பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 (முந்தைய இதழின் தொடர்ச்சி)

நூன் மரபு :

13.

அரையளபு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகும் தெரியும் காலை.

மகரமெய்(ம்), தனக்குரிய அரை மாத்திரையிலும் குறுகி ஒலித்தலைப் பெற்றுள்ளது. ஆராயுமிடத்து, அஃது அவ்வாறு ஒலிக்கும் இடம் சிறுபான்மையாகி வரும். வேறொரு மெய்யோடு சேர்ந்து வருங்கால் அவ்வாறு ஒலிக்கும்.

 ‘போலும்’ என்பது செய்யுளில் ‘போன்ம்’ என வரும். இதில் உள்ள ‘ம்’ அரை மாத்திரை பெறாது. கால்மாத்திரையே பெறும் என்பர்.

 14.

உட்பெறு புள்ளி உருவாகும்மே.

 மாத்திரை குறைந்து ஒலிக்கும் மகரத்திற்கு வரிவடிவம், உள்ளே  புள்ளி பெற்ற வடிவமாகும். இவ்வடிவம் இய்பொழுது வழக்கில் இன்று.

 15.

 மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.

தனி மெய்யெழுத்தினது வடிவ இயல்பு புள்ளி பெற்று நிற்பதாகும்.

புள்ளி பெறுவதால், மெய்யெழுத்து, ‘புள்ளி’ என்றே அழைக்கப்பெறும். மெய்யெழுத்தின் புணர்ச்சிபற்றிக் கூறும் இயலைப் புள்ளிமயங்கியல் என்றே ஆசிரியர் அழைத்துள்ளார்.

 16.

எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.

எகரமும் ஒகரமும் அவ்வாறு புள்ளி பெற்று வரும் இயல்பினைப் பெற்றுள்ளன.

குற்றெழுத்துகளாம் எ, ஒ, இரண்டும் முன்பு  புள்ளியிட்டு எழுதப்பட்டன. அவை நெடிலாகும் பொழுது புள்ளிகளை இழந்து எ, ஒ, (தற்போதைய குறில்கள்) என நின்றன.

வீரமாமுனிவர் புள்ளியற்றிருக்கும் நிலையைக்  குறிலாக்கி, ஏ, ஓ என்பனவற்றை நெடிலாக்கினார் என்பர்.

 17.

புள்ளி இல்லா எல்லா மெய்யும்

உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும்

ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்

ஆயீரியல் உயிர்த்தல் ஆறே.

மெய்யெழுத்துகள் உயிர்களோடு சேர்ந்து ஒலிக்குங்கால் அவற்றின் வடிவங்களின் நிலையை இந்நூற்பா கூறுகின்றது. ‘மெய்’ அகர உயிரோடு சேருங்கால் புள்ளியை இழந்து நிற்கின்றது. க் + அ = க. மெய் பிற  உயிரோடு சேருங்கால் வடிவம் வேறுபடுகின்றது. க் + ஆ = கா. இவ்வாறு இரண்டு வகையில் உயிர்மெய்யெழுத்துகள் உருவாகின்றன.

ஆங்கிலத்தில் உயிரும் மெய்யும் தனிதனியாக எழுதப்படுகின்றன. ‘முருகன்’ என்பதை ஆங்கிலத்தில் MURUGAN என்று எழுதுகின்றோம். தமிழிலும் அவ்வாறே எழுதினால் ‘ம்உர்உக்அன்’  என்று எழுத வேண்டும். இவ்வாறு எழுதினால் காலக்கேடும்இடப்பெருக்கமும் முயற்சியிழப்பும் உளவாகுமன்றோ? ஆதலின் நம் தமிழ் முன்னோர்கள் உயிர் மெய் எழுத்தை மெய்யெழுத்தினின்றே உருவாக்கி உதவினர். ஆயினும் உயிர்மெய் எழுத்து உயிரும் மெய்யும்கூடிய வரிவடிமாதலின் அதனைத் தனியெழுத்து எனக் கணக்கிட்டாரிலர். முதல் எழுத்து முப்பது என்றே கூறினர். உயிர்மெய் 216ஐயும் கணக்கில் சேர்த்திலர். நாமும் சேர்த்தல்கூடாது என்பதனை நினைவிற்கொள்ளல் வேண்டும்.

18.

மெய்யின் வழியது உயிர்தோன்றும் நிலையே

‘உயிர்மெய்’ எழுத்தில் உயிர், மெய்யின்பின்னர்த் தோன்றும். ‘க’ எனும் உயிர்மெய்யில் ‘க்’ முன்னரும் ‘அ’ பின்னரும் ஒலிப்பது காண்க.

அன்றியும் சொற்கள் ஒன்றோடொன்று சேருமிடத்து, மொழிமுதல் கடைகூற வேண்டும். அப்பொழுது முன்னே உள்ளது ‘மெய்’ என்றும் பின்னே உள்ளது ‘உயிர்’ என்றும் கூறுதல் வேண்டும். ‘கிளி’ என்னும் சொல்லில் ‘க்’ மொழி முதலாகும். ‘இ’ மொழி இறுதியாகும்.

19.

வல் எழுத்து என்ப க, ச, ட, த, ப, ற.

 மெய்யெழுத்துகளை ஒலிப்பு முறையால் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்திக் கூறுகின்றார்.

க, ச, ட, த, ப, ற என்பன  வல்லெழுத்துகள் எனப்படும்.

 20.

மெல்லெழுத்து என்ப ங, ஞ, ண, ந, ம, ன

ங, ஞ, ண, ந, ம, மெய்யெழுத்துகள் என்று சொல்லப்படும்.

(தொடரும்)

குறள்நெறி 15.03.1964