தொல்காப்பியமும் பாணினியமும் – 10 : தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும்
தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும்.
திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது என்கிறார் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம் .
உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே.
இதை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் நன்னூல் இலக்கணம் அறிமுகம் செய்யப்பட்ட அளவுக்குத் தொல்காப்பியம் அறிமுகம் செய்யப்படவில்லை. தொல்காப்பியத்தைப் பாடத்திட்டத்தில் விரிவான அளவில் சேர்க்க வேண்டும். என்கிறார் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத்தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், தொல்காப்பியர் சிலை திறப்பு விழா)
கவிதை வாயிலாகத் தொல்காப்பியத்தின் சிறப்பு
காலங்கள் தோறும் தொல்காப்பியத்தைப்பின்பற்றியும் வந்துள்ளனர் பாராட்டியும் வந்துள்ளனர். சான்றாக, ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிற் காப்புப் பருவத்தில்,
வடுவில் காப்பிய மதுர வாய்ப்பொருள்
மரபு வீட்டியதால்
என்கிறார்.
வடுவில் காப்பியம்’ என்றது. குற்றமற்ற தொல்காப்பியத்தை. “மதுரவாய்ப் பொருள் மரபு” என்றது, இனிமையமைந்த பொருளிலக்கணத்தைக் கூறும் பொருளதிகாரப் பகுதியை. இதுபோல் இப்போதும் கவிஞர்கள் தொல்காப்பியத்தைப் பாராட்டி வருகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளைக் கவிதைகள் வாயிலாகவும் கூறி வருகின்றனர். எடுத்துக்காட்டிற்காக ஒன்று:
எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்க ணத்தை
எடுத்தியம்பும் நூல்கள்பல் மொழிகளி லுண்டு
ஒழுக்கத்தை வாழ்வியலை எடுத்துச் சொல்லும்
ஒப்பற்ற பொருளென்னும் இலக்க ணத்தை
வழுவின்றி சொல்லும்நூல் தமிழி லன்றி
வாழுமெந்த மொழிகளிலும் இல்லை யிங்கே
பழுதில்லாத் தொல்காப்பி யமெனும் நூலே
பார்தன்னில் உள்ளஒரே நூலாம் இன்று !
என்றும்
நன்னூலோ எழுத்தோடு சொல்லைக் கூற
நம்பிஇறை தந்தநூலோ அகத்தைக் கூற
பன்னிரண்டு படலமொடு ஐயனா ரிதனார்
படைத்தளித்த இருநூல்கள் புறத்தைக் கூற
தண்டிமாறன் வடித்தநூல்கள் அணியைக் கூற
தமிழ்ப்பாக்கள் இயற்றயாப்பை காரிகை கூற
மண்மீதில் ஐந்துவகை இலக்க ணத்தை
மறையாகக் கூறுகின்ற ஒரேநூல் இந்நூல் ! (3)
என்றும்
உந்திமுதல் எனத்தொடங்கும் நூற்பா தன்னில்
உருபெற்றே எழும்காற்று சென்னி மிடறு
நெஞ்சென்னும் இடங்களிலே நிலைத்தி ருந்து
நெகிழ்ந்தேபல் உதடுநாக்கு மூக்கு அண்ணம்
அய்ந்துறுப்பின் தொழிலாலே வேறு வேறாய்
அக்காற்று எழுத்தொலியாய் பிறக்கு மென்று
முந்துரைத்த கருத்தைத்தான் இற்றை நாளில்
முயன்றுரைத்தார் உடற்கூறு வல்லு நர்கள் !
இக்கால ஒலியியலார் எழுத்தொ லிக்க
இயங்குகின்ற காற்றறைகள் துணையாய் நிற்கும்
தக்கஒலி எழுப்பிகளாய்க் கண்டு ரைத்த
தகுஉறுப்பை காப்பியனார் அன்றே சொன்னார்
என்றும்
அறிவியலார் உயிரினத்தை நின்று வாழ்தல்
அசைந்தசைந்து சென்றுவாழ்தல் எனப்பி ரித்தார்
அறிவார்ந்த காப்பியரோ உயிரி னத்தை
அறுவகையாய் உயர்அஃறிணை எனப்பி ரித்தார்
விரிவாக அவருரைத்த உயிரின வகையை
வியந்தின்றும் அறிவியலார் போற்று கின்றார்
அரிதாகக் கிடைத்தயிந்த நூலைப் போன்று
அகிலத்தில் வேறெந்த மொழியிலு மில்லை !
ஓரறிவு ஈரறிவு மூவறி வென்றே
ஒன்றுமுதல் ஆறறிவாய் உயிரி னத்தை
தேரறிவு காப்பியர்தாம் வகைப்ப டுத்தித்
தெளிவாக உயிரினத்தின் பெயரும் சொல்லி
பேரறிவு அறிவியலில் கொண்ட வர்தாம்
பெருந்தமிழர் என்பதற்குச் சான்றாய் இங்கே
ஊரறிய உலகறிய திகழு மிந்த
உயர்தொல்காப் பியத்திற்கே ஈடு முண்டோ ! (6)
என்றும்
பாவலர் கருமலைத் தமிழாளன் தொல்காப்பியத்தின் சிறப்புகளைக் கூறும் கவிதையைக் குறிப்பிடலாம். ( தொல்காப்பியர் சிலை திறப்பு விழா கவியரங்கம், நாள்: 26.06.2047/10-07 -2016, தரவு அகரமுதல மின்னிதழ்)
பொய்யும் வழுவும் தோன்ற வேற்றினத்தார் வருகையே காரணம்
ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித் தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை, “ஆர்ய” என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தனரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்தியதென்பதும், அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்டதென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவும் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். (வெள்ளை வாரணனார்: தொல்காப்பிய வரலாறு)
இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார்,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
என்னும் தொல்காப்பிய அடிகளுக்குத் தவறானஉரை தருகின்றனர் பலர். காதலால் இணைந்த பின் பிரிவு ஏற்பட்டமையால் பிராமணர்கள் திருமண முறையை வகுத்தனர் என்பதுபோல் நச்சினார்க்கினியர் முதலானோர் தெரிவிக்கின்றனர். இவர் போன்றவர் களிடமிருந்து மாறுபட்ட சரியான பார்வையைக் கொண்டுள்ளார் இலக்குவனார், ‘ஐயர்’ என்பது பிராமணரைக் குறிக்காது என்றும் தமிழில் தலைவனையும் தந்தையையும் குறிக்கும் என்றும், ‘கரணம்’ என்பது எழுத்து மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும் என்பதையும் விளக்குகிறார்; கணக்கு எழுதும் கணக்கப்பிள்ளையைக் கரணம் எனச் சொல்லும் இக்காலவழக்கையும் சான்றாகக் காட்டுகிறார்; காதலர்கள் மனம் மாறி இணைந்துவாழும் உறுதியில் இருந்து பின் வாங்கியதால் தமிழர்களுக்காகக் தமிழகத்தலைவர்கள் தமிழ்த் திருமணமுறையைக் கொண்டுவந்தனர் என்பதையும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணப்பதிவு முறையைக் கொண்டுவந்தவர்கள் தமிழர்களே என்றும் மெய்ப்பிக்கிறார்.
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply