idaicherukalagal

சாதி எதிர்ப்பை நலிவாக்கவும்

சாதி அமைப்பை வலுவாக்கவும்

புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள்

தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும்   பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான்”

அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்.

சாதி அமைப்பிற்கான எதிர்ப்பைத் தொல்காப்பியத்தின் துணைகொண்டு நலிவுப்படுத்துவதற்காகச் சாதி அமைப்பை வலுப்படுத்த விரும்பிய சில அறிஞர்கள் இதற்குச் சார்பான சில நூற்பாக்களை இயற்றி, தொல்காப்பிய நூற்பாக்களின் இடையே புகுத்தி விட்டனர். இவ்வாறு புகுத்தப்பட்ட நூற்பாக்கள் மிகவும் கட்டமைப்புக் கூடிய தொல்காப்பிய மூலத்துடன் ஒட்டவில்லை.

பொருளதிகாரம் 95ஆம் நூற்பா (களவியல் நூற்பா 4) இடைச்செருகலாகத் தோன்றுகிறது. இது தெய்வத்தையும் மனிதனையும் வேறுபடுத்துவதற்கு உதவக்கூடிய பொருள்களின் பட்டியலை தருகின்றது.

வண்டே, இழையே, வள்ளி, பூவே,

கண்ணே, அலமரல், இமைப்பே, அச்சம், என்று

அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ

நின்றவை களையும் கருவி என்ப”

என அது குறிப்பிடுகின்றது. இந்நூற்பாவின் வடிவமும், பொருண்மையும், தமிழ்நாட்டில் தெய்வீகக் கருத்து ஆதாயம் பெறப்பட்ட தொன்மைஇயல் பரவிய பின்பு உருவாக்கப்பட்டு இடையிலே சேர்க்கப்பட்டது என உறுதியாக வெளிப்படுகிறது. நூற்பா 140 (கற்பியல் நூற்பா 3) உம் இடைச் செருகலே ஆகும். அது

மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்

கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.

மேலோட்டமாகப் படிக்கும் எவரும் இந்நூற்பா பொருண்மைக்கு அப்பாற்பட்டது எனக் கண்டறிவர்.

தொல்காப்பியர் மணவாழ்க்கை என்றால் என்ன? எவ்வாறு, எப்பொழுது நிகழும் என 142, 143, 145 ஆகிய நூற்பாக்களில் விளக்குகிறார். இவை மிகவும் கோவையாக உள்ளன.

மேலும்144ஆவது நூற்பா   தொல்காப்பியர் காலத்தில் மேல் சாதி, கீழ் சாதி என வேறுபாடு இன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கூட இந்நூற்பாக் கண்டு குழம்பி தம்முடைய கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார். அவர் மேலோர் என்ற சொல்லுக்கு அந்தணர் (சமூகத்தின் உயர்நிலையில் உள்ளவர்) எனப் பொருள் தருகிறார்.

பின்னர் அவர் தமிழ்நாட்டில் பெரும் பகுதியினராய் உள்ள வெள்ளாளரைக் குறிப்பிடவில்லை என்றும் குறிப்பிடுகிறார். எனவே இந்நூற்பாவும் இடைச்செருகல் என்ற முடிவிற்கு வரலாம்.

செய்யுளியலில் நூற்பாக்கள் 480, 481, 482, 483, 484 ஆகியனவும் இடைச்செருகல்களே. நூற்பா 478 நூல் (ஏதேனும் அறிவியல் பற்றிய புத்தகம்) குறித்தும் நூற்பா 479 நான்கு வகையான உரைநடை குறித்தும் வரையறை தருகின்றன. நூற்பா 485 அந்நால்வகை யாவை என விளக்குகின்றது. இவை 479க்கு அடுத்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இடையில் நூற்பாக்களான 481, 482, 483, 484 ஆகியன பொருண்மைக்கு அப்பாற்பட்டு உள்ளன. நூற்பா 479இல் உரைநடையின் 4 வகையைக் குறிப்பிடும் பொழுது அந்நான்கு வகை யாவை என அடுத்து நூற்பாவில் குறிப்பதே மிகவும் பொருத்தமானதாகும். ஆனால் அடுத்த நூற்பா தனியொரு புத்தகத்தின் வகையைத் தருகின்றது. புத்தகத்தின் பிரிவானது ஓத்து, படலம், பிண்டம் என மூன்று வகை மட்டுமே. மொத்த வகைப்பாட்டை நான்காகத் திரித்துக் கூறுவதற்காகவே சூத்திரம் புத்தகத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றெனக் கூறப்படுகிறது. இந்நூற்பாவைப் புத்தக வகைப்பாட்டின் ஒன்றாகக் கருதுவது மிகவும் எள்ளற்குரியதாக உள்ளது.

சமக்கிருத மொழியில் நூற்பாவின் வடிவமாகச் சூத்திரம்இருப்பதை அறியவந்த பொழுது நூலின் மூலத்தில் இவ்வைந்து நூற்பாக்களும் இடையிலே திணிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மரபியலில் 625 முதல் 639 வரை உள்ள நூற்பாக்களும் 648 முதல் 665 வரை உள்ள நூற்பாக்களும் இடைச்செருகுநரால் படைக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.

தொல்காப்பியர் மரங்கள், விலங்குகள் தொடர்பான சொற்களின் பயன்பாட்டை கையாளுகிறார். விலங்கு உலகத்தின் இயல்பை விவரிக்கும் நூற்பாக்களின் ஒழுங்கின் இடையே 625 முதல் 639 வரையிலான நூற்பாக்கள் சாதிகள் குறித்தும் அவற்றின் தொழில்கள் குறித்தும் விளக்கித் தேவையின்றிக் காட்சியளிக்கின்றது. தொல்காப்பியர் அப்பொழுது நிலவியிருந்த சாதிகளையும் தொழில்களையும் குறித்து விளக்க விழைந்தார் எனில் அவர் காதல் உறவு இல்லாத பிற இயலில் (புறத்திணை இயல்) அவ்வாறே செய்து இருப்பார். அவர் புறத்திணை இயலில் மக்கள் குறித்தும் தொழில்கள் குறித்தும் முறையாகவும் போதுமான அளவிலும் விளக்கி உள்ளார். தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. அரசர்கள், முனிவர்கள், வணிகர்கள், புலவர்கள் ஆகியோர் இருந்தனர். ஆனால் அவர்களின் தொழில்களின் காரணமாக வேறுபடுத்தப்படவில்லை. மரபு வழியிலான அரசு வழியிலான எத்தொழிலும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு உரியதென வரையறுக்கப்படவில்லை.

இடைச்செருகலான நூற்பாக்களில் நம் தாய்நாட்டின் சார்பாக அரசர்களும், வணிகர்களும் மட்டுமே ஆயுதங்களை வைத்து இருக்க உரிமையுடையவர் எனத் தரப்பட்டுள்ளது. பயிர்த் தொழில் ஈடுபட்டுள்ள மக்கள் உழவுத் தவிர வேறு ஒன்றும் கொண்டிருக்கவில்லை.

ஆனால் உண்மையான நடைமுறை அவ்வாறு அல்ல. பகைவருக்கு எதிராக அனைவருமே ஆயுதமேந்தித் தம் நாட்டை காக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்பட்டனர். தொழிலும், வணிகமும் அவற்றைச் சார்ந்து வாழ விரும்பும் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்பட்டன. உழவர்களே நிலத்தின் தலைவர்களாக விளங்கி அவர்களிலிருந்து அரசர்களும், வணிகர்களும், முனிவர்களும் உருவாயினர் என அக்கால இலக்கியத்திலிருந்து அறிய வரலாம்.

நூற்பாக்கள் 648 லிருந்து 665 வரை புத்தகங்களின் வகைகள் ஆசிரியர்கள், உரையாசிரியர்கள், புத்தகங்களில் தவிர்க்க வேண்டிய தவறுகள், ஆசிரியர்களால் இலக்கிய உருவாக்கத்தின் போது உட்கொள்ள வேண்டிய பண்புகள் என இவற்றைப் பற்றி உள்ளன. இவையெல்லாம் செய்யுளியலில் கையாளப்படவேண்டியன. தொல்காப்பியர் தெளிவான எண்ணமும், பகுத்தாய்வு அணுகுமுறையும் கொண்ட சிறந்த அறிஞர் ஆவார். அவர் தலைப்புகளை, அதிகாரங்களாகவும் இயல்களாகவும் நிரல் படுத்துவதில் சிறந்த வல்லுநர் ஆவார். இடைச்செருகர்கள் இவ்வியலில் கையாண்டவாறு உண்மையிலேயே கருத்து செலுத்த அவர் விரும்பினார் எனில் இக்கோட்பாடுகளைச் சேர்க்கத் தவறியிருக்க மாட்டார். இடைச்செருகல் நூற்பாக்கள் இத்தகைய தன்மையுடைய நூலிலே மிகவும் வேண்டத்தகாதனவாகவும் பொருத்தமற்றனவாகவும் இலங்குகின்றன. சூத்திரம், உத்திரம் ஆகியன பிற்காலத்தைச் சார்ந்த சமசுகிருத மொழிச் சொற்களே என உறுதியாய் கூறலாம்.

சமக்கிருதம் தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்ற காலத்தில் இதனைப் படிப்பது அக்கால நாகரிகமாகக் கருதப்பட்ட காலத்தில் தமிழ் படித்த மாணவர் ஒருவரால் இவற்றை நூலில் எங்குச் சேர்க்க வேண்டும் என்று அறியாமல் இந்நூற்பாக்கள் அதிகாரத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

01 9பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்

(Tholkāppiyam in English with critical studies): 15-20

தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்