வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி

இணைந்து நடத்தும்

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5

– இலக்குவனார் திருவள்ளுவன்

thiru2050@gmail.com

 www.akaramuthala.in

நெல்லை விழா

சொல்லாய்வுப்பணி

  சொல்லாய்வின் மூலமாகத் தமிழின் தொன்மை, தூய்மை, காலம் முதலியவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார்.

  தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்/Origin and Growth of Tamil, தமிழ்ச்சொற்கள் பற்றிய சிற்றாய்வு/A Brief study of Tamil words, தமிழிலக்கண உருவாக்கம்/ Making of Tamil Grammar, தமிழ்மொழியில் முதல்நிலைச் சொற்களும் இடைநிலைச் சொற்களும்/ Semantemes and Morphemes in Tamil Language, தமிழ்மொழி-முன்னுரை/Tamil Language -Introduction,  தமிழ்மொழி – ஒலியனியல்/Tamil Language-Phonetics, தமிழ்மொழி- சொற்பொருளியல்/Tamil Language-Semantics, தமிழ்மொழி-தொடரியல்/Tamil Language-Syntax ஆகிய ஆங்கில நூல்களின் வாயிலாகத் தமிழ்ச்சொற்கள் ஆய்வைப் பேராசிரியர் இலக்குவனார் நிகழ்த்தியுள்ளார். தமிழ்ச்சொற்களின் உண்மைப்பொருள், மூலப் பொருள், சொற்கள் வழங்கிய காலம் முதலானவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் தெள்ளிதின் விளக்கியுள்ளார். தமிழ்ச்சொற்கள் யாவையும்  சமசுகிருதத்தில் இருந்து வந்ததாகக் கூறுவதையே பிழைப்பாகக் கொண்டவர்களின் கருத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

‘பழந்தமிழ்’ நூலில், சொற்பொருள் மாற்றம், சொற்பொருள் விரிவு, சொற்பொருள் சுருங்கல், சொற்பொருள் உயர்வு, சொற்பொருள் இழிபு, சொல்வடிவ மாற்றம், கடன் பெறல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார் பேராசிரியர் இலக்குவனார்.

திராவிட மொழிகள் என்று குறிப்பிடாது பழந்தமிழ்ப் புதல்விகள் என்றும் தமிழ்க்குடும்ப மொழிகள் என்றும் குறிப்பிடுகிறார்; தமிழ்க்குடும்ப மொழிகளில் தமிழ்ச்சொற்கள்  எத்தகைய உருமாற்றம் அடைந்து இடம் பெற்றுள்ளன என்பதையும் விளக்குகிறார் பேராசிரியர் இலக்குவனார். தொல்காப்பியருக்கு முற்பட்ட காலச் சொற்களின் நிலை, தொல்காப்பியர் காலச் சொற்களின் நிலை, தொல்காப்பியருக்குப் பிற்பட்டகாலச் சொற்களின் நிலை எனச் சுவையான முறையில் சொல்லாய்வு   நிகழ்த்துவதன் மூலம்  படிப்பவர்களுக்கும் சொல்லாய்வில் ஈடுபாடு தோன்றச் செய்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.

சொல்லாய்வுச் செம்மலாகத் திகழும் பேராசிரியர் இலக்குவனார் தெரிவிக்கும் சொல்லாய்வு முடிவுகள்  சில வருமாறு:-

அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும் கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன.

அழன், புழன் என்ற இருசொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியிருந்தன. பின்னர் மறைந்துவிட்டன.

, ‘மா என்ற சொற்கள் ன் பெற்று சொற்களோடு சேர்ந்தன. பின்னர் அவற்றின் உறுப்பாகவே நிலைத்துவிட்டன.

இரா, ‘நிலா என்னும் சொற்கள் அன்று முதலே வழக்கில் உள்ளன. பின்னர் இவை இரவு என்றும் நிலவு என்றும் உருப்பெற்றுள்ளன.

இன்றி என்னும் சொல் செய்யுளில் இன்று என்று வருதல் தொல்காப்பியருக்கு முற்பட்ட வழக்காகும்.

நாழி என்னும் சொல் முகத்தல் அளவுக்குரியது. படி என்னும் பொருளது. உரி என்னும் சொல்லோடு சேருங்காலத்தில் நாடுரி(நாழி+உரி = நாடுரி) என்றானது. சிலர் கருதுவதுபோல் நாடி, ‘நாழி என்று ஆகவில்லை.

இன்று ஒதி மரம் என்பது அன்று  உதி மரமாகவே வழங்கியுள்ளது. யா, பிடா, தளா, ஆண், அரை, எகின், குமிழ், இல்லம்,ஓடு, சே, விசை, ஞெமை, நமை – இவை எல்லாம் மரப்பெயர்கள். இம் மரங்கள் இன்று, யாண்டு, எப்பெயர்களோடு உள்ளன என்பது ஆராயத்தக்கது.

 ‘ஆகாயம் என்னும் சொல் விண்ணைக் குறித்தது. காயம் என முதற்குறையாக விளங்கிற்று. ஆகாயம் என்ற தமிழ்ச்சொல்லே ஆகாசம் என்றாகி வட இந்திய மொழிகளில் ஆகாஃச் என உருப்பெற்றது.

இன்று எள் எனக்கூறப்படுவது தொல்காப்பியர் காலத்தில் எண் என்றே கூறப்பட்டுள்ளது.

கள் என்னும் விகுதி அஃறிணையில் பன்மை உயர்த்தப் பயன்பட்டதேயன்றி, இன்றுபோல் உயர்திணைப் பன்மையு்ம் சிறப்பும் உணர்த்தப் பயன்பட்டிலது.

நான்கு, ‘நால்கு எனப் பயின்றுள்ளது. நால்குதான் பழைய வழக்கு. நான்கு திருந்திய வழக்கு என்பர்.

பூதம் என்பது தனித்தமிழ்ச்சொல். பூ – பூத்தல் – பூதம். தமிழிலும் அதன் கிளைமொழிகளிலும் ஒரே விதமானப் பெயர்களைப் பெற்றுள்ளமை இது பழந்தமிழ்ச்சொல் என்பதை நிலைநாட்டும்.

இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். இதனை இலக்கு+இயம் எனப்பிரிக்கலாம். இது குறிக்கோளை இயம்புவது என்னும் பொருளைத் தருவது.  வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்தியம்புவதே இலக்கியமாகும்.

இலட்சியம் என்னும் வட சொல்லே இலக்கியம் ஆயிற்று என்பர் சிலர். இலட்சியம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோள் என்னும் பொருள் உண்டேயன்றிக் குறிக்கோளை இயம்புவது எனும் பொருள் இல்லை. வடமொழி லட்சியம் வேறு. தமிழ் இலக்கியம் வேறு. வடமொழியில்கூட, ‘லட்சியம் என்ற சொல்லால் இலக்கியத்தை அழைத்திடக் கண்டிலோம். அவ்வாறு இருக்க அச்சொல் இலக்கியமாயிற்று எனல் எங்ஙனம் பொருந்தும்?

லட்சணம் என்ற சொல்லே இலக்கணம் ஆயிற்று என்று கருதியோர், ‘லட்சியம் என்ற சொல்லே இலக்கியம் ஆயிற்று என்று கருதிவிட்டனர். அக்கருத்து என்றும் கொள்ளத்தக்கதன்று. தவறுடைத்து எனத் தள்ளத்தக்கது. இலக்கணம், இலக்கியம் என்னும் இரு  சொற்களும் தூய தமிழ்ச் சொற்களே!

சிந்து வெளிப்பகுதிக் கல்வெட்டுகளில் காணப்பட்ட சொற்களெனக் கொடுக்கப்பட்டவை தமிழிலும் தமிழ்க்குடும்ப மொழிகளிலும் இன்றும் உள்ளன எனப் பட்டியலைப் பேராசிரியர் இலக்குவனார் அளிக்கிறார்(பழந்தமிழ் பக்கம்45-47).

  இரிக்கு வேதத்தில் இடம் பெற்ற தமிழ்ச்சொற்கள் (பழந்தமிழ் பக்கம் 155), பிரமாணத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்ச் சொற்கள்(பழந்தமிழ் பக்கம் 156) ஆகியவற்றையும் பேராசிரியர் இலக்குவனார் விளக்குகிறார்.

  இவைபோல், தமிழ்க்குடும்ப  மொழிகளில் தமிழ்ச் சொற்கள் பெற்ற உரு மாற்றங்களையும் சமசுகிருதத்தில் இடம் பெற்ற தமிழ்ச்சொள்ற்களையும் பேராசிரியர் இலக்குவனார் விளக்குகிறார்.

  நெல்லை விழாதமிழ் இலக்கியச் சிறப்பையும் பண்பாட்டுச் சிறப்பையும் தமிழ்த்தொன்மையையும் அதன் தூய்மையையும் சிதைப்பதற்காகத் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் புகுத்தப்பட்டுள்ளன. இக்களைகளைக் கண்டறிந்து பிடுங்கி எறியும் பணியைப் பேராசிரியர் இலக்குவனார் திறம்பட ஆற்றியுள்ளார். இடைச்செருகல்களைக் கொண்டுதான் வையாபுரி போன்றோர் தமிழ் இலக்கியக் காலத்தைப் பின்னுக்குத் தள்ளினர்; தாய்மை நிலையிலுள்ள தமிழை அதனிடம் இருந்து ஆக்கமும்  ஊக்கமும் பெற்ற சமசுகிருதத்தின் கடன் மொழியாகக் காட்ட  முயன்றனர்; முயன்றும் வருகின்றனர். அவர்களை அடையாளம் காணும் வகையில் செருகல் நச்சிலிருந்து தமிழ்ப்பயிரைக் காத்தார் பேராசிரியர் இலக்குவனார்.

  தொல்காப்பியர்காலத்திற்கு முன்னரும் பின்னரும் வேற்றுமை உருபுகளில் ஏற்படும் மாற்றங்களையும் சொல்லாய்வு மூலம் திறம்பட விளக்குகிறார் பேராசிரியர் இலக்குவனார்.

தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் சமசுகிருதச் சொற்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறும் பொய்யர் கூட்டத்திற்கு மறுப்பாக, அவற்றைப் பட்டியலிட்டு அவையாவும் தமிழ்ச்சொற்களே என நிறுவுகிறார் பேராசிரியர்  இலக்குவனார். பழந்தமிழ்ச்சொற்களுள் வழக்கு வீழ்ந்தனவற்றுள் சிலவற்றைப் பட்டியலிட்டு அளிக்கிறார்; இவற்றை வழக்குக்குக் கொண்டுவருவதாலும் தமிழை வளம்படுத்தலாம் என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.

இவ்வாறு, சொல்லாய்வுத் துறையில் பேராசிரியர் இலக்குவனார் மேற்கொண்ட முன்னோடிப் பணிகள்,  பிற ஆய்வறிஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாயும் அடிப்படையாயும் விளங்குகின்றன.

 

சங்க இலக்கியப் பரப்புரைப்பணி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தும் ம.தி.தா.இந்துக்கல்லூரி, தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது.  இங்கே பேராசிரியர் இலக்குவனார்  தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றும் பொழுதுதான், சங்கத் தமிழை வங்கக் கடலில் எறிவோம் எனப் புறப்பட்ட ஒன்றும் அறியாப் பேதைகளின் முயற்சியைத் தடுத்தார். இலக்கியம் என்பது மக்களுக்காகத்தான். ஆனால்  இலக்கியங்களுக்கும் மக்களுக்கும் இடையே பெரிய இடை வெளி இருப்பதை உணர்ந்தார். வாழ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், நமக்கு வழிகாட்டுவன என்னும் உண்மை அறியாததால்தான் அன்றோ இத்தகைய முடிவிற்குச் சிலர் வந்தனர். அதற்குப் பலரும் கை தட்டி வரவேற்றனர் என மனம் நொந்தார். சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியங்களாக்க  வேண்டும் என முடிவிற்கு  வந்தார். சங்க இலக்கியப் பரப்புரையை முழுவீச்சில் மேற்கொள்ள முடிவெடுத்து அவ்வாறே செயற்படுத்தி வெற்றியும் பெற்றார். தமிழ்ப்புலவர்களிடமும் தமிழறிஞர்களிடமும் சங்க இலக்கியம் பற்றியும் சங்க இலக்கியங்களைத் தழுவியும் படைப்புகள் எழுதத் தூண்டினார். சங்க இலக்கியம் பற்றிய அஞ்சல் வழிக் கல்வியும் நடத்தினார். ‘இலக்கியம்’ என்னும் இதழ் நடத்தியும் அதன் பின்னர் விருதுநகரில் இருந்து ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழ் நடத்தியும் மக்களுக்குச் சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகளை உணர்த்தினார்.

”பழங்காலத்தை அறிந்து நிகழ்காலத்தைக் கண்டு வருங்காலத்தை எண்ணித் திட்டமிடும் நாடே உலகில் சிறந்தோங்க முடியும். தம் பழமையை அறியாதார், அறிந்து போற்றாதார், விலங்குநிலையில்தான் வாழமுடியும். விலங்கு நிலையினின்றும் உயர்ந்து வாழ விரும்பும் மக்களினம் தம் முன்னோர் பற்றி அறிந்து மேலும் மேலும் சிறந்து வாழ முற்படுதல் வேண்டும். இல்லையேல் தேங்கிய குளநீர்போல் பாழ்பட்டு அவ்வினம் அழிவுற வேண்டிய இழிநிலை தோன்றும்.”  ஆதலின் பழம் நிலை அறிந்து புது நிலைக்குச் செல்ல, புத்துலகம் காணச சங்க இலக்கியத்தை அனைவரும் அறிய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்காக, ”இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் – சங்கக்காலம்” என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார்.

  தான் பணியாற்றிய கல்லூரிகளில் எல்லாம் சங்க இலக்கியத்தைப் பாடத்திட்டத்தில் சேர்த்தார். பல்கலைக்கழகக் குழுக்களில் இருந்தமையால் பிற கல்லூரிகளிலும் சங்க இலக்கியத்தைப் பாடத்திட்டத்தில் சேர்த்தார். இதனால், சங்க இலக்கியச்  சுவை  அறியும் தலைமுறை தோன்றியது. இன்றைக்குப் பள்ளிகளிலும் சங்க இலக்கியச் சிறப்பை மாணாக்கர்கள் அறிகின்றனர்.

???????????????????????????????

  ஆடிப்பெருக்கில் தமிழ் ஓலைச்சுவடிகளைப் போக்கடித்த மூடநம்பிக்கை நிறைந்த முன்னோர் வழியில் ஆழிப்பெருக்கில் சங்க இலக்கியங்களைத் தொலைக்கச் சிலர் முன் நின்ற  பொழுது  பேராசிரியர் இலக்குவனாரின் துணிவான நடவடிக்ககைகளும் பன்முகப் பரப்புரைப் பணிகளுமே  அதைத் தடுத்து நிறுத்தித் தமிழன்னையின் பெருமைகளை அழியாமல் காத்தது. தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதி காக்காமல், ஊதியம் கிடைத்து ஊனுறக்கம் அமைந்தால் போதும் என்று இருப்போர்போல் இல்லாமல் தமிழைக் காக்க வேண்டியது தமிழ் படித்த, தமிழ் படித்ததால் பணி கிடைத்து ஊதியம் பெறுகின்ற தம் கடமை எனப் பேராசிரியர் ஆற்றிய வினைத்திறம் அவரின் முன்னோடிப் பணிகளுள் குறிக்கத் தக்க ஒன்றாகும்.