எழுத்துப்படலம்

   –          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 (முந்தைய இதழின் தொடர்ச்சி)

 

நூன்மரபு

 

3.   அவற்றுள்

    அ, இ,உ,

    எ, ஒ என்னும் அப்பால்  ஐந்தும்

    ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப

 

4. ஆ, ஈ, ஊ,  ஏ, ஐ 

   ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்

   ஈர்  அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப

 

   பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து  நெட்டெழுத்து என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும் நெட்டெழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரையும் வேண்டப்படும். (மாத்திரை என்ன என்பதுபற்றிப் பின்னர் விளக்கப்படும்).

 வ்வாறு உயிர் எழுத்துகளைக் குறிலாகவும்  நெடிலாகவும் வகைசெய்து அமைத்துக் கொண்டமையின் எழுத்துகளை ஒலிக்குங்கால் இடர்ப்பாடு தோன்றாது. ஆங்கிலத்தில் ஒரே எழுத்து, குறிலாகவும் நெடிலாகவும் இடத்திற்கு ஏற்ப ஒலிப்பதால் ஏற்படும் இடர்ப்பாட்டை நாம் அறிவோம்.

 

5.  மூவளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே

 

  மூன்று மாத்திரை அளவு கொண்ட தனி எழுத்து, தமிழில் இல்லை. இரண்டு மாத்திரைக்குமேல் ஒலிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்பது அடுத்த நூற்பாவில் கூறப்படுகின்றது.

 

6. நீட்டம் வேண்டி அவ்வளவு உடைய

   கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

 

  நெடில் எழுத்துக்கு வரையறுக்கப்பட்ட இரண்டு மாத்திரைக்குமேல் ஓர் எழுத்தை ஒலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், எவ்வளவு மாத்திரை  நீட்ட வேண்டுமோ அவ்வளவு மாத்திரையுள்ள குறில்களைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும். ஆ என்னும்கால் மூன்று மாத்திரையளவு ஒலிக்க வேண்டுமானால் ஆஅ என்று (2+1) ஒலிக்க வேண்டும். நான்கு மாத்திரைகள் வேண்டுமென்றால், ஆஅஅ என ஒலிக்கவும் வேண்டும்; எழுதவும் வேண்டும்.

   மாத்திரையை மிகுத்து ஒலிக்க வேண்டிய இடங்கள், பாட்டு, பண்டமாற்றுக்கூப்பாடு, பிறரைக் கூப்பிடுதல் முதலியனவாம்.

 காட்டுகள் : தமிழேஎஎ வாழ்க – பாட்டு

                          உப்போஒஒ உப்பு – பண்டமாற்று

                          முருகாஅஅ – கூப்பிடுதல்

7. கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே

 

  மாத்திரையின் அளவு ஒருமுறை கண்களை இமைத்தற்கும், கைவிரலை நொடிப்பதற்கும் எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரமாகும். ஆதலின் ஒரு மாத்திரை நேரம் என்பது ஒருமுறை கண்இமைப்பதற்கோ கைவிரலை நொடிப்பதற்கோ வேண்டப்படும் நேரமாகும். ‘மாத்திரை’   என்பது தூயதமிழ்ச்சொல். ‘மா’ என்பதன் அடையாளமாகத்  தோன்றியுள்ளது. இச் செயல் வடமொழிக்கண் சென்றுள்ளது.

8. ஔகார இறுவாய்ப்

பன்னீரெழுத்தும் உயிர் என மொழிப

 

  அ முதல் ஔ இறுதியாக உள்ள  பன்னிரண்டையும் உயிர எழுத்து என்று கூறுவார்கள்.

 

  தொல்காப்பியர்க்கு முன்பே எழுத்துகளை உயிர் என்றும் மெய் என்றும் பிரி்த்து வழங்கியுள்ளனர். அதனால்தான் ‘மொழிப’ என்று ஆசிரியர்  சுட்டியுள்ளார். எழுத்துகளை உயிர் என்றும் மெய் என்றும் பிரித்திருக்கும் நயம் அறியத்தக்கது. நம் உடல் உயிரால்தான் இயங்குகின்றது. உயிர்போயின் உடல் அசைவற்று விடுகின்றது. உயிர் வேறு உடல் வேறு என்பது மெய்யுணர்வின்பாற்படும். இம்மெய்யுணர்வு தலைப்பட்டு வாழ்ந்த தமிழர் தம் மொழி எழுத்துகளையும் உயிர் என்றும் மெய் என்றும் பாகுபாடு செய்துள்ளனர். உயிர் போன்று ஒலிப்பதற்கு அடிப்படையாக உள்ள எழுத்துகளை உயிர் என்றதும் உயிரின் துணையால் இயகங்கும் மெய் (உடல்) போன்று உயிர் எழுத்தின் துணையால் ஒலிக்கும் எழுத்துகளை மெய் என்றதும் உவமையாகு பெயராகும்.

  இப் பாகுபாட்டை மொழிநூல் அறிஞர் டாக்டர் கால்டுவெல் மிகவும்புகழ்ந்து பாராட்டியுள்ளார். (திராவிட  மொழிகளின் ஒப்பிலக்கணம் – ஆங்கிலம் பக்கம் 132)

 

10. மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா

 

  உயிரும் மெய்யும் சேர்ந்து உண்டாகும் எழுத்து உயிர்மெய் எனப்பட்டது. உயிர், மெய்யோடு சேர்ந்து ஒலித்தாலும் உயிர் எழுத்துகளின் தன்மை மாறுபடாது. உயிர்க்கு உள்ள மாத்திரையே உயிர் மெய்க்கும் ஆகும். ‘கா’ என்பதில் க் + ஆ எனும் இரண்டும் சேர்ந்திருப்பினும் ஆவின் மாத்திரையாகிய இரண்டுதான் காவிற்கும் என அறிதல் வேண்டும்.

 

11.  மெய்யின் அளபே அரை என மொழிப

 

  மெய் எழுத்திற்கு அரை மாத்திரை உண்டு என்று கூறுவார்கள். மெய் எழுத்தைத் தனியாகக் கூறும்போது அதற்கு அரைமாத்திரை ஒலி வேண்டப்படும்.

 

12. அவ்வியல் நிலையும் ஏனை  மூன்றே

  (முதல் எழுத்துகள் முப்பதும்  நீங்க) ஏனைய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பு எழுத்துகள ஒவ்வொன்றும் அரை மாத்திரையே ஒலி பெறும்.

(தொடரும்)

குறள்நெறி 01.03.1964