(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

3.6. விழாக்கள்

  குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.

  குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).தொல்காப்பியர்

 அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது.  அவரை மதிப்புச் செய்யும் வகையில் 6 நிலைகளில் சிறப்பிக்கப்பட்ட நடுகல் இடப்பட்டது. (நூற்பா.60,பொருள்)

3.7. கணவரை இழந்தோரும், மனைவியை இழந்தோரும்: வாழ்க்கைத் துணைவரை இழந்த நிலை ‘தாபதம்’ எனப்பெற்றது. கணவரது மறைவிற்கு பின் பெண் மறுமணம் செய்வதற்கு உரியவர் அல்லள் என்று தோன்றுகிறது. (நூற்பா.79,பொருள்). கணவரும், மனைவியின் மறைவுக்குப் பின் மறுமணம் மேற்கொள்ளாமல் இருப்பார். இவ்வாறு மனைவியை இழந்த கணவனின் நிலை தபுதாரம் எனப்படுகிறது. (பொருள். 79); (தலைவனிடம் இருந்து மாலையைப் பெறுவதற்கு உரியவள் என்ற பொருளில் அமைந்த தாரம் தமிழ்ச்சொல்லே).

‘தாபதம்’ என்பது தன்ஈக (self-sacrifice) நிலை; ‘தபுதாரம்’ என்பது மனைவியை இழந்த நிலை. இவ்விருச் சொற்களும் கணவனை இழந்த மனைவி, ஒரு துறவு வாழ்க்கை நடத்த வேண்டும் என்றும் மனைவியை இழந்த கணவன் எதையும் விட்டுக்கொடுக்காவிட்டாலும் மனைவியை இழந்தவர் என்ற நிலையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டமையும்   உணர்த்துகின்றன.

3.8. பாலை அல்லது மனைவியின் மறைவு

  “மனைவி கணவன் மறைந்த பின்னர் ஈமத்தீயில் தன்னையும் உட்படுத்த முனைபவள்;  அவ்வாறு வேண்டா எனக் கூறும் மூத்தோர் அறிவுரையைக் கேட்பதற்கு தேவை இல்லை” என்ற குறிப்பும் தொல்காப்பியத்தில் உள்ளது. இலக்கியத்தில் இந்நிகழ்வு பாலை நிலை எனப்படும். எனவே இத்தகைய நேர்வுகள் மிகவும் அருகி காணப்பட்டன என்றும், எப்பெண்ணும் வடஇந்தியாவில் உள்ளது போன்று கணவனுடன் இறக்குமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

(Tholkaappiyam in English with critical studies

By Prof. Dr. S. Ilakkuvanar:

Pages 477-478)

– தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)