தொல்காப்பியர் வரலாற்று நோக்கு

பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம் குறித்து தெரிவிக்கப்பட வில்லை. தொல்காப்பியத்தின் வாயிலாக அறியக் கிடைக்கும் தொல் தமிழர் வரலாற்றைப் பின்வரும் தலைப்புகளில் வகுக்கலாம்.

1. தமிழக நிலப்பகுதி 2. தமிழக மக்கள் 3. மன்பதை வாழ்க்கை 4. சமய வாழ்க்கை 5. அரசியல் வாழ்க்கை 6. மொழியும் இலக்கியமும் 1. தமிழக நிலப்பகுதி தொல்காப்பியப் பாயிரத்தில், பனம்பாரனார் தமிழ்நாடு வடக்கே வேங்கடத்திற்கும், தெற்கே குமரிக்கும் இடையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குமரி என்பது தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய ஒரு மலை எனச் சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கும் குறிப்பினால் காணலாம்(இயல் 11 வரிகள் 18-20).

நச்சினார்க்கினியர் கண்ணோட்டத்தில் இஃது ஓர் ஆறாகும் (எழுத்ததிகாரம் உரை பக்கம் 8). இந்நூலாசிரியர் கருத்துப்படி இப்போது இந்தியப் பெருங்கடல் என அழைக்கப்படுகின்ற கடலேயாகும். எனவே கிழக்கு, தெற்கு, மேற்கே முறையே குணகடல் (கிழக்குக்கடல்) குமரி, குடகடல் (மேற்குக் கடல்), ஆகியன எல்லைகளாக அமைந்து இருந்தன என முடிவு கட்டலாம்(புறநானூறு 17). குமரி, ‘உருகெழு குமரி’ (பேரச்சம் பொருந்திய குமரி) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என அழைக்கப்படுகிறது. பனம்பாரனாரின் பாயிர உரையிலும் தொல்காப்பிய மூலத்திலும் இன்றைய இலங்கை பற்றி எவ்வகைக் குறிப்பும் இன்மையால் இது (இலங்கை) முதன்மைத் தமிழ்நிலத்தின் பகுதியாக அமைந்திருந்தது எனலாம். சங்க இலக்கியத்தில் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கி அழிந்ததாகக் குறிப்புகள் உள்ளன(கலித்தொகை-104).

தமிழ்நாடு பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது (சொல்லதிகாரம் – 400). இப்போதைய முறைக்கு மாறாகப் புவியியல் நிலைமை அமையவில்லை. மலைகள், காடுகள், ஆறுகள், உயிரினங்கள், பயிரினங்கள் ஆகியன அவ்வாறாகவே உள்ளன. நிலம் புவியியல் பாகுபாடுகளுக்கு இணங்கக் காடுகளின் உலகம், மலைகளின் உலகம், நீர்நிலை உலகம், கடற்கரை உலகம் என்ற வகையில் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என அறியப்பட்டு இருந்தன(பொருளதிகாரம்-5). பாலை நிலம் காணப்படவில்லை. விலங்கினவகைமையும் இப்போதைய நிலையில் இருந்து மாறுபட்டதாக இல்லை(இயல் 9).

(Tholkaappiyam in English with critical studies By Prof.Dr.S.Ilakkuvanar – 2. Historical Study – pages 469-470)

– தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)