(சித்திரை14, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 27, 2014 இதழின் தொடர்ச்சி)

 ilakkuvanar01

76. உப்பகாரம் ஒன்றென மொழிய

இருவயின் நிலையும் பொருட்டாகும்மே.

உப்பகாரம் = பு, ஒன்று என மொழிப = ஒரு மொழிக்கு ஈறாகும் என்ற கூறுவர். இருவயின் நிலையும் = தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும், பொருட்டாகும் = பொருண்மைத்தாகும்.

காட்டு: தபு : இஃது ஒலியைத் தாழ்த்திச் சொல்ல ‘நீ சா’ எனத் தன்வினையாகும்; ஒலியை உயர்த்திச் சொல்ல நீ ஒன்றனைக் கொல் எனப் பிறவினையாகப் பொருள் தரும்.

‘பு’ எனும் இறுதியைக் கொண்டுள்ள ஈரெழுத்து ஒருமொழி ‘தபு’ எனும் ஒன்றேயாம்.

77. எஞ்சியவெல்லாம் எஞ்சுதல் இலவே.

எஞ்சிய எல்லாம் = மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர்மெய்கள் எல்லாம். எஞ்சுதல் இலவே = தம் பெயர் கூறும் வழி ஈறாக வருவதற்குக் குறைதல் இலை.

இன்னின்ன மெய்களோடு இன்னின்ன உயிர்கள் ஈறாக வரும் என்று கூறப்பட்டன. இங்ஙனம் கூறப்படாதனத் தம் பெயர் கூறும் வழியே ஈறாக வரும் என்பதாம்.

 காட்டு: ஙௌ, கொ, நு.வூ,

 இதுகாறும் சொல்லின் இறுதியில் வரும் உயிர்களைப்பற்றிக் கூறிய ஆசிரியர் இனி, சொல்லின் இறுதியில் வரும் மெய்களைப் பற்றிக் கூறத் தொடங்குகின்றார்.

மொழியீறாகும் மெய்கள்

78. ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி.

ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் எனும் பதினோரு மெய்கள் தாம் சொல்லின் இறுதியில் வரும்.

ங், க், ச், ட், த், ப், ற் எனும் ஏழு மெய்களும் தமிழில் சொல்லின் இறுதியில் வாரா.

79. உச்சகாரமொடு நகாரம் சிவணும்.

 உச்சகாரமொடு – உகரத்தோடு கூடிய சகாரத்தோடு (‘சு’வோடு), நகாரம் சிவணும் – நகாரம் பொருந்தும், (இரு மொழியில் ஈறாக வரும் என்பதாம்)

 காட்டு: பொருந் (போலச் செய்.)

வெரிந் (முதுகு)

 80. உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே.

அப்பொருள் இரட்டாத இவணையான.

 உப்பகாரமொடு = உகரத்தோடு கூடிய பகரத்தோடு (‘பு’ எனும் எழுத்தோடு) ஞகாரையும் அற்றே = ஞகரமும் அத்தன்மையதாய் ஒரு மொழியில் ஈறாக வரும். அப்பொருள் இரட்டாது இவணையான = இவ்விடத்து அதன் பொருள் இரு தன்மையாக வராது.

 ‘தபு’ இருபொருள் தந்தது போன்று ‘ஞ்’ இறுதியாக உள்ள சொல் (உரிஞ்) இருபொருள் தராது.

81. வகரக்கிளவி நான்மொழி ஈற்றது.

 வகரக்கிளவி = வகரம் என்னும் எழுத்து (வ்) நான்மொழி = நான்கு சொற்களில், ஈற்றது = இறுதியாக வரும் தன்மையது.

 காட்டு: அவ், இவ், உவ், தெவ்

(கிளவி = சொல்; ஆகு பெயரால் எழுத்தைக் குறித்து நின்றது.)

82. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த

னகரத் தொடர் மொழி ஒன்பஃது என்ப

புகர் அறக்கிளந்த அஃறிணை மேன.

 புகர் அறக்கிளந்த = குற்றம் நீங்கச் சொல்லப்பட்ட, அஃறிணை மேன = அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி = மகர ஈற்று தொடர்மொழியோடு, மயங்குதல் வரைந்த = மயங்குதலினின்றும் நீங்கிய, னகரத் தொடர்மொழி = னகர ஈற்றுத் தொடர்மொழி, ஒன்பது என்ப = ஒன்பது என்று சொல்வுர்.

 ‘ன்’ இறுதியாக நிற்கும் இடத்தில் ‘ம்’ நிற்கும் இதனைப் பிற்காலத்தார் போலி என்றனர். ஆசிரியர் தொல்காப்பியர் இவ்வாறு ஒன்று நிற்குமிடத்தில் ஒன்று நிற்பதை மயங்கி வருதல் என்றனர். இவை ஒன்றுக்கு ஒன்று மயங்காத இடங்கள் ஒன்பது என்று வரையறுத்துக் கூறியுள்ளார். இது அவருடைய மொழிநூற் புலமையைக் காட்டும். அச்சொற்கள் ஒன்பதும் பின் வருவன:-

 உகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின் கடான், வயான்.