tamil letters+2

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

 

311. அளவைகளும் எடைகளும்

 பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன.  பயன்பாட்டின் போது பெயர்களின்  ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240)

171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.

அளவைகள்:

கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு

நிறைகள் : கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை

 தொல்காப்பியர் தம் நூற்பாக்களில் பனை, கலம், நாழி, உரி, உழக்கு, தூணி, பதக்கு ஆகியவற்றின் பெயர்களையும், (எழுத்து: நூற்பாக்கள் 169, 239, 240, 319) கா என்னும் அளவையும் குறிப்பிடுகின்றார். (எழுத்து. 170).

 

312 நம்பிக்கைகளும் பழக்கங்களும்

   தொல்காப்பியர்காலத் தமிழ் மக்கள் நிமித்தம்(நல்லறிகுறி) பார்ப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். நிமித்தம் அறியப் பறவைகள் கருவியாக இருந்தன. அவற்றின் இயக்கங்களும் குரல்களும் நல்லது அல்லது தீயதை முன்கூட்டித் தெரிவிப்பதாகக் கொள்ளப்பட்டன(பொருள்: நூற்பாக்கள் 58, 91).

   நாட்டைப் படையெடுத்துச் செல்லும் பொழுது கண்டறியப்படும் நல்ல நேரம் ‘விரிச்சி’ எனப்பட்டது(பொருள்: நூற்பா 58).

  சிறப்பான நாட்களில் நற்செயல்கள் புரிவதில் நம்பிக்கை கொண்டு இருந்தனர்.  பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பான நாள் நல்ல நாளாக அமையாவிட்டால் ஆளுவோரின் சார்பாகக் குடையையும், வாளையும் நல்ல நாளின் பொழுது எடுத்துச் செல்வர். (பொருள்: நூற்பா 68) ‘உன்னம்’ என்று அழைக்கப்பெறும் மரம் இருந்தது. தம் மன்னரின் வெற்றி அல்லது வீழ்ச்சியை முன்கூட்டியே இந்த மரம் முறையே  முளைத்தல் அல்லது உதிர்தல் மூலம் தெரிவிக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது(பொருள்: நூற்பா 60).

   திருமணம் ஆகாத பெண் காதல் நோயால் வருந்தும்போது உடல்நோயுற்று நலிவதாக எண்ணிக்  காப்பதற்காக ‘வேலன் ஆடல்’ நிகழ்ச்சியை மேற் கொள்ளும் பழக்கம் அவர்களிடம் இருந்தது(பொருள்: நூற்பா 60).

 

  வெற்றிகரமாக ஆநிரை கவர்ந்த பின்பு அவற்றைக் கணியருக்கும், புலவர்க்கும் வழங்கி  தங்கள் இதயத்தில் இடம் பெற்ற அன்பிற்குரியோருடன்  குடித்து நடனமாடுவர்(பொருள்: நூற்பா 58).

  பகைநாட்டுடன் போர் அறிவித்த பின்பு அரசர் படைத்தலைவர்களுக்கும், படை வீரர்களுக்கும் உணவு வழங்கி  அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணுவார்(பொருள்: நூற்பா 63).

 

312 படைத்துறை, குடித்துறையினர்க்குச் சிறப்பு செய்தல்

   படையாட்சிப் பணியிலோ குடியாட்சிப் பணியிலோ அரசருக்கும் நாட்டிற்கும் சிறந்த ஊழியம் புரிந்தோர்க்குப் பட்டங்கள் அளித்தலும், சிறப்பு செய்தலும் பழக்கத்தில் இருந்தன.

 

4. சமயமும், மெய்யியலாளர்களும்

  தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் எப்பொழுதும் கடவுள் உணர்வுடன் இருந்தனர். கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரையும் காண இயலவில்லை. வாழ்க்கை நடத்துவதற்கு அடிப்படையானதும், தவிர்க்க இயலாததுமான பொருள்களின் பட்டியல் ஆன கருப்பொருளில் கடவுளை முதலிடத்தில் தொல்காப்பியர் வைத்துள்ளார்.  கடவுளுக்கு அடுத்து உணவு வருகிறது(பொருள்: நூற்பா 18). எனவே அவர்கள், கடவுட் கோட்பாட்டை எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த நிலையில் மதிப்பாக வைத்திருந்தனர் எனப் புரிந்து கொள்ளலாம்.

  மேலும் தொல்காப்பியர் திணைப்பாகுபாடுகளைக் குறிக்கையில் அவ்வத்திணை மக்கள் வணங்கும் கடவுட் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.  நாம் இப்பொழுது ஒரு நகரையோ, நாட்டையோ மதிப்பிடுகையில் உலகின் பிற பகுதிகளில் அருகி காணப்பட்டு இவை கொண்டுள்ள குறிப்பிட்ட தொழில் அல்லது உற்பத்தியின் அடிப்படையில் மதிப்பிடுகின்றோம். ஆனால் தொல்காப்பியர் எல்லாவற்றிலும் உயர்ந்தாகக் கடவுளை மதிப்பிடுகிறார். (பொருள்: நூற்பா 5)

  தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை கொண்டிராத சமணர் அல்லர் என்பதும் அவர்காலத் தமிழர்கள் எப்பொழுதும் கடவுள் உணர்வு உள்ளவர்களாகத் திகழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலத்தினர்க்கு முதன்மைத் தெய்வங்களாக முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இவை  வெவ்வேறு கடவுளர்களின் பெயர்கள் ஆகா; ஆனால் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் ஒரே கடவுளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும்.

   பெயர்கள் தனிப்பட்ட கடவுளர் போல் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு அல்ல. பெயர்கள்,  கடவுளின் நான்கு பண்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட, நான்கு பெயர்களை உடைய ஒரே பொதுவான கடவுளைக் குறிப்பிடுகின்றன. மாயோன் என்பது நிலையற்ற தன்மையிலிருந்தும்  சேயோன் என்பது அணுக இயலாமையில் இருந்தும் வேந்தன் என்பது தலைமை நிலையில் இருந்தும், வருணன் என்பது வண்ணம் அல்லது வாழ்த்து வழங்குவதிலிருந்தும் உருவான சொற்களாகும்.

   தொல்காப்பியர் இறைவனை, மனிதரின் உள்ளத்தையும், உரையையும் கடந்தவர் என்னும் பொருளில் கடவுள் என்றும்(பொருள்: நூற்பா18) துன்பத்தைத் தேய்த்து மறையச் செய்பவர் என்னும் பொருளில் தெய்வம் என்றும்(பொருள் நூற்பா 18) குறிக்கின்றார்.

   கொடி நிலை, கந்தழி, வள்ளி எனப் பொருள் நூற்பா.88-இல் குறிக்கப்பெற்றவை,  சில ஆய்வாளர்களால் பழந்தமிழ்நாட்டில் ஏற்கப்பெற்ற சூரியன், தீ, நிலா வழிபாட்டை குறிப்பதாக விளக்கப்படுகின்றது.

   கந்தழி என்னும் சொல்  அனைத்து நிலைகளுக்கும் மேம்பட்ட எவ்வகை வடிவமும் இல்லாத எதனுடனும் இணையாத தனித்த ஒன்றைக் குறிப்பதாக நச்சினார்க்கினியர் கூறுகிறார் (தொல்காப்பியம்: பொருள்: விளக்கவுரை: பக்கம் 335)

தொல்காப்பிய மொழிபெயர்ப்பு - முன்அட்டை

  (Tholkaappiyam in English with critical studies By Prof. Dr. S. Ilakkuvanar:

Pages 480-483)

தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)