(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

 tholkappiyam  > ilakkuvanar wrapper

3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்:

 ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர்.  ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது.  தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என  குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்).

மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர்  என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்).

 இந்நூற்பாவைப் பிற்கால ஆரியக் குமுகாயத்தின் மன்பதைக் கட்டமைப்பை கருத்தில் கொண்டு உரையாசிரியர்கள் தவறாக விளக்கிவிட்டனர்.

வேத இலக்கியத்திற்குப் பிந்தைய வடஇந்தியக் குமுகாயமுறை தொல்காப்பியர் கால முறையிருந்து மாறுபட்டது. வட இந்தியாவில் குமுகாயம் நான்கு பகுப்புகளாக மட்டும் பிரிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர்கள். இந்நால்வகைப் பிரிவின் செய்தொழில்கள் எண்ணிக்கை அவற்றுக்குச் சமமாகச்சொல்லப்படக்கூடிய தமிழகத்தில் உள்ள எண்ணிக்கையில் இருந்து பின்வருமாறு வேறுபடுகின்றன.

 

வ.எண் பின்வேத கால ஆரியர் * செய்தொழில் எண்ணிக்கை தொல்காப்பியர் காலத் தமிழர் செய்தொழில்எண்ணிகை
1. பிராமணர்

3

பார்ப்பனர்

6

2. சத்திரியர்

9

அரசர்

5

3. வைசியர்

4

வணிகர்

6

4. சூத்திரர்

7

வேளாளர்

6

*[இராதா குமுது முகர்சி – இந்து நாகரிகம் பக்கம் 130 : Radha Kumud Mukergi : Hindu Civilization, Page 130]

 

 

மேற்குறிப்பிட்டவை நீங்கலாகப் பின்வரும் கடமைகளையும் முதல் மூன்று வகுப்பினர் கொண்டிருந்தனர். 1. அத்தியான (படிப்பு) 2. இசிய (ஈகம்) 3. தானம் (அறம்)

 

எனவே கிறித்துஆண்டுமானத்திற்கு முற்பட்ட காலத்தில், தமிழ்க் குமுகக் கட்டமைப்பானது  ஆரியக் குமுக அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது எனத் தெளிவாகின்றது. பார்ப்பனர்  மன்பதையில் உயர்ந்த நிலையும் மதிப்பும் பெற்றிருந்தனர். அவர்கள் மக்கள் நலனில் கருத்து செலுத்தினர். அவர்களின் ஆழ்ந்த படிப்பாலும், மனிதர்கள் நிகழ்வுகள் பற்றிய கூர்ந்த நோக்காலும் முன்கூட்டியே  கருதிப் பார்ப்பவர்களாக இருந்தனர்; ஆதலின், அவர்கள் பார்ப்பார்(பார்ப்பனர்) எனப்பட்டனர்.

பார்ப்பனர், ஐயர்(அறிஞர்கள்) புலவர்கள் ஆகியோர்  குமுகாயத்தை உருவாக்குவதில் தங்களுடைய கோட்பாட்டாலும், செயலாலும் முதன்மைப் பங்கு பெற்றிருந்தனர்.

310. நாள், திங்கள், ஆண்டு – பகுப்பு

பகற் பொழுதும், இரவுப் பொழுதும் ஆறு பிரிவு கொண்ட முழு நாளாகக் கண்டறியப்பட்டு இருந்தது. அஃதாவது வைகறை (கதிரவன் தோன்று முன்பு உள்ள காலைப் பொழுது), விடியல்(காலை), நண்பகல்(மதியம்), எற்பாடு (கதிரவன் மறைவும் காலம்), மாலை (முன்னிரவு), யாமம்(நள்ளிரவு) ஆகியன. ஒவ்வொன்றும் பத்து நாழிகைகள் அல்லது நான்கு மணிகளாக அமைந்திருந்தது. ஒரு வாரத்திற்கு ஏழு உள்ளன. நாட்களின் அனைத்துப் பெயர்களும் தொல்காப்பியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டாற் போன்று இன்றைக்கும் பயன்பாட்டில் உள.

 

ஓர் ஆண்டானது இரண்டு இரண்டு திங்கள்களைக் கொண்ட ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்ட பன்னிரண்டு திங்கள்களை உடையன. பருவங்கள் இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என அழைக்கப்பெறும்.

 

பல்வேறு நிலைகளிலே காதலைத் துய்த்து மகிழ்வதற்குத் தக்க பருவங்களையும், நேரங்களையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.  காதலில் முல்லை(கற்பு) முதன்மைப் பங்கு வகிக்கிறது. எனவே முல்லைப் பருவத்தையும் நேரத்தையும் குறிப்பிடும் பொழுது முதலில் அவர் கார்காலத்தை குறிப்பிடுகிறார். எனவே  அறிஞர்கள் சிலர், தொல்காப்பியர் காலத்தில்,  கார் பருவத்தின்  முதல் திங்களாகிய ஆவணியே  தமிழ்ஆண்டின் முதல் திங்களாக இருந்தது எனக் கருதுகின்றனர். இற்றை நாளிலும் கேரளாவில், ஆவணியை முதலாகக் கொண்டு ஆண்டினைக் கணக்கிடும்  நடைமுறை இருப்பதை இதற்குச் சார்பாகக் கூறுவர். (நூற்பா. 6, 7, 8, 9,10; இவ்வற்றிற்கான நச்சினார்க்கினியர் உரை)

 

 (Tholkaappiyam in English with critical studies

By Prof. Dr. S. Ilakkuvanar:

Pages 478-480)

தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)