நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இரா.இராகவையங்கார். : 20

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 19. தொடர்ச்சி)


5. பூதப்பாண்டியன் தேவியார் (தொடர்ச்சி)



மேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செயலானும், அவ்வமையம் ஆண்டு உடனிருந்த மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, ‘சிறுநனி தமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே’ எனப்பாடியதனாலும் அதனை ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வியுமுடைய இருபெருமக்கள் காதலுனுங் காதலியுமாக அன்புபட்டியைந்த இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டற் கரிய தொன்றே. இதற்கு மிகவும் பிற்காலத்தே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான் வரதுங்க பாண்டியனும் அவனுடைய பெருந்தேவியுங் கல்வியறிவுடையராய்ச் சிறந்தனரெனத் தெரிவது. வரதுங்க பாண்டியன் பிரமோத்தரகாண்டம் தமிழாற் பாடினான். தமிழ்நாவலர் சரிதைக்கண் ‘பணியாரக் குடத்துள் மதுரைக்குப் பாண்டியன்தேவி விடுத்த கவி’ என்னுந் தலைப்பின் கீழ்,

என்னையிவ்வா றவர்மறந்தும் யானவரை
     
மிகநினைந்திங் கிருந்து வாட
முன்னைவினைப் பயன்றானோ வப்பிறப்பிற்
     
செய்ததவ முடிந்த வாறோ
கண்ணன்மத னபிராமன் வரதுங்க
     
ராமனியற் காசி நாட்டி
லன்னவயற் குருகினங்கா ளினியெவ்வா
     
றுயிர்தரித்திங் காற்று மாறே

செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங்
     
கணவருடன் சேர்ந்து வாழ
வெப்பாரு மில்லாவென் கணவனுடன்
     
யான்கூடி யுறவா டாமல்
வெப்பாலு மிகுகாமத் துயராலு
     
நாடோறு மெலிந்து வாடி
யிப்பாடு படவென்றோ விறைவனென்
     
றலையேட்டி லெழுதி னானே

எண்டிசா முகத்துந் திங்க
     
ளிளநிலா வெள்ளங் காயக்
கொண்டமால் பெருகுந் தோறுங்
     
கொழுங்கணீர் முலையிற் சோரப்
பண்டுநா மறியாக் காமத்
     
துயரினாற் படுவ தெல்லாம்
வண்டுகா ளுரையீ ருங்கள்
     
வரதுங்க ராம னுக்கே.’

என வரும் பாடல்களான் அவ் வரதுங்க பாண்டியன் தேவியின் புலமை அறியத்தகும். இப்புலமை பூதப்பாண்டியன் தேவியாரின் நல்லிசைப் புலமைக்கு ஒப்பாவதில்லையாயினும் இவ்வகைக் கல்விச்சிறப்புப் பாண்டியர்குடிக்கண்ணேதா னுள்ளது என்பதுமட்டில் நன்கு விளங்கும். இத்தகையாளரே ஒத்த கிழவனும் கிழத்தியு மாவர். உருவமுதலியவற்றான் எத்தனையும் ஒத்து அறிவான் வேற்றுமைப்படின் அக்காதலனும் காதலியும் ஒருகாலும் தம்முள் ஒத்தாராகார். ‘உறுப்பொத்தன் மக்களொப் பன்றால்’ என்ற ஆன்றோர் திருவாக்கினையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இங்ஙனம் பெரிதும் அருமையாய்க் காண்டற்குரிய இவ்வறிவொப்பின்கட் பெருமகிழ் கூர்ந்து பூதப்பாண்டியனும் அவனுக்குச் சிறந்த பெருந்தேவியாரும் இனிது வாழ்கின்ற நாளில், இவ்வகை அறிவுடைச் சேர்க்கைக்கண் அழுக்காறு கொண்ட அறிவில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் இன்னுயிரைக் கவர்ந்தது. அந்நிலையில் அறிவுடைப் பெருந்தேவியாரின் துன்பவெள்ளம் கரையடங்குவதோ! இவரது கேண்மை பேதையார் கேண்மை யில்லையே; அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சின ரிருவர் ஓருயிராகக் கலந்ததன்றோ.

மக்க ளிழந்த இடும்பையினும் மனையா ளிழந்த இடும்பையினும், மிக்க இடும்பை ஓவாத விதவை இடும்பை[*]

என்பரே! தந்தை தாய் முதலாயினோரை இழந்தார்க்குத் துயராற்றுதற்கு அம்முறைசொல்லிப் பிறரைக் காட்டுவதுண்டு; கணவனையிழந்தார்க்கு அங்ஙனஞ் சொல்லிக்காட்டுதலுமாகாதே; இவையெல்லாம் நன்குணர்ந்த இவரது கற்றறி நெஞ்சம் என்பாடுபடும்! அதனை எம்மா லெளிதி லறிந்துரைக்கத் தக்கதன்று. பெருந்தேவி இவ்வாறு துயருழவாநிற்கையில் அரசனுக்கு உரிமைச்சுற்றத்தினர்

[* – இச்செய்யுள், ஒட்டக்கூத்தர் பாடியதென்று சொல்லப்படும் இராமாயணம் உத்தரகாண்டத்து, திக்குவிசயபடலத்திலுள்ள 138- ஆவது கவியாகும். இப்பாடல் முழுதையும் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பதிகத்தின் 42- ஆவது அடிவிசேடவுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.]

பிறர் பூதப்பாண்டியனது திருவும் வீரமும் பொலிகின்ற திருமேனியை அவனது பெருமைக்குத் தக்க பெருஞ்சிறப்புடன் இடுகாட்டுய்த்து ஈமத்தேற்றித் தீக்கொளுவுவாராயினர். உயிர்க்காதலனது திருமேனியையுங் காணப்பெறாத இந்நிலையிற் பெருந்தேவியாரது துயரம் கடலாய்ப் பொங்கித் தலைக்கொண்டது. அப்போது தேவியார் ஆற்றொணாதவராய்ப் ‘பசைந்தாரைத் தீர்தலிற் றீப்புகுத னன்று ‘ என்ற சான்றோர் திருவாக்கின்படி தமதாருயிர்க் காதலனுடன் அவ்வீமத்தீயிற் பாய்ந்துமாய்தலே தம்மாற் செய்யத்தகுவதென்று தேர்ந்து அவ்வாறு செய்ய ஒருப்பட்டனர். அவ்வமையம் ஆண்டுக்குழீஇ யிருந்த மதுரைப் பேராலவாயார் முதலிய புலவர் சான்றோர்கள் தம்மோ டொத்த அறிவுடையரசியையும் இழக்கலாகுமோ என்று தேவியாரைத் தீப்புகாமல் விரைந்து தடுப்பாராயினர். அதுகண்டு பெருந்தேவியார் ஈமத்தீப்புறத்து நின்றுகொண்டு அச் சான்றோரை நோக்கி,

பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு
முயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே.’

என்னும் பாடலைக் கூறித் தீயிற்பாய்ந்து மாய்ந்தனர். தம் ஆருயிர்க் கொழுநனை நீங்கிய இவ் வுலகவாழ்க்கையே இப் பெருந்தேவியார்க்குச் சுடுதீ யாயிற்று; அக் கணவனுட னிறத் தற்குக் காரணமான சுடுதீயோ அரும்பற மலர்ந்த தாமரைக் குளிர்நீர்ப்பொய்கை யாயிற்று. இங்ஙனம் இயற்கையையும் மாற்றுகின்ற அன்பென்பதொன்றின்றன்மை அமரரும் அறிந்ததன்று. இப்பாட்டால் இவரைச் சான்றோர்பலர் தீப்பாயாமல் விலக்கினாரென்பதும், அங்ஙனம் விலக்கினாரை யெல்லாம் பொல்லாச்சூழ்ச்சியர் என்று முனிந்தனர் என்பதும், கைம்மைநோன்பினை வெறுத்தன ரென்பதும், கணவனுடன் மாய்தலை மகிழ்ந்தன ரென்பதும் பிறவும் நன்குணர்ந்துகொள்க.

இப்பாட்டொன்றே இம் மெல்லியலாரது நல்லிசைப்புலமையினைச் செவ்விதி னறிவுறுத்தும். இச்செய்தி நிகழ்வுழி யுடனிருந்த மதுரைப்பேராலவாயர் இத்தேவியாரது அரும்பெருஞ் செயற்கு வியந்து, ‘மடங்கலிற் சினைஇ’ என்னும் புறப்பாட்டைப் பாடினர். அதனானும் இவரது பேரன்பும் அருஞ்செயலும் அறிந்துகொள்க.

இனி, அகநானூற்றில் பூதப்பாண்டியன் பாடிய ‘நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும்புனல்‘ என்னும் பாட்டினுள்,

பொருநர், செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்
இன்னிசை யியத்திற் கறங்குங்
கன்மிசை யருவிய காடிறந் தோரே

என்பதனால், பொதியின்மலைக்க ணிருந்த திதியன் என்னுங் குறுநிலமன்னன் கூறப்பட்டுள்ளான். நெடுஞ்செழியனாற் றலையாலங்கானத்துச் செருவெல்லப்பட்ட எழுவருள் திதியனும் ஒருவன் என்பது, ‘பகுவாய் வராஅல்’ என்னும் அகப்பாட்டானும் மதுரைக்காஞ்சியுரையானும் அறியப்படுதலால், பூதப்பாண்டியன், நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்ட காலத்தவ னாவன் என அறிக.

திருவனந்தபுரத்தைச் சார்ந்த மேலைப்பிடாகையில் தோவாழைக்கு மேற்காக ஐந்துநாழிகை வழித்தூரத்துள்ள தரிசனன்கோப்பு எனப்பெயரிய சிற்றூரில் ‘பூதப்பாண்டியன்’ {Swell’s Antiquities Vol, I. page 258.} கோவில் என்னும் பெயரில் ஓர் கோயி லுள்ளது என்பது இங்கு அறியப்படுவது.

இத்துணையுங் கூறியவாற்றான் இமிழ்கடல் வரைப்பிற்றமிழுடையாரெனும், பாண்டியர் குடிக்குக் காண்டகு திலதமாய்க், கற்பினுக் கணியாய்ப் பொற்பினுக் கிடனாய், நல்லிசைப் புலமைச் செல்வமகளா யீண்டிய பூதப் பாண்டியன்றேவியாரின் வரலாறு ஒருவாறுணர்க.

(தொடரும்)

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்

 இரா.இராகவையங்கார்