tholkappiyam_peyar04

இயல் பகுப்பும் நூற்பா அளவும்

 

 

 தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு:

 

எழுத்ததிகார இயல்கள்

 

நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு,

மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம்

உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம்,

தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.

 

1. நூல் மரபு, 2. மொழி மரபு, 3. பிறப்பியல், 4. புணரியல், 5 தொகை மரபு, 6 உருபியல், 7. உயிர்மயங்கியல், 8. புள்ளி மயங்கியல், 9. குற்றியல் உகரப் புணரியல் ஆகியன எழுத்ததிகார இயல்கள்.

+++

சொல்லதிகார இயல்கள்

கிளவி ஆக்கமே, கிளர் வேற்றுமையே

ஒளி வேற்றுமை மயக்கத்தோடு , விளி மரபு,

தேற்றும் பெயர், வினைச் சொல், சேரும் இடை, உரிச்சொல்,

தோற்றியிடும் எச்ச இயல், சொல்.

1. கிளவியாக்கம், 2. வேற்றுமை இயல், 3. வேற்றுமை மயங்கியல், 4. விளிமரபு, 5. பெயரியல், 6. வினையியல், 7. இடையியல், 8. உரியியல், 9. எச்சவியல் ஆகியன சொல்லதிகார இயல்களாம்.

+++

பொருளதிகார இயல்கள்

ஈட்டும் அகத்திணையும், ஏய்ந்த புறத்திணையும்,

காட்டும் களவு இயலும், கற்பு இயலும் மீட்டும்

பொருள் இயல், மெய்ப்பாடு, உவமம், போற்றிய செய்யுள்,

மரபு இயலும், ஆம் பொருளின் வைப்பு.

1. அகத்திணை இயல், 2. புறத்திணையியல், 3. களவியல், 4. கற்பியல், 5. பொருளியல், 6. மெய்ப்பாட்டியல், 7. உவமை இயல், 8. செய்யுள் இயல், 9. மரபியல் ஆகியன பொருளாதிகார இயல்களாகும்.

+++

நூற்பா அளவு

எழுத்து அதிகாரத்துச் சூத்திரங்கள் எல்லாம்

ஒழுக்கிய ஒன்பது ஒத்துள்ளும், வழுக்கு இன்றி

நானூற்று இரு-நாற்பான் மூன்று என்று நாவலர்கள்

மேல் நூற்று வைத்தார் விரித்து.

தோடு அவிழ் பூங்கோதாய்! சொல் அதிகாரத்துள்

கூடிய ஒன்பது இயல் கூற்றிற்கும் பாடம் ஆம்

நானூற்று அறுபத்து நான்கே நல் நூற்பாக்கள்

மேல் நூற்று வைத்தனவாமே.

 

கிளவி ஓர் அறுபான் இரண்டு; வேற்றுமையில்

  கிளர் இருபஃது இரண்டு; ஏழ்-ஐந்து

உள மயங்கு இயலாம்; விளியின் முப்பான் ஏழ்;

  உயர் பெயர் நாற்பதின் மூன்று;

தெளி வினை இயல் ஐம்பானுடன் ஒன்று;

  செறி இடை இயலின் நாற்பான் எட்டு;

ஒளிர் உரி இயல் ஒன்பதிற்றுப் பத்துடன் எட்டு;

  ஒழிபு அறுபான் ஏழ்.

 

 பூமலர் மென் கூந்தால்! பொருள் இயலின் சூத்திரங்கள்

ஆவ அறு நூற்று அறுபத்து ஐந்து ஆகும்; மூவகையால்

ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃது என்ப,

பாயிரத் தொல்காப்பியம் கற்பார்.

 

[சில நூற்பாக்களை 2 அல்லது 3 ஆக பிரித்தமையால் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபாடுள்ளன. மொத்த நூற்பாக்கள் இளம்பூரணாரின் கருத்துக்கு இணங்க 1595உம் நச்சினார்க்கினியர் கருத்துக்கு இணங்க 1611-ம் ஆகும்.]

தரவு : தமிழ்ச்சிமிழ்