள். அவனுடைய உடைமைகளில் சட்டமுறையிலான உரிமையைக் கொண்டிருக்க மாட்டாள் என்பதை இச்சொல் விளக்குகின்றது. அவள்,  அவன் வீட்டில் வசிப்பதற்கு இசைவு அளிக்கப்படுவாள். பரத்தையின் நிலையே வேறு. அவள், வேறு தெருவில் தனி வீட்டில் வசிப்பாள். அவன் அவள் வீட்டிற்குச் சென்று அவளுடன் தங்குவான். ஆனால்  அவன், பூப்பு வெளிப்பட்ட காலத்திற்குப் பின்னர் பன்னிரண்டு நாள், மகப்பேற்றிற்காகத் தன் மனைவியுடன் வாழ்வதற்குச் சென்று விடுவான்(பொருள்: 187).

பழந்தமிழ் மக்களின் உடற்கூறு அறிவு பெரிதும் போற்றுதற்குரியது.

(Tholkaappiyam in English with critical studies

By Prof. Dr. S. Ilakkuvanar:

pages 472-475)

 

தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)