பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி
இணைந்து நடத்தும்
“பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்”
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5
– இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியப் பரப்புரைப்பணி
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தொல்காப்பியர் நமக்களித்த தொல்காப்பியம். இன்றைக்கு ஓரளவு தமிழ் படித்தவர்கள் தொல்காப்பியத்தைப்பற்றி அறிந்திருப்பினும் அறிந்திருக்க வேண்டிய அளவிற்கு அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய – இந்திய வரலாற்றாசிரியர்கள் அறிந்திருக்க வேண்டிய – உலக மொழியறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய – இலக்கியப் புலமையாளர்கள் அறிந்திருக்க வேண்டிய – தொல்காப்பியம் குடத்திலிட்ட விளக்காகத்தான் உள்ளது. எனினும் இன்றைக்கு இந்த அளவேனும் தொல்காப்பியம் அறியப்பட்டது எனில், அதற்குப் பேராசிரியர் இலக்குவனாரின் பல்வகைப் பரப்புரைப் பணிகளே அடிப்படையாக அமைந்தன எனலாம். கடந்த நூற்றாண்டில் நாவலர் சோமசுந்தரபாரதியார் முதலான தொல்காப்பிய அறிஞர்கள் இருந்திருந்தனர். என்றபோதும், தமிழாசிரியர்களில் பலரும் அறிந்திராத நிலையில் இருந்த தொல்காப்பியத்தைப் பேராசிரியர் சி. இலக்குவனார் இதழ்களில் கட்டுரைகள் எழுதிப் பலரும் அறியச் செய்தார். தாம் மேற்கொண்ட ஊர்ப்பரப்புரைகளில் தொல்காப்பியத்தின் சிறப்பை மக்கள் உணரச் செய்தார். தாம் ஆசிரியராகப் பள்ளியில் சேர்ந்த நாள்முதல் முதல்வராகப் பணி நிறைவில் ஓய்வு பெறும் நாள் வரை, தாம் பணியாற்றிய கல்வியகங்களில் எல்லாம் தொல்காப்பியர் விழா எடுத்து, மாணாக்கர்கள் தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் நினைவு கொள்ளச் செய்தார். மாலைநேர வகுப்புகள், தமிழ் அமைப்புகளின் பொழிவுகள் ஆகியவற்றிலும் தொல்காப்பியர் பேராசிரியரால் மக்களுக்கும் மாணாக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். தொல்காப்பியத்தை இலக்கண நூலாக மட்டும் கருதக்கூடாது என்பதை வலியுறுத்தினார் பேராசிரியர் இலக்குவனார்.
“பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழக் கூடிய தொல்காப்பியம் குறித்து தெரிவிக்கப்பட வில்லை” என வருந்துகிறார் பேராசிரியர் இலக்குவனார். . எனவேதான், தொல்காப்பியப் பரப்புரைக்கு வலு சேர்க்கும் வகையில் தொல்காப்பியச் சிறப்பையும் தொல்காப்பியம்வழி நாம் அறியலாகும் தமிழக வரலாறு, பண்பாடு, நாகரிகம் முதலானவற்றையும் ஆங்கிலம் வழியாக உலக மக்கள் அறியச் செய்தார்.
வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தை, அறிவியல் பெட்டகத்தை, வரலாற்றுப் பேழையை நம் தமிழ் மக்கள் மட்டும் அறிந்தால் போதுமா? உலகெலாம் தொல்காப்பியப் புகழ் பரவ வேண்டாவா? அதற்கெனத் தொல்காப்பியத்தை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். வெறும் மொழி பெயர்ப்பால் போதிய பயனிராது என்பதால் அதுகுறித்த ஆராய்ச்சி உரையையும் ஆங்கிலத்தில் நல்கினார். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவுவம் வகை செய்ய வேண்டிய பாரதியாரின் கனவை நனவாக்கினார். “படைப்பாளர்கள் தேசிய இலக்கியத்தை உருவாக்குகிறார்கள்; மொழி பெயர்ப்பாளர்கள் உலக இலக்கியத்தை உருவாக்குகிறார்கள்” என்கிறார் இயோசு சரமாகோ(Jose Saramago). தமிழ் இலக்கியமாம் தொல்காப்பியத்தை உலக இலக்கியமாகப் பாருக்குப் படைத்துப் பெருமை சேர்த்தார் பேராசிரியர் இலக்குவனார்.
பிற்காலத்தில் ஆரியர் வருகையால் புகுத்தப்பட்ட சாதிப் பாகுபாடுகளைப் பழந்தமிழக வழக்காற்றில் உள்ளதாகத் தவறாகப் பலரும் கூறி வருகின்றனர். இக்கருத்து தவறு என்பதைத் தொல்காப்பியம் மூலம் பேராசிரியர் இலக்குவனார் விளக்குகிறார்.
தம் ஆங்கிலத் தொல்காப்பியத்தில்,
“அந்தணர், பார்ப்பார், ஐயர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன; இவை சில அறிஞர்களால் பிராமணர்கள் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவறானதாகும். ‘அந்தணர்’ என்போர் மெய்யியலாளர்கள். ‘பார்ப்பார்’ என்போர் நூல்களை ஆய்ந்து பார்க்கும் ஆராய்ச்சி அறிஞர்கள். ‘பார்ப்பார்’ என்பதன் நேர்பொருள் ஒன்றைப் பார்ப்பது என்பதாகும். புத்தகத்தை எப்பொழுதும் பார்ப்பவர்கள் – படித்துக் கொண்டு இருப்பவர்கள் – ‘பார்ப்பார்’ என அழைக்கப்பெற்றனர். தெற்கில் ஆரியர் வந்த பின்பு ஆரிய வருணாசிரம முறையிலான பிராமணர்கள் தமிழ்ப் பார்ப்பார் உடன் ஒப்பு நோக்கப்பட்டனர். ஆனால் இவை இரண்டும் முற்றிலும் மாறான நிலையினவாகும். பிராமணர்கள் பிறப்பின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறார்கள்; பார்ப்பார் தொழில் முறையில் அறியப் பெறுகிறார்கள். ‘ஐயர்’ என்னும் சொல் மன்பதைத் தலைவர்களைக் குறிக்கப் பயன் பெறுவதாகும். பிற்காலத்தில் பிராமணச் சாதியில் சில குழுவினர் ‘ஐயர்’ என்னும் சொல்லைச் சாதியின் அடையாளமாகத் தத்தம் பெயரின் பின் இணைப்பதைப் பழக்கமாகக் கொண்டு இருந்தனர். ‘ஐயர்’ என்னும் சொல் பிராமணர் சாதியைக் குறிக்கப் பயன் பெற்ற காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் இச்சொல்லை தம் காலத்தில் உள்ள வழக்கத்தை உள்ளத்தில் கொண்டு பிராமணர் எனத் தவறாக விளக்கிவிட்டனர்.”
என்கிறார்.
கற்பு என்பது பொதுவான மண ஒழுக்க நெறியாக இருந்தது என்பதை, “திருமணம் கற்பு என அழைக்கப்பட்டது; அஃதாவது திருமணம் தன்மறுபாலினர் உடனான உறவில் நன்னெறிகளைப் பின்பற்றுவதற்குக் கட்டுப்படுத்தும் அவர்களின் ஒழுக்கநிலையை உறுதி செய்கிறது.” என விளக்குகிறார்.
பழந்தமிழ் மக்களின் உடற்கூறு அறிவையும் பயிரியல் அறிவையும் பிற அறிவியல் கருத்துகளையும் தொல்காப்பியம்வழி விளக்குவதன் மூலம், தொல்காப்பியத்தின் சிறப்பையும் உணர்த்துகிறார்.
“கல்வி முறை பொதுக் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி அல்லது சிறப்புக் கல்வி என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு இருந்தது.” எனப் பழந்தமிழ்க்கல்வி முறையை விளக்குகிறார்.
“கிறித்துஆண்டுமானத்திற்கு முற்பட்ட காலத்தில், தமிழ்க் குமுகக் கட்டமைப்பானது ஆரியக் குமுக அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது” எனத் தெளிவுபடுத்துகிறார்.
தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை கொண்டிராத சமணர் அல்லர் என்பதையும் சமணச் சமயத் தோற்றத்திற்கு முற்பட்டவர் என்பதையும் ஆராய்ந்து அறிவிக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியராகிய பேராசிரியர் இலக்குவனாரின் தொல்காப்பியப் பரப்புரையால்தான், இன்றைக்கு ஓரளவேனும் தொல்காப்பியம் அறியப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. அவர் வழியில் நாமும் பல் வகைகளிலும் தொல்காப்பியத்தைப் பரப்ப வேண்டும்.
காலஆய்வுப் பணி
தமிழின் வரிவடிவங்களைப் பார்த்துத் தன் வரிவடிவங்களை அமைத்துக் கொண்டது ஆரியம். ஆரியத்திற்கு வரிவடிவம்தோன்றும் முன்னரே – ஆரியம் தோன்றா அதற்கும் முன்னதான காலத்திலேயே தமிழ் செம்மொழியாகத் திகழ்ந்துள்ளது; ஆயிரக்கணக்கான இலக்கியங்களைக் கண்டுள்ளது. ஆனால், தமிழின் சிறப்பைக் குறைப்பதற்கும் ஆரியத்தை உயர்த்துவதற்கும் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி மகிழ்கின்றனர் சிலர். தமிழ் இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் தள்ளுவதன் மூலம், தமிழைப் பார்த்து உருவான ஆரிய இலக்கியங்களைத் தமிழின் மூல இலக்கியங்கள் எனத் தவறாகப் புனைகின்றனர். ஆகவே காலம் பற்றிய ஆராய்ச்சி என்பது மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. பேராசிரியர் இலக்குவனார் இலக்கியப் பணிகளுக்கிடையே தமிழின் காலத்தை வரையறுக்கும் ஆய்வுரைகளையும் அளிக்கத் தவறினாரல்லர். தமிழ்ப்படிமத்தின் மீது படியவிடப்பட்ட ஆரியக் கறைகளைப் போக்கி உண்மைத் தமிழின் சிறப்பை உணர்த்திய அறிஞர்களுள் பேராசிரியர் இலக்குவனாரும் ஒருவர். அந்த வகையில் சில கால ஆராய்ச்சி குறித்து முன்னோடி அறிஞராகத் திகழ்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.
“தமிழில் இலக்கியமும் இலக்கணமும் உண்டான காலம் யாது என வரையறுத்துக் கூற இயலாது; வரலாற்றுக் காலத்துக்கு முன்பே, தமிழில் இலக்கியங்களும் இலக்கணங்களும் தோன்றிவிட்டன” என்பது பேராசிரியர் இலக்குவனாரின் காலஆராய்ச்சியின் அடிப்படை முடிவாகும். சங்க இலக்கியப் பாடல்களுள் எழுநூற்றுத் தொண்ணூற்றாறு பாடல்களை இயற்றிய இருநூற்று எழுபத்தாறு புலவர்களின் காலம் ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலம் எனப் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுகிறார்(பழந்தமிழ் பக்கம் 106-118). புலவர்களின் பெயர்ப்பட்டியலையும் அளிக்கிறார் அவர்.
பத்துப்பாட்டுள் ஒன்றாகிய ‘மலைபடுகடாம்’ ஆரியர் வருகைக்கு முன்னரும் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டதும் எனப் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுகிறார். தொல்காப்பியர் காலத்தில் வழக்கு வீழ்ந்த ஒன்பது என்னும் எண்ணினைக் குறிக்கும் ‘தொண்டு’ என்னும் சொல் இடம் பெற்றுள்ளதாலும், தமிழ்ப்பாகர்களைப் பற்றிக் குறிப்பதாலும், ஆரியப் பழக்க வழக்கங்கள்பற்றிய குறிப்பு இன்மையாலும், தொல்காப்பிய இலக்கணத்திற்கேற்ப ‘கூத்தர் ஆற்றுப்படை’ என அழைக்கப்படாததாலும் மூவேந்தர் பற்றிய குறிப்பு இன்மையாலும், தொல்காப்பியர் காலத் திணைநிலைக் கடவுள் பற்றிய குறிப்பு இன்மையாலும் தொல்காப்பியத்தினும் தொன்மைவாய்ந்தது மலைபடுகடாம் என நிறுவுகிறார் பேராசிரியர் இலக்குவனார்(பழந்தமிழ் பக்கம் 50-51).
பேராசிரியர் சி.இலக்குவனார், தம்முடைய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் தமிழ் நூலிலும், தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலிலும் தொல்காப்பியம் பற்றிய கட்டுரைகளிலும் தொல்காப்பியக் காலம் குறித்து ஆராய்ந்து தெரிவிக்கிறார். தாம் படிக்கும் பொழுது தொல்காப்பியக் காலம் கி.மு.3 ஆம் நூற்றாண்டு எனத் தவறாக மதிப்பிட்டிருந்ததாகவும் அதன் சிற்றெல்லை கி்.மு.7 ஆம் நூற்றாண்டாகவும் பேரெல்லை கி.மு.10 ஆம் நூற்றாண்டாகவும் இருக்கும் என்றும் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார். தொல்காப்பியர் புத்தருக்கு முற்பட்டவர், யவனர் வருகைக்கு முற்பட்டவர், நாணயக் காலத்திற்கு முற்பட்டவர் எனப் பல்வேறு அடிப்படைகளில் இவ்வாறு தொல்காப்பியக் காலத்தைப் பேராசிரியர் வரையறுத்துள்ளார்.
திருக்குறள் காலம் தொல்காப்பியக் காலத்திற்குப் பிற்பட்டது. ஆனால், கி.மு.முதல் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதன்று எனப் பேராசிரியர் இலக்குவனார் நிறுவுகிறார் (பழந்தமிழ் பக்கம் 53). “திருக்குறளின் காலத்தைத் தொல்காப்பியத்தின் காலமாம் கி.மு.ஏழாம் நூற்றாண்டுக்கும் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாகக் கொண்டு சங்க இலக்கியங்களுள் ஒன்றாகத் திருக்குறளைக் கொள்வதே சால்புடைத்தாகும்” என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் பக்கம்18). பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடிப் பணிகளில் இத்தகைய அவரது கால ஆராய்ச்சிப் பணிகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
Leave a Reply