பேராசிரியர் இலக்குவனார்

 

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

3.3. மகப்பேறு

குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப் பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால்  உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன் குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187).

குழந்தைகள் மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி  சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147)

3.4. கல்வி

கல்வி முறை பொதுக் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி அல்லது சிறப்புக் கல்வி என மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ஊர் அல்லது நகரில் பொதுக் கல்வி பெற்ற பிறகு  தொழிற் கல்வி அல்லது ஆராய்ச்சிக் கல்விக்காக அவர்களின் வீட்டிலிருந்து  நீங்கி மூன்றாண்டு காலம் வெளியே செல்வர். (பொருள். 188).

தொழில் முறைக் கல்வி என்பது வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான கல்வியாகக் கருதப்பட்டு,  வேந்தியல் கல்வி   கல்வி என அழைக்கப் பெற்றது;  ஆராய்ச்சிக் கல்வி என்பது ஓதல்  அழைக்கப்பட்டுத் தொடர் கல்வியாகத் திகழ்ந்தது.

பொருளதிகாரம் நூற்பா 31லிருந்து கல்வியில் சிறந்தோர்* ஆராய்ச்சிக் கல்விக்கு அனுப்பப்பட்டனர் எனத் தெரிய வருகிறது.

கல்வி என்பது அரசுப் பணித்துறைகளில் வேலை நாடுவதற்காக அல்ல என்பது இயல்பாகவே அறியப்பட்டு இருந்தது.

திருமணத்திற்குப் பின்பு மூன்றாண்டுகள், தொழிற்கல்விக்காகவும், ஆராய்ச்சி கல்விக்காகவும் தத்தம் குடும்பங்களிலிருந்து  பிரிந்து இருந்தனர் என்பததை உணரலாம். எனவே தொழிற்கல்வியும், ஆராய்ச்சிக் கல்வியும் அளிப்பதற்கென இத்தகைய கல்விக்கேற்ப சில முதன்மை நகரங்களில் உரிய மைங்கள் இருந்தன என்பதையும் உய்த்து உணரலாம்.

உயர் கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் தூதர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். (பொருள்.26)

படைத்துறையிலும், குடியாட்சித் துறையிலும் பணிகள் அமைக்கப்பட்டு இருந்தன. (நூற்பாக்கள் 25,41,189)ஆளுவோர்க்காக அமைக்கப்பட்ட பணியானது ‘வேந்துறு தொழில்’ – அரசர்க்குரிய பணி என அழைக்கப்பட்டது. இது ஓராண்டு வரையறைக்குட்பட்ட அயலகப் பணியாகும்.  (பொருள்.189) அவர்கள் கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். இவ்வாறு கடல் கடந்து செல்லும்  பொழுதும், போர்ப் பாசறைகளில் தங்கும் பொழுதும் தம் மனைவியர் உடன் இருப்பதற்கு இசைவு அளிக்கப்பெறவில்லை. (பொருள். 34, 175)

35 பொழுதுபோக்குகள்

ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் குளித்தும், பூங்காக்களில் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கினர். (பொருள். 191) தேர், குதிரை, யானை முதலியவற்றைப் போக்குவரத்திற்கு பயன்படுத்தினர். (பொருள். 212)

பாணர்கள், கூத்தர்கள், விறலியர்  ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாகத்  திகழ்ந்தமையாலும் (பொருள். 193)திணக்குரிய பட்டியலில் இசைக்கருவி(யாழ்) சேர்க்கப்பட்டுள்ளமையாலும்,   இசை, நாட்டியம், நாடகம் ஆகியன  அவர்களின் பொழுதுப் போக்குகளில் இன்றியமையாத பங்கேற்றிருந்தது எனலாம். (பகடை, பகடைப்பலகை ஆகியன பற்றி எழுத்ததிகாரம் 373,374 நூற்பாக்களில் குறிப்புகள் உள்ளமையால், பகடையாட்டம் அக்காலத்தில் பரவலாக இருந்துள்ளது தெரிய வருகிறது.)

(Tholkaappiyam in English with critical studies

By Prof. Dr. S. Ilakkuvanar:

Pages 475-477)

 – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(தொடரும்)