–          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழின் தொடர்ச்சி)

 

எழுத்துப் படலம்

நூன்மரபு

எழுத்துப்படலத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் இயல் நூன்மரபாகும். நூல் எழுதுவதற்கு வேண்டப்படும் எழுத்துகளைப் பற்றிக் கூறுவதனால் இவ்வியல் நூன்மரபு எனும் பெயரைப் பெற்றுள்ளது. இதில் கூறப்படுகின்ற இலக்கணம் சொற்களிடையே நிற்கும் எழுத்திற்கு அன்றித் தனியாக நிற்கும் எழுத்திற்குஆகும் என அறிதல் வேண்டும்.

க.       எழுத்து எனப்படுப

அகரம் முதல் னகர இறுவாய்

என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

 

  இந்நூற்பா தமிழ் எழுத்துகள்  முப்பத்து மூன்று என உரைக்கின்றது. அவற்றுள் முதல் எழுத்து முப்பதும் சார்பு எழுத்து மூன்றும் ஆம். ‘முதல் எழுத்து’ என நூற்பாவில் இல்லையானாலும், சார்பெழுத்து மூன்றும் சேராதபோது எழுத்துகள் முப்பது என்றமையால், அம் முப்பதும் முதல் எனப்பட்டன.

  பன்னிரண்டு உயிர்கள், பதினெட்டு மெய்கள், அ முதலாக ஔ இறுதியாகப் பன்னிரண்டு உயிர்களும் க முதலாக ன இறுதியாகப் பதினெட்டு மெய்களும்தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் உள்ளன. அதனால்தான் எழுத்து என்று சொல்லப்படுவன என்னும்  பொருளில்  எழுத்தெனப்படுப எனக் கூறப்பட்டுள்ளது.

 

உ.

அவைதாம்

குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற

முப்பாற்புள்ளியும் எழுத்துஓர் அன்ன

 

  மேல் நூற்பாவில் சார்ந்துவரும் எனக்கூறப்பட்டவைதாம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பனவாகும். இவை மூன்றில் ஆய்தம் ஒன்றுக்குத்தான் வரிவடிவம்  (எழுத்து) உண்டு. அவ்வடிவமும் மூன்று புள்ளிகளாக(ஃ) இருக்கும். ஏனை இரண்டுக்கும் வரிவடிவங்கள் இல்லை.

  ஆகவே, தமிழில் எழுத்துகள் முப்பத்து ஒன்றுதான். நம் தமிழில் ஆங்கிலத்தைவிட ஐந்து எழுத்துகள் கூடுவதற்குக் காரணம் உயிரில் குறில் நெடில் எனும் பிரிவு இருப்பதனால்தான். ஆங்கிலத்தில் ஒரே எழுத்துக் குறிலாகவும் நெடிலாகவும் இருப்பதனால் ஐந்து எழுத்துகள் குறைந்தாலும் ஆங்கிலம் ஒலிப்பு முறையில் குறைபாடு உடையதாகவேயுள்ளது.

  தமிழில் எழுத்துகள் எத்தனை என்றால் முப்பத்தொன்று என்றுதான் கூறுதல் வேண்டும். உயிர் மெய் எழுத்துகள் (12X18)216 ஐயும் சேர்த்து 247 எனக் கூறுதல் தவறுடைத்தாகும்.

  வேற்றுமொழிச் சொற்களை ஒலிப்பதற்காக ‘ஷ, ஜ, க்ஷ, ஹ, ஸ’ போன்ற எழுத்துகளைத் தமிழில் சேர்த்து எழுதுவதும் மொழிநூல் முறைக்கு மாறுபட்டதாகும். ஆங்கிலத்தில் நம் தமிழ் என்ற சொல்லை ‘டமில்’ என்றுதான் எழுதியும் ஒலித்தும் வருகின்றனர்களேயன்றி, அங்கு இல்லாத ‘த’, ‘ழ’ என்னும் எழுத்துகளை இங்கிருந்து கடன் பெறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும்.

வேற்றுமொழி ஒலிகளைத் தமிழ் ஒலிப்புமுறைக்கேற்பத் தமிழ் எழுத்துகளால்  எழுதவேண்டும் என்பது தொல்காப்பியர் ஆணையும் ஆகும். தொல்காப்பியர் கூறுகின்றார்

 வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

(தொல்.சொல்.401)

தமிழோடு தொடர்புகொண்ட முதல் அயல்மொழி ஆரியமேயாகும். அது வடநாட்டில் வழங்கியமையால் வடமொழி எனப்பட்டது; தொல்காப்பியர் காலத்தில்தான் தெற்கே வழங்கத் தொடங்கியது. அம்  மொழிச் சொற்களை எடுத்தாளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால் அம் மொழிக்குரிய ஒலிகளை அகற்றிவிட்டுத் தமிழ்ஒலி கூட்டித் தமிழ் எழுத்தால் எழுத வேண்டும் என்பது தொல்காப்பிய விதியாகும். ஏனைய மொழிகளிலும்  கையாளும் முறையாகும். ஆகவே வேற்றுமொழி ஒலிகளைத் தமிழில் அப்படியே ஒலிக்க வேண்டுமென்று கருதுவதும் அதற்காக வேற்றுமொழி எழுத்துகளைக் கடன்பெற வேண்டுமென்பதும் அல்லது, புதிதாக எழுத்துகளைப் படைத்துக் கொள்ள வேண்டுமென்பதும் சற்றும் பொருந்தாது; மொழிநூன்முறைக்கு ஒத்ததும் ஆகாது. ஏனெனில் தமிழில் இல்லாத வேற்று மொழி ஒலிகளை எல்லாம் அம்மொழி ஒலிகளில் உள்ளவாறே ஒலிக்க வேண்டும் என்று கருதிக் கடன்பெறவோ, புதிதாக  உண்டுபண்ணவோ முயல்வோமானால், தமிழ் நெடுங்கணக்கு(எழுத்துமுறை) அளவின்றிப் பல்கிப் பெருகும் என்பதில் ஐயமின்று. ஆதலின் தமிழில் உள்ள முப்பத்தொரு எழுத்துகளைக் கொண்டேதான் நாம் வேற்றுமொழி ஒலிகளையும் எழுதுதல் வேண்டும்.

குறள் நெறி

இடைக்காலத்தில் ஆரிய மொழிச் செல்வாக்கு மிகுந்திருநத காலத்தில் மொழிநூன்முறையறியார், ‘ஷ, ஜ, க்ஷ, ஹ, ஸ’ போன்ற எழுத்துகளைப் படைத்துவிட்டனர்.   அவற்றை அறவே நாம் இன்று நீக்குதல் வேண்டும். அவற்றைப் பயன்படுத்துவதைக் கண்டுதான் சிலர், தமிழில் இல்லாத ஆங்கில ‘f, z’  போன்ற எழுத்துகளையும் தமிழில் சேர்க்கவேண்டுமென்கின்றனர். ஆதலின் வேற்று மொழிகளின் சொற்களைத் தமிழ் ஒலிமுறையோடு பொருந்தாதவிடத்துத் தமிழ் ஒலிப்படுத்தித்தான் பயன்படுத்துதல் வேண்டும் என்பதை உளத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(தொடரும்)

  நன்றி : குறள்நெறி 15.2.64