பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5
வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி
இணைந்து நடத்தும்
“பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்”
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 5/5
– இலக்குவனார் திருவள்ளுவன்
குறள்நெறிப் பரப்புரைப்பணி
பள்ளிமாணாக்கனாக இருந்த பொழுது உணவு நேரத்தில் அமைதி காப்பதற்காக நாள்தோறும் திருக்குறளைப்படிக்கும் பழக்கத்தை மேற்கொணடிருந்தார் பேராசிரியர் இலக்குவனார். படிக்குந்தோறும் படிக்குந்தோறும் அதன் இன்பத்தில் மூழ்கினார். குறள்நெறியையே தம் வாழ்வின் நெறியாக அமைத்துக் கொண்டார். தாம் பெற்ற பேறு இவ்வையகம் பெற வேண்டும் என்றல்லவா ஆன்றோர் எண்ணுவர். அதன்படி எண்ணிய பேராசிரியர் இலக்குவனார், குறள்நெறியை மக்களிடையே பரப்பினார். பணியாற்றிய கல்வியகங்களிலும் தாம் நடத்திய அமைப்புகளிலும் பிற அமைப்புகளிலும் குறள்நெறி ஓங்கின் குடியரசோங்கும் என்பதை வலியுறுத்தினார். மக்கள் யாவரும் திருக்குறளை எளிதில் புரிந்து கொள்வதற்காகத் ”திருக்குறள் – எளிய பொழிப்புரை” நூலை வழங்கினார். இல்லறம் நல்லறமாகச் சிறக்க, ”வள்ளுவர் கண்ட இல்லறம்” படைத்தளித்தார். இளையோரும் திருவள்ளுவர் வழியில் நிடைடபோட, எளிமையான முறையில் ”குறள் விளக்கக் கதை பொதி பாடலை” அளித்தார்.”அரசியல் பொறுப்பினை ஏற்போர் அறிய வேண்டுவனவும் தெரிய வேண்டுவனவும் அளப்பில. மக்கள் ஆட்சி முறையில் எவர் வேண்டுமானாலும் ஆளும் பொறுப்பினை ஏற்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்குத் தம்மைத் தகுதி செய்து கொள்ள வேண்டியது அரசியல் பொறுப்பை ஏற்பார் கடமையாகும்.” என்பதை அரசியலார்க்கு உணர்த்த எல்லோரும் இந்நாட்டு மன்னர் (இரு பகுதிகள்), அமைச்சர் யார்? வள்ளுவர் வகுத்த அரசியல் என நூல்களைப் படைத்தளித்தார்.
இவையாவும் மாணாக்கர்களுக்கும் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும்தானே வழிகாட்டும்! பொதுமக்களிடமும் குறள்நெறியைப் பரப்ப வேண்டுமே! வெறும் சொற்பொழிவு மட்டும் பயன்தராதே என எண்ணினார் பேராசிரியர் இலக்குவனார். எனவே, ஊடகங்களில் தமிழ் சிதைந்து வருவதைத் தடுக்கவும் மக்களாட்சி மாண்புற, மக்கள் குறள்நெறியில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தவும் ‘குறள்நெறி’ என்னும் இதழ்களை நடத்தினார். தொடக்கத்தில் திங்களிதழாகவும், அடுத்துத் திங்களிருமுறை இதழாகவும், பின்னர் நாளிதழாகவும் குறள்நெறி மலர்ந்து குறள்மணம் பரப்பியது. பெரும் செல்வர்களும் நடத்தத் தயங்கும் நாளிதழை நடத்தி இதழுலகில் தம் முன்னோடிப்பணியை ஆற்றியவராகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்கிறார்.
இதழ்ப்பணி
இலக்கியம், சங்க இலக்கியம், குறள்நெறி முதலான இதழ்களைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்தியது குறித்து முன்னர்க் கண்டோம். திராவிடக்கூட்டரசு, Dravidian Federation, Kuralneri முதலான இதழ்களையும் இதழியல் செம்மலான அவர் நடத்தி நற்றமிழ்த் தொண்டாற்றி உள்ளார். ஆங்கில இதழ்கள் வாயிலாகத் தமிழ் அறியாதோர் தமிழின் சிறப்பையும் குறள்நெறிமாண்பையும் அறிய வேண்டும் என அவர் மேற்கொண்ட முன்னோடிப் பணி இன்றுவரை, பிற தமிழ்ப்பேராசிரியர்கள் கனவிலும் எண்ணாத ஒன்றாகவே உள்ளது. இன்றைக்கு ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியம் பற்றிய காலமுறை இதழ்கள் வருகின்றன. என்ற போதும், பொதுமக்களுக்கான ஊடகமாக எவையும் அமையவில்லை. இதழ்கள் வாயிலாகத் தொல்காப்பியச் சிறப்பு, சங்க இலக்கியப் பெருமை, குறள்நெறியின் மாண்பு, தமிழின் தொன்மை, தமிழ்க்காப்பின் தேவை, இந்தித் திணிப்பின் தீமை, அயல்மொழிக்கலப்பின் கேடு, தமிழறிவியல் சிறப்பு, மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டமைப்பிற்கான இன்றியமையாமை முதலானவற்றையும் மக்களிடையே எளிய நடையில் உணர்த்தினார். இவரது இதழ்களால் புதிய தமிழார்வம் மிக்க படைப்பாளர்கள் பெருகியதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவரது இதழ்கள், ‘தமிழை நினை! தமிழால் இணை!’ என்பதை மக்களுக்கு உணர்த்தின. (இதழாளர் இலக்குவனார் என்னும் கட்டுரையில் இது குறித்து எழுதி உள்ளேன். ஆதலின் இங்கே விரிவாகக் குறிக்கவில்லை.)
ஆற்றுப்படுத்தும் பணி
கல்லூரி மாணாக்கர் சேர்க்கையின் பொழுதே பேராசிரியர் இலக்குவனார் தமிழ் படிக்குமாறு ஆற்றுப்படுத்துவார். அவ்வாறு தமிழ்ப்படிப்பில் வகுப்பில் சேர்ந்தவர்கள், தொடர்ந்து பணம் கட்டுகிறார்களா? கட்ட முடியாமல் இடை நிற்க வேண்டிய நிலை இருக்கிறதா என்பதையும் கருத்தூன்றிக் கவனிப்பார். அவ்வாறான சூழலில் அவர்களுக்கான கட்டணததையும் தாமே செலுத்தி விடுவார். எழுத்தர்கள், தமிழாசிரியர்கள், கடைகளில் பணியாற்றுவோர், சிறு தொழில் நடத்துவோர், தமிழன்பர்கள் மேற்படிப்பிற்கு வழிகாட்டித் தமிழ்ப்புலவர் வகுப்பு, தமிழ் இளங்கலை வகுப்பு, தமிழ் முதுகலை வகுப்பு முதலானவற்றில் அவர்களின் தகுதிக்கேற்ப சேர்ந்து உரிய பட்டம் பெறுவதற்கு வழிகாட்டுவார். பள்ளித் தமிழாசிரியர்கள் எண்ணற்றோர் பேராசிரியர் இலக்குவனார் வழிகாட்டுதலால் மேற்பட்டங்கள் பெற்றுக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியமர்ந்துள்ளனர். முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். அறிவுரை கேட்பவர்களையே புறக்கணிப்போர் இடையே தாமே முன்வந்து நல்லாற்றுப்படுத்தும் ஆன்றோராகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்ந்துள்ளமை பிறர் பின்பற்றிப் போற்ற வேண்டிய அரு நெறியாகும்.
தமிழ்க்காப்புப்பணி
தமிழ்க்காப்புப் பணியே பேராசிரியரின் வாணாள் பணியாக அமைந்தது. அரசியல் ஊர்வலங்களையும் தொழிலாளர் ஊர்வலங்களையும் பார்த்த தமிழ் மக்கள் தமிழுக்கான ஊர்வலத்தைப் பார்த்து வியந்தது பேராசிரியர் இலக்குவனாரின் பெரு முயற்சியால்தான். நாகர்கோயிலில் யானைமேல் திருவள்ளுவர் படத்தை வைத்துக் கலைநிகழ்ச்சிகள் தொடர அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி உள்ளார். மதுரையில் பிற ஊர்களுக்கு முன்னோடியாகத் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க மாபெரும் ஊர்வலத்தை நடத்தி உள்ளார். இத் தீ, பின்னர் பாரெங்கும் பரவியது. மாணவர்களும் இளைஞர்களும் தமிழார்வலர்களும் உற்சாகத்துடன் இவர் நடத்தும் ஊர்வலப் பேரணிகளில் பங்கேற்றனர். மேலும் தமிழன்பர்களும் தமிழ்க்காப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். தாம் பணியாற்றும் நகரங்களில் எல்லாம் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழியக்கத்தைச் செயல்படுத்தும் கருவிகளாகத் தாம் நடத்திய அமைப்புகளை மாற்றினார். தமிழின் காவல் அரணாகப் பேராசிரியர் இலக்குவனார் தம்மை மாற்றிக் கொண்டார். தமிழ் நாட்டில் தமிழ் எழுச்சி பரவவும் இந்தித் திணிப்பைத் தடுக்கவும் பேராசிரியரின் தமிழ்க்காப்புப்பணியே அமைந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தாம் தொடங்கிய அமைப்புகளின் மூலமும் கல்வியகங்களில் உள்ள அமைப்புகளின் மூலமும் தாம் உறுப்பினராக இருந்த பல்கலைக்கழகங்களின் குழுக்கள் மூலம் தாம் பொறுப்பு வகித்த பொது அமைப்புகள் மூலமும் ‘எங்கும் தமிழ்! என்றும் தமிழ்!’ என்னும் நிலை நிலவப் பேராசிரியர் இலக்குவனார் பாடுபட்டார். தமிழ்க்காப்பின் காரணமாக இரு முறை சிறை சென்ற பின்னரும், பதவி இழந்த பின்னரும், பதவிகளில் இருந்து துரத்தப்பட்ட பின்னரும் ஒருபோதும் பேராசிரியர் இலக்குவனார் ஓய்ந்ததில்லை. தமிழ்க்கடல் மறைமலையடிகள் வழியில் தனித்தமிழ்ப்பணியாற்றினார்; தமிழ்த்தென்றல் திரு.வி.க. வழியில் எளிய பொழிவுகள் ஆற்றினார்; நாவலர் சோமசுந்தர பாரதியார் வழியில் ஆராய்ச்சிப்பணியாற்றினார்; சங்கப்புலவர்களைப்போல் செம்மாந்து திகழ்ந்தார்; இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் எனவும் இருபதாம் நூற்றாண்டு திருவள்ளுவர் எனவும், இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் எனவும் இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் எனவும் குறள்நெறிக்காவலர் எனவும் சங்கத்தமிழ் மீட்டவர் எனவும் செந்தமிழ் மாமணி எனவும் முத்தமிழ்க்காவலர் எனவும் பயிற்றுமொழிக் காவலர் எனவும் தமிழ்காத்த தளபதி எனவும் தமிழ் இயக்கத்தின் ஆணிவேர் எனவும், 1967 ஆட்சிமாற்றத்திற்குக் கால்கோள் இட்டவர் எனவும் முத்தமிழ்ப் போர்வாள் எனவும் செம்மொழிச்சுடர் எனவும் தமிழ்த்தாய் எனவும் மேலும் இவைபோல் நூற்றுக்கும் மேற்பட்ட அடைமொழிகளாலும் பட்டங்களாலும் சிறப்பிக்கப் பெற்ற பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் ஆற்றிய முன்னோடிப்பணிகளில் ஒன்றையேனும் நாம் ஆற்றினால் போதும் தமிழ் தானே வளரும்! தமிழ்ப்பகை தானே ஒழியும்! தமிழர் முதன்மை பெறுவர்! தமிழ் தலைமை பெறும்!
இலக்குவனார் வழியில் மொழிநலம், இனநலம் காப்போம்!
துணைநூல்கள்:-
- செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் – புலவர்மணி இரா.இளங்குமரன் : இலக்குவனார் இலக்கிய இணையம்
- படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார் – தொகுப்பு: இலக்குவனார் திருவள்ளுவன் : இலக்குவனார் இலக்கிய இணையம்
- இலக்குவனார் நூறு
- இலக்குவனார் – ஆசிரியர் பேரா. மறைமலை ; சாகித்ய அகாதமி
- இலக்குவம் – தொகுப்பாசிரியர்கள் முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் கா. அரங்கசாமி ; காவியா பதிப்பகம்
- மொழிக்காவலர் இலக்குவனார் – தொகுப்பு : கண்ணியம் குலோத்துங்கன் முதலானோர். வெளியீடு – மணிவாசகர் பதிப்பகம்
- தமிழ்ப் போராளி பேராசிரியர் சி. இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன் ; கோவை ஞானியின் தமிழ் நேய வெளியீடு
இணையத்தளங்கள், வலைப்பூக்கள்
http://www.scribd.com/milakkuvanar
http://thiru-padaippugal.blogspot.in/
Leave a Reply