வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி

இணைந்து நடத்தும்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 1/5

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

 www.akaramuthala.in

DSC02323

  பள்ளிப்பருவத்திலேயே தமிழ்நலப்பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர் பேராசிரியச் செம்மல் முனைவர் சி.இலக்குவனார். தம் வாழ்நாளில் இறுதி வரை அத் தமிழ்ப்போராளி தம்முடைய தமிழ்சார் போராட்டப் பாதையில் இருந்து விலகவில்லை. பேச்சும் மூச்சும் தமிழாகக் கொண்டு வாழ்ந்தவர் அச்செந்தமிழ்ச் செம்மல். எண்ணம், எழுத்து, உரை, செயல் யாவும் தமிழ்நலமே எனத் திகழ்ந்தவர் அக் கொள்கைக் குன்று. ஆவர் ஆற்றிய பணிகள் தம் முன்னோர் வழியில் ஆழமாக ஆற்றியவையும் தம்வழியில் துடிப்பாகச் செயல்படுத்தியவையுமாகப் பல உள. இக்காலத் தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் முன்னோடிப் பணிச் செம்மல் பேராசிரியர் இலக்குவனார் என்பதை வளரும் தலைமுறையினர் அறிய வேண்டும். ஆதலின் பேராசிரியர் சி.இலக்குவனாரின்  முன்னோடித் தமிழ்ப்பணிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

  தமிழ் இலக்கியச் சிறப்பை அறியும் வகையிலும் அதன் பெருமையை உணரும் வகையிலும் கற்பிப்பதும் எழுதுவதும் பரப்புவதும் தமிழ்ப்பணிகள்தாம். தமிழின் நலம் கெடுக்கப்படும் இடங்களில் எல்லாம் தலையிட்டு எதிர்த்துக் கிளர்ச்சி செய்து காப்பதும் தமிழ்ப்பணிதான். தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் கிடைக்கும் வகையில் தொண்டாற்றுவதும் தமிழ்ப்பணிதான். மாணாக்கர், ஆசிரியர், இளைஞர், பொதுமக்கள் என அனைத்துத்  தரப்பாரிடமும் தமிழைப்பரப்புவதும் தமிழ்ப்பணிதான். விழாக்கள் மூலம் எழுச்சி ஊட்டுவதும் தமிழ்ப்பணிதான்.  தமிழுக்கு எதிராகத் திசைமாறிச் செல்பவர்களைத் தமிழின் பக்கம் ஆற்றுப்படுத்துவதும் தமிழ்ப்பணிதான். தமிழார்வலர்களுக்குக் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டுவதும் தமிழ்ப்பணிதான். தமிழ்த் தொண்டர்களை ஊக்குவித்து ஆற்றுப்படுத்துவதும் தமிழ்ப்பணிதான். தமிழ்த்தாய்க்கு வஞ்சகர்கள் நூல்கள் வழி ஏற்படுத்தும் களங்கத்தைப் போக்குவதும் தமிழ்ப்பணிதான். தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழன்பர்களைப் பெருக்குவதும் தமிழ்ப்பணிதான். நல்ல தமிழில் இதழ்கள் நடத்தி அவை மூலம் மக்கள் மனங்களில் நல்ல தமிழைப் பதியச் செய்வதும் தமிழ்ப்பணிதான். இத்தகைய பணிகளுள் ஒன்றோ சிலவோ ஆற்றிய  ஆன்றோர்கள் உள்ளனர். ஆனால், இத்தகைய எல்லாப் பணிகளையும் ஆற்றிய ஒரே சான்றோராகத் திகழ்பவர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்.

  “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பதற்கேற்பப் பேராசிரியர் இலக்குவனாரின் முற்போக்குச் செயல்களும் முன்னோடிப்பணிகளும் பள்ளிப்பருவத்திலேயே தொடங்கிவிட்டன எனலாம். கூந்தல்போல் வளர்ந்திருந்த முடியைக் கத்தரித்துக் கொண்ட இவரது செயல், இவர் படித்த உரத்தநாடு அரசர் மடம் பள்ளியிலேயே  புரட்சியாகக் கருதப்பட்டது. (தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்: பக்கம் 9-10) பணியில் இருக்கும்பொழுதும் வழக்கமான பள்ளி ஆசிரியர் உடைக்கு மாறாக இவர் அணிந்த மேனாட்டு உடை பிற தமிழாசிரியருக்கு  முன்னோடியாக இருந்தது. கல்லூரிப் பணியில் விசை  மிதிகையை (மோட்டார் பைக்) ஓட்டியது சூழலுக்கேற்ப வாழும் முறையைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும் எனப் பிறருக்கு முன்னோடியாக அமைந்தது. மாலை நேர விளையாட்டுகளில் ஈடுபட்டமை தமிழாசிரியர் என்றால் விளையாட்டு போன்றவற்றில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற தவறான போக்கைப் பிறரிடமிருந்து போக்கியது. இவ்வாறு பழக்க வழக்க நடைமுறைகளிலேயே முன்னோடியாக இருந்தவர் அனைத்துச் செயல்பாடுகளிலும் முன்னோடிப் பணியாற்றுநராக இருந்தார் என்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

  பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகளை  கல்விப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்புப்பணி, ஆராய்ச்சிப்பணி, தொல்காப்பியப் பரப்புரைப்பணி, சங்க இலக்கியப் பரப்புரைப்பணி, குறள்நெறிப் பரப்புரைப்பணி, இதழ்ப்பணி, அமைப்புப்பணி, செயலாக்கப்பணி, சொல்லாய்வுப்பணி, காலஆய்வுப் பணி,  ஆற்றுப்படுத்தும் பணி, தனித்தமிழ்ப்பணி, தமிழ்க்காப்புப்பணி, பிற பணி எனப் பலவகைப்படுத்தலாம்.

கல்விப்பணி

  பேரா.இலக்குவனார், படிக்கும் பொழுதே விடுமுறைக்காலங்களில் வாய்மேட்டில் சிலருக்குத் தனிக்கல்வி  அளித்தார். சிறு திண்ணைப்பள்ளிக்கூடமாக அஃது அமைந்தது. பள்ளிஇறுதிவகுப்புத் தேர்வு முடிந்ததும் தம்முடைய ஆசிரியர் தமிழறிஞர் களத்தில்  வென்றார் அவர்களுக்கு  அவருடைய ஊரான செங்கரையில் ஆங்கிலம் கற்பித்தார். இவை யாவும்  பயிற்றுவிக்கும் ஆர்வத்தையும் திறனையும் பேராசிரியரிடம் வளர்த்தன. எனவே, இவரது கல்விப்பணி இவரது பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம்.

  கல்விச்செம்மல் சி.இலக்குவனார்  அவர்கள் 16.07.1936 அன்று திருவாரூரிலுள்ள கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 25.12.1970 அன்று நாகர்கோயிலில் உள்ள தெ.தி.இந்துக்கல்லூரியல் முதல்வராகப் பணி ஓய்வு பெற்றார்.  5 பள்ளிகளிலும் 7 கல்லூரிகளிலும் பணியாற்றி உள்ளார். தனிப்பயிற்சிக் கல்லூரிகளும் நடத்தி உள்ளார்.

  பேராசிரியருக்கு வாய்த்த ஆசிரியர்கள் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பகுத்தறிவையும்  தமிழ்நெறியையும் இறை நம்பிக்கையையும் ஊட்டினர். இவர்களது வழியில் பேராசிரியரும் மாணாக்கர்களுக்கு ஒழுக்கத்தையும் பகுத்தறிவையும் தமிழ் உணர்வையும் சேர்த்துக் கற்பித்தார். ஆசிரியர்கள் வருகைப் பதிவு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள் வந்திருப்பதை ஆங்கிலத்தில் (‘Present Sir / Teacher’   அல்லது ‘Yes Sir’ எனச்) சொல்லும் முறையே பழக்கத்தில் இருந்தது. ‘உள்ளேன் ஐயா’ அல்லது ‘உள்ளேன் அம்மா’ எனத் தமிழில் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தி அதனைத் தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்தார்.  இது சிறு செயலாக இருப்பினும் தமிழ் உணர்வை மாணாக்கர்களிடையே விதைப்பதற்குரிய முன்னோடிப் பணியாக அமைந்தது.

  பிற துறைப் பாடங்களையும் தமிழ் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடியவர் பேராசிரியர் சி.இலக்குவனார். பயிற்றுமொழிக் காவலரான அவர், தமிழ்ப் பாடத்தைப் பிற மொழி வாயிலாகக் கற்பிக்கும் பொழுது அமைதி காப்பாரோ! ஆங்கிலம் வழியாகத் தமிழ் கற்பிப்பதைப் பெருமையாக எண்ணும் ஆசிரியர்களிடையே, ஆங்கிலப் புலமை இருப்பினும் தமிழ் வாயிலாகத்தான் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை முன் எடுத்துக்காட்டாக இருந்து உண்டாக்கினார்.

 தம் வகுப்பில் பாடம் நடத்துவதுடன் ஆசிரியப்பணி முடிந்து விட்டது எனப்  பேராசிரியர் எப்பொழுதும் கருதினாரல்லர்.  நல்ல நூல்களைப் படிக்குமாறு தூண்டுவார். அவற்றின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதச் செய்வார். தமிழ் மன்றம் முதலான அமைப்புகளில் மாணாக்கர்களை ஈடுபடச் செய்து, அவர்களின் சொற்பொழிவுத் திறனை வளர்ப்பார். அறிவியல் சிந்தனைகளை விதைத்து மூட நம்பிக்கைகளுக்கு  எதிராக மாணவர்க்ள விளங்கும்படிச் செய்வார். இந்தி மொழித் திணிப்பால் தமிழ், தமிழர் நலன் கெடுவதையும். அயல்மொழிச் செல்வாக்கால் நம் மொழி அழிவதையும் மாணாக்கர்களுக்கு  உணர்த்துவார். பிற மொழிச்  சொற்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தமிழ்ச்சொற்களுடன் அவற்றைக் கலப்பதன் மூலமும் தமிழ்ச் சொற்கள் சிதைவதையும் அழிவதையும் விளக்கிச் சொல்லாய்விற்கான ஆர்வத்தையும் ஈடுபடுத்துவார்.  கவிதை, கட்டுரை முதலான படைப்பு முயற்சிகளில்   பயிற்சி அளித்து ஆர்வத்தை ஏற்படுத்தி ஈடுபடச் செய்வார். தம் இதழ்களில் மாணாக்கர் படைப்புகளை வெளியிட்டு ஊக்கப்படுத்துவார். மாலை நேர வகுப்புகள் மூலமாகவும் தமிழ்க்கல்வியைப் பரப்பச் செய்வார். வேறு துறை கிடைக்கவில்லை எனக் கடைசிப் புகலிடமாகத் தமிழைப் படிக்க வராமல் ஆர்வத்துடன் தமிழ் கற்பிக்க வரும் தலைமுறையை உருவாக்கினார்.

  சம்பளத்திற்கேற்ற கல்விப்பணி என்றில்லாமல், இயன்ற பொழு தெல்லாம்  இயன்றவர்க்கெல்லாம் கல்வி யளிப்பதைக் கடமையாகக் கொண்டு முன்னோடி ஆசிரியராகத் திகழ்ந்தார்.

சொற்பொழிவுப்பணி

  பேராசிரியரின் சொற்பொழிவுப் பணியும் அவரது பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. பள்ளிப்பருவத்தில் மாணவர் கழகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் ஆற்றி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடைய  கை தட்டல்களையும் உற்சாக உரைகளையும் கேட்ட பேராசிரியருக்குச்  சொற்பொழிவு கைவந்த கலையாக மாறியதில் வியப்பில்லை. திருவையாற்றில் புலவர் கல்வி பயிலும்பொழுது, பேராசிரியருடன் அவரின் நெருங்கிய நண்பர்களான அ.கிருட்டிணமூர்த்தி, முருக இலக்குவன், அன்பு கணபதி ஆகியோர்  இணைந்து நால்வர் அணியாகத் தமிழ்ப்பரப்புரை மேற்கொண்டனர். சமயக் குரவர்களைப் போல் தமிழ்த்தொண்டர்களாக விளங்கி ஊர்தோறும் தூய தமிழ்ப் பற்றை வளர்த்தனர். முதலில் அன்பு கணபதியின் ஊரான விளாங்குடியில் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிவன் இரவு’ விழாவில் இவர்களின் பரப்புரை தொடங்கியது. விழித்திருக்க வேண்டிய கட்டாயத்தால்  சொற்பொழிவைக் கேட்க வந்த முதியோரும் இளைஞர்களும் இவர்களின் பேச்சால்  ஈர்க்கப்பட்டனர்; தமிழார்வலர்களாக மாறினர்; பொழிவு வீண் போகவில்லை என்ற நம்பிக்கையை இவர்களுக்கு ஏற்படுத்தினர். எனவே, பயன்குறித்துக் கருதிப்பார்க்காமல் தமிழ்ப்பரப்புரைக்கான சொற்பொழிவுகளை மேற்கொண்டனர்.  பேராசிரியர் இச் சொற்பொழிவுத் தொண்டினைத் தாம் பணியில் சேர்ந்த பின்பும்  தொடர்ந்தார்; பணியில்லாச் சூழலிலும் தொடர்ந்தார்; தம் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தார். தம் சொற்பொழிவுத் திறத்தால், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள்,  சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனத் தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை மக்களிடையே எடுத்துப் பதிய வைத்தார். பட்டிமன்றங்களின் நடுவராக இருந்து தமிழ் இலக்கியச் சிறப்பைத் தம் தகைசால் வாதுரையால் உணர்த்தினார். பிறரது சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்தார். பேச்சாளர்களின் பேச்சிற்கான கால வரம்மை வரையறுத்து நேரம் கடக்கும் பொழுது மணியடித்து நிறுத்தும் பழக்கத்தை உருவாக்கி இதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

  சொற்பொழிவுகள் வாயிலாகத் தமிழ் இலக்கியங்கள், வாழ்க்கை நெறிக்கான வளமான படைப்புகள் என்பதை உணரச் செய்தார்; கடந்த கால இலக்கியங்கள் பற்றி மட்டு்ம் பேசாமல் நிகழ்கால இலக்கியங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தினார்; பழந்தமிழர்களின் அரசியல்திறனை அறியச் செய்தார்; இன்றைய அரசியல் முறை மக்களாட்சிக்கு மாறாக இருப்பதை எடுத்துரைத்தார்; நமக்குத் தேவை, சம உரிமை கொண்ட மொழி வழித் தேசிய இன அரசுகளின் கூட்டமைப்பே என்பதை அன்றைக்கே திறம்பட விளக்கினார்; ஒருநாடு, ஒருமொழி, ஒரு சமயம் என்பது மக்களைப் பிளவுபடுத்துமேயன்றி வாழவிடாது என்பதையும்  எச்சரித்தார்; இந்தித்திணிப்பு தமிழர்களை இரண்டாம் நிலை மக்களாக்கி அடிமை நிலைக்குத் தள்ளும் என்பதை உள்ளத்தில் பதிய  வைத்தார்; அயல்மொழிக் கலப்பு தமிழை மேலும் சிதைத்துத் தமிழ் பேசும் நிலப்பரப்பை மேலும்மேலும் குறைக்கும் என்றார்; தமிழே தமிழர்க்குத் தேசியமொழி என்பதை ஆணித்தரமாக எடுத்தியம்பினார்; புராணச் சொற்பொழிவுகள் மிகுந்திருந்த காலத்தில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. போன்றவர்களை முன்னோடியாகக் கொண்டு எளிமையாகவும் இனிமையாகவும் இலக்கியச் சிறப்பை இயம்பிய பேராசிரியர், தமிழர்க்கு வேண்டிய அரசியல் நெறியையும் அழகுற சுட்டிக்காட்டினார். இவரின் இத்தகைய சொற்பொழிவுகள் மக்களிடையே – குறிப்பாக மாணாக்கர்களிடையே, தமிழ்க்காப்பு உணர்வை ஏற்படுத்தி இந்தி எதிர்ப்புத் தீயைப் பரப்பியது. இதனால் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதியாகத் தமிழக  அரசே சொல்லும் வகையில்  சொற்பொழிவுத் திறத்தால் தமிழிளைஞர் படையை உருவாக்கினார்.

  எனவே,  சொற்பொழிவுகள் மூலம், இக்கால அரசியல் தேவையையும் தமிழ்க்காப்புத் தேவையையும் பரப்பும் முன்னோடியாகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்தார் எனலாம்.

இலக்குவனார் திருவள்ளுவன்