கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

வாய்மேடு தந்த வண்டமிழ்ப் புலவர்

தாய்த்தமிழ் மொழிக்கே தம்மை ஈந்தவர்!

தந்தை பெரியார் தன்மானக் கொள்கையைச்

சிந்தையில் கொண்ட செந்தமிழ்ச் செம்மல்!

மான மறவர்! மாத்தமிழ் அறிஞர்!பேராசிரியர் இலக்குவனார்

வானப் புகழார் வள்ளுவர் கருத்தைக்

குறள்நெறி ஏட்டின் கொள்கையாய்க் கொண்டு

அறநெறி தழைக்க அயரா துழைத்தவர்!

ஒல்காப் புகழுடை ஒப்பிலா நூலாம்

தொல்காப் பியத்தை ஆங்கில மொழியில்

படைத்துத் தனிப்புகழ் பெற்ற முனைவர்!

படைதிரட்டிப் பைந்தமிழ் காக்கப் போரிட்டார்!

இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றதால்

இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் பிடியினால்

வெஞ்சிறை ஏகிய வீரத்தமிழர்!

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் மறுபதிப்பு!

குற்றம் கண்டால் கொதித்து எழுந்திடும்

நற்றமிழ் நக்கீரர்! நாவன்மை மிக்கவர்!

செந்தமிழ்க் கவிஞர் எழுத்தாளர் பேரவை

சென்னையில் நிறுவி அந்த அமைப்புக்கு

என்னைச் செயலர் ஆக்கி மகிழ்ந்தவர்!

பன்னரும் ஆற்றல் பளிச்சிடும் அவரிடம்!

அறிஞர் அண்ணா அணிந்துரை பெற்று

செறிவுடை நூலை வெளியிட்ட அறிஞர்!

தன்னலம் பாராத் தகுமிகு அண்ணல்!

இந்நில உலகம் இருக்கும் வரைக்கும்

இலக்குவனார் புகழ் வாழ்க வாழ்கவே!