– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

முன்னுரை

நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.

வடமொழியாளர் தமிழகத்தில் புகுந்த காலத்திலேயே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். வட மொழியாளர் தென்னகம் நோக்கிப் புறப்பட்ட காலம் கி.மு.பத்தாம்  நூற்றாண்டு என்பர் வரலாற்றாசிரியர். அந் நூற்றாண்டில் அவர்கள் தொடங்கிய தென்னகச் செலவு விரைந்து நிகழ்ந்திருத்தல் இயலாது. சிறு சிறு கூட்டத்தினராய் மெல்லவே வந்து குடி யேறி இருத்தல் வேண்டும். அவ்வாறு வந்து தமிழகத்தில் குடியேறியமை முற்றுப் பெற்ற காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். ‘ச’ தமிழ்ச்சொல்லின் முதல் எழுத்தாக வாராத காலத்திலும், யவனர்கள் இந்நாட்டில் புகாத நாளிலும், சமண புத்த சமயங்கள் தோன்றுவதற்கு முன்பும், நாணய வழக்கு ஏற்படுவதற்கு முன்னரும், தொல்காப்பியம் தோன்றியிருத்தல் வேண்டும். (கால ஆராய்ச்சியின் விரிவு எம் ஆங்கிலத் தொல்காப்பியத்தில் காண்க.)

வடமொழித் தொடர்பால் தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். “தொல்காப்பியம் ” எனும் பெயரே, “பழமையான மரபுகளைக் காப்பது” எனும் பொருளைத் தரும். இந்நூலை இப்பெயருடன் இயற்றியதனால்தான் – ‘தொல்காப்பியம்’ எனும் நூலை இயற்றியதால்தான் – தொல்காப்பியர் எனும் பெயர் நூலாசிரியர்க்கு ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

“தொல்காப்பியம்” எனும் நூலை இயற்றியதனால், ‘தொல்காப்பியன்’  என அழைக்கப்பட்டார் என்பது இந்நூலுக்குப் பனம்பாரனார் எழுதியுள்ள பாயிரத்தாலும் அழியலாகும். “தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று பனம்பாரனார் கூறுகின்றார். ‘தொல்காப்பியம்’ இயற்றியமையால் ‘தொல்காப்பியர்’ என அழைக்கப்பட்ட பின்னர் அவரின் இயற்பெயர் காலப்போக்கில் மறைந்துவிட்டது போலும். ஆதலின் நூலின் பெயர் தொல்காப்பியம்; ‘தொல்காப்பியம்’ எனும் நூலை இயற்றியமையால் அதன் ஆசிரியர் தொல்காப்பியர் என அழைக்கப்பட்டார் என்பதே  சாலப் பொருந்தும் எனத் தெளியலாம்.பழைய காப்பியக் குடியில் தோன்றியமையால் ‘தொல்காப்பியர்’ என அழைக்கப்பட்டு அப்பெயரால், அவர் நூல் ‘தொல்காப்பியம்’ என அழைக்கப்பட்டு வந்துள்ளது என்பது பொருந்தாது என்பது எளிதிற் புலனாகும்.

சமதக்கினி முனிவர் புதல்வர் திரணதூமாக்கினி என்பதெல்லாம் புராண நூலாரின் புனைந்துரையாகும்.

வேற்றுமொழி வரவால் தமிழ் அழிந்துபடாமல் காக்க, அவர் காலத்தில் நிலவிய இலக்கிய இலக்கணங்களைக் கற்று, ஆராய்ந்து, ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியம் எனும் உயர்நூலை இயற்றிய இப்பெரியார் கி.மு.ஆறாம்  நூற்றாண்டிற்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ப் பெருங்காவலர் ஆவார். பரதகண்டம் முழுவதும் – இமயம் முதல் குமரி வரை – ஒருகாலத்து நிலவி ஆட்சி புரிந்த தமிழ், வடமொழியின் கூட்டுறவால் ஆங்காங்குச் சிதைந்து மறைந்து புதுப்புது மொழிகள் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மையாகும். தொல்காப்பியர் போன்ற பெரும்புலவர்கள் ஆங்காங்குத் தோன்றி, மொழியைக் காத்திருப்பரேல், இன்று இந்தியாவின் தனி ஆட்சிமொழியாகத் தமிழ் தனியரசோச்சும் தனி நிலை பெற்றிருந்திருக்கும்.

வடவேங்கடம் தென்குமரியாயிடையேனும் தமிழ் நிலைத்திருக்குமாறு  செய்த பெருமை தொல்காப்பியரையே சாரும். ஆகவே, தமிழின் தனிப்பெரும் முதற்காவலர் எனத் தொல்காப்பியரைப்  போற்றிப் புகழ்தல் நம்மனோர் நற்பெருங்கடனாகும். அவர் வழி நின்று நம்  வண்டமிழைக் காக்க உறுதி கொண்டு தொல்காப்பியத்தைக் கற்றல் தமிழராய்ப் பிறந்தோர் அனைவரின் பிறவிப் பெருங்கடனாகும்.  தொல்காப்பியத்தைப் பற்றி நாவலர், நற்றமிழ்க்கணக்காயர் சோமசுந்தரபாரதியார் கூறுகின்றார்,  “அது (தொல்காப்பியம்) ஆரியப் பாணினிக்கும் தூரிய மேல்புவன அரித்தாட்டிலுக்கும் காலத்தால் முந்திய தொன்மையுடையது. பாணினியின் செறிவும், பதஞ்சலியின் திட்பமும், அரித்தாட்டிலின் தெளிவும், அவையனைத்திலுமில்லா வளமும் வனப்பும் அளவை நூன் முறையமைப்பும்பெற்றுச் செறிவும்  தெளிவும் நெறியில் நெகிழ்வும் நிரம்பியமைந்தது.”

(தொடரும்)

நன்றி : குறள்நெறி 15.01.1964