தலைப்பு-தொல்காப்பியர்காட்டும்பண்பாட்டு நெறிகள் : thalaippu_tholkappiyam_panbaattunerikal_thi.ve.visayalatchumi

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2

 

     பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.

     தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமே சிறந்த சான்று.

     பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் கொண்டு, வண்புகழ் மூவர் தண்பொழில்  வரைப்பிலே வழங்கும் செந்தமிழ் மொழியை உலக வாழ்க்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு, எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகைப் பிரிவுகளையும் முறைப்பட ஆய்ந்து அவற்றின் இயல்புகளைப் பொருளதிகாரத்தில் தொகுத்துத்  தந்துள்ளது. தமிழ் அறிவார் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியனார் என்னும் பெயர் நூலாசிரியரின்  இயற்பெயரே. இறையனார் களவியல் உரையில், “செய்ததால் பெயர் பெற்றன. அகத்தியம், தொல்காப்பியம் என இவை’’ என்ற காப்பியச் செய்தி கொண்டு, நூலாசிரியர் இயற்பெயர் தொல்காப்பியன் என்று அறிகிறோம்.  (ஆர்- சிறப்பு விகுதி) இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் – கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருத்தல் வேண்டும்.

     தொல்காப்பியர் தன் ஆசிரியர் அகத்தியனார் என்பதும் முதல் நூல் அகத்தியம் என்பதும் தவறான செய்தி எனக் கூறப்படுகின்றது. ‘‘இந்நூலில் ஏறத்தாழ 250 இ்டங்களில் தொல்காப்பியர்த் தம் முன் நூல் ஆசிரியர் பலரை என்மனார் புலவர், யாப்பறி புலவர், நுண்ணிதின் உணர்ந்தோர். என்ப, மொழிப, கூறுப, தொன்னெறிப் புலவர்  என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளமை கண்டு இதற்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்று துணியலாம்.

நூற் பகுப்பு

     தொல்காப்பியம் முப்பெரும் பகுப்பினை யுடையது 1612 நூற்பாக்கள் இருக்கிறது. எழுத்து – 9 இயல்கள், சொல் – 9, பொருள் – 9 என மொத்தம் 27 இயல்களை கொண்டது. காலத்தால் முற்பட்ட உரை இளம்பூரணம். பிந்தியது நச்சினார்க்கினியம். இவர்கள் தவிர சேனாவரையர், தெய்வச் சிலையார், கல்லாடர் என்பாரை இணைத்து ஐவர்  உரையெழுதியுள்ளனர். இந்நூல்கள் இல்லையெனில் தொல்காப்பியத்தை நாம் தெளிவாகத் தெரிந்துக் கொள்ள இயலாது. இந்நூலில் எழுத்திற்கும், சொல்லிற்கும் இலக்கணம் கூறப்பட்டிருப்பதோடு, இலக்கியத்தில் அமையும் பொருளுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

     ‘‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’’ என்ற பாயிரத்தின் முற்பகுதியில் காணப்படுவதால், உலக வழக்கை உணர்ந்து, பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, தமிழர்தம் பீடுற்ற பெருவாழ்வினைப் பெருமையுறப் பேசுகின்றார் தொல்காப்பியர் என உணரலாம்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல்சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்
(தொல், அகத்தினை 999)

என்று அகத்திணையியலில் புலனெறி வழக்கம் இன்னது என்றும், ஐந்திணைக்கு உரிமையுடையது என்றும் உணர்த்தப்படுகின்றது.  பாடல்சான்ற இலக்கண மரபில் அமைந்த ஒழுகலாறுகள்  புலனெறி வழக்கம்  எனப்படும்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை  இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல், அக 5)

என்று தொல்காப்பியம் அகத்தினை இயலின் முதற்நூற்பாவின் வழி அகப்பொருள் திணைகள் 7  என்று கூறிவார்.

மக்களின் வாழ்க்கையும், ஒழுக்க முறையும்

     மக்கள் வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இருவகைப்படும். ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக்கூடி வாழும் காதல் வாழ்வே அகவாழ்வாகும். வெளியே எடுத்துரைக்க முடியாத உள்ளத்தால் உணரும் ஒப்பற்ற இன்பமாகும். இதுவே அகத்திணைள, அரசாட்சி, போராட்டம் விவசாயம், வணிகம் மற்ற தொழில்கள் யாவும் புறத்தே நிகழ்வன – புற ஒழுக்கமே புறத்திணை.

தெய்வங்களை வழிபடுதல்

     அக்கால மக்களிடம் ஏதேனும் பொருள்வேண்டி தெய்வங்களை வழிபடும் முறை இருந்தது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் (தொல் அகத் – 951)

என்ற நூற்பாவின் மூலம் தொல்காப்பியர் நானில மக்களும்  முறையே மாயோன், சேயோன், வேந்தன்,  வருணன் ஆகிய கடவுள்களை வணங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

தி.வே.விசயலட்சுமி : thi.ve.visayalatchumi

புலவர் தி.வே. விசயலட்சுமி

அலைபேசி: 9841593517