தலைப்பு-தமிழ்ப்பண்பாடு : thalaipu_thamizhpanbaadu

       தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ‘ தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் கூடியனவாய் உள்ளன. அங்ஙனமிருந்தும் உலகப் பண்பாடு, உலக நாகரிகம், உலக வரலாறு என்று கூறப்படும் நூல்களில் தமிழகத்தைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் காண இயலாது. கிரேக்கநாட்டுப் பெரியவர்களைப் பற்றி விரித்துக் கூறி கிரேக்க நாடே உலகப் பண்பாட்டின் பிறப்பிடம் என்று ஓயாது முழங்குகின்றனர். ஆனால் தொல்காப்பியத்தின் வழியாகத் தமிழகப் பண்பாட்டை அறிந்து அஃதே உலக நாகரிக ஊற்று என அறிகின்றாரிலர்.

செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் :

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 127