kapaviruthu-azhaippu02

kapaviruthu-azhaippu01

 

 

அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் தலைமையில்   இயங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை இவ்வாண்டு ‘அறவாணர் சாதனை விருதினை’, அருந்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு வழங்குகிறது. புதுவைக்குயில் வழியிலான தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லனுக்கு இவ்விருது வழங்குவது பெரிதும் பொருத்தமுடைத்து. ஆடி 24, 2045/9.8.2014 காலையில் சென்னைத் தமிழ்க் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் அனைத்திந்திய இவ் விருது வழங்கப்படுகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னைத்துணைவேந்தர் முனைவர் மு.தங்கராசு முனைவர் க.தமிழமல்லன் அவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துகிறார்.

பிறப்பு

  புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திரு.பொ.கண்ணையன், திருவாட்டி க.தனலட்சுமி ஆகியோரின் அருந்தவப்புதல்வராக ஆனி 17, 1980 / சூலை 1, 1949 இல் பிறந்தார். கல்வியியலில் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர், தனித்தமிழில் எழுதுவதையும் தனித்தமிழைப் பரப்புவதையும் முழு மூச்சாகக் கொண்டதால் தம் பெயரைத் தமிழமல்லன் என மாற்றிக்கொண்டார்.

பல்துறை ஈடுபாடு

தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும்
துடித்தெ ழுந்தே!

எனத் தனித்தமிழ்ப்பாவலர் தமிழமல்லன், படைப்பாலும் பணியாலும் ஒல்லும்   வகையெலாம் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.

1.பாடல்

2.சிறுகதை

3.பாவியம்

4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்

5.சிறுவர் இலக்கியம்

6.இதழியல்

7.உரைவரைதல்

என இவர் ஈடுபாடு கொண்ட இலக்கியத்துறைகளோ பல.

இலக்கிய இயக்கங்கள் நடத்தியும் மொழிநலப் போராட்டங்கள் நடத்தியும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறார். 42 ஆண்டுகள் இலக்கியப்பணிப் பட்டறிவு கொண்டவர் இதுவரை 36 நூல்கள் எழுதியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு முதல் ‘வெல்லும் துாயதமிழ்’ திங்களிதழைச் சிறப்பாக நடத்தி வருகிறார். (இவ்விதழ் குறித்த சிறப்புகளைத் தனியே பிறிதொரு நேரம் எழுத இருக்கிறோம்.)

மலேசியா (2 முறை), சிங்கப்பூர் (2 முறை), இலங்கை (1 முறை), தாய்லாந்து (1 முறை) என அயல்நாடுகளுக்கும் சென்று தமிழ்க்குரல் முழங்கி வந்துள்ளார்.

தேடிவரும் விருதுகளும் பெருமைகளும்

தனித்தமிழுக்கும் இலக்கியப்பணிகளுக்கும் தமிழமல்லன் அயராது ஆற்றிவரும் அரும்பணிகளைப்பாராட்டிப் பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருது வழங்கி மகிழ்ந்துள்ளன.

  1. செந்தமிழ்ச் செம்மல்விருது (குழித்தலை கா.சு நினைவு இலக்கியக்குழு-10.7.90), 2. இலக்கியச் செம்மல், (கடலுார்த் தமிழியக்கம் -28.7.1991), 3. செந்தமிழ்க்காவலர்பட்டயம் (தலைநகர்த் தமிழ்ச்சங்கம் – 19.8.1994), 4. தமிழ்மறவர் விருது (சென்னை, தமிழ்ச்சான்றோர்பேரவை – 25.4.1994)5. சிறுவர்இலக்கியச் சீர்மணி, (சிறுவர் இலக்கியச்சிறகம், புதுச்சேரி-21.04.2001), 6. தமிழ்மணி விருது (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்-15.09.2001), 7. அருவினையாளர் (சாதனையாளர்) விருது, (சேலம் நாகப்பன் அறக்கட்டளை-), 8.தமிழ்இலக்கிய மாமணி விருது (உலகளாவிய உன்னத மானிடசேவைமையம், சென்னை -20.12.2003), 9. பாவேந்தர் மரபுப் பாவலர் விருது (சென்னைப் பாவேந்தர்பாசறை – 29.04.2003), 10. பாவாணர் கொள்கை பரப்புநர் விருது (பாவாணர் கோட்டம், முறம்பு, (விருதுநகர்) – 07.02.2005), 11. மனோன்மணியம் சுந்தரனார் தனித்தமிழ்க் காவலர் பட்டம், சங்கரதாசு சுவாமிகள் இயல்இசை நாடக சபை, புதுச்சேரி 16.03.2003 ), 12. பாவாணர் விருது (புதுவைத் தமிழ்க்கலை மன்றம்), 13. செம்பணிச் சிகரம் (குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக்கழகம், புதுச்சேரி(16.8.2009), 14. சிகரம் விருது (நாடகக் கலைச்சங்கம் புதுச்சேரி -20.3.2012), 15. வாழ்நாள் அருவினையர்(சாதனையாளர்) விருது (மறுபக்கம் கிழமைஇதழ்-20.4.2012), 16. ஞானராசா மகிமைச்செல்வி விருது – (மூவொரு கடவுள் அறக்கட்டளை -28.4.2012) என்பன போன்ற விருது வரிசையிலும் விருது தருநர் வரிசையிலும் அறவாணர் அறவினையாளர் விருதும் அறவாணர் ஆராய்ச்சிஅறக்கட்டளையும் இணைந்தமை மகிழ்ச்சிக்குரியது.

1. பாவாணரின் தமிழ்ப்பணி என்னும் நூலுக்குக் கம்பன் புகழ்ப் பரிசு(1997)

2. நிலாச்சீட்டு என்னும் சிறுவர்க்கான பாடல்தொகுப்பு நூலுக்கு, நேரு குழந்தைகள் இலக்கியவிருது (1999), 3. பாமுகில் (பாடல் தொகுப்பு) நூலுக்கு கம்பன்புகழ் இலக்கியப் பரிசு (2002) ஆகியன புதுச்சேரி அரசால் இவருக்குவழங்கப் பெற்ற பரிசுகளாகும்.

‘தமிழ்ப்புதுவை’என்னும் மாதஇதழ் நடத்தியபா(கவிதை)ப்போட்டியில் (06.09.95.)பரிசு பெற்றுள்ளார்.

தமிழமல்லனின் ‘மஞ்சளுக்கு வேலையில்லை’எனும் சிறுகதை நுாலுக்காக, சென்னைப் புதுயுகம் அமைப்பின் பாராட்டு (1997)

   ‘பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் நூலுக்காக, புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு (13.10.1999)

   ‘தனித்தமிழில் பாவியங்கள்’ நூலுக்காக, தாரைப்புள்ளிக்காரர் சிறந்த நாலுக்கான விருது, (சேலம் -19.2.2012)

‘அண்ணல் பாவிய நூலு’க்கு விருது (கரூர் திருக்குறள்பேரவை-15.4.2012)

என இவரின் படைப்புகளுக்காகத் தனிப்பட்ட பரிசுகளும்விருதுகளும் பெற்றுள்ளார்.

நல்லாசிரியர்

1969 இல் இடை நிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தவர் முதுநிலைத்தமிழாசிரியராக 2009 இல் பணி நிறைவு பெற்றார். 40 ஆண்டுக் காலப்பணியில் இவர் ஊட்டிய தமிழுணர்வும் ஒழுக்க உணர்வும் பொதுநல நேயமும் மாணாக்கர்களுக்கு நல்வழிகாட்டியாய் அமைந்தன. இவரது சிறப்பான பணிகளைப் பாராட்டி, இவருக்கு நல்லாசிரியர் விருதினை, புதுச்சேரி அரசு   05.9.2006 அன்றுவழங்கியுள்ளது.

 பாராட்டும் சீராட்டும்

விருதுகள் பெற்றமை, முனைவர் பட்டம் பெற்றமை, இலக்கியப் பணிகள், தமிழ்த்தொண்டு முதலானவற்றிற்காக,

1. குழந்தை எழுத்தாளர் சங்கம்(14.12.2001), 2. புதுவைத் தமிழ்ச்சங்கம் (15.12.2002), 3. வெற்றித்தமிழர் பேரவை, புதுச்சேரி(12.10.2003), 4. திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்(10.7.2002), 5. சேலம் தமிழ்மன்றம், 6. உலகத்திருக்குறள் மையம் (21.11.2008), 7. நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி (19.3.2010)   முதலான பல்வேறு அமைப்புகள் இவரைப் பாராட்டி மகிழ்ந்தன.

தமிழ்நலக் கிளர்ச்சியாளர்

கெடல் எங்கே தமிழின் நலம் – அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தரின் கட்டளைக்கிணங்கத் தமிழுக்குக் கேடு வரும் பொழுது அல்லது கேடாகப் பிறர் பேசும் பொழுது கிளர்ந்தெழுவதே இவர் வழக்கம்.

தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று புலவர் கீரன் பேசியதைஎதிர்த்துப் போராடியதும்

தத்துவம் தமிழில் இல்லை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி பேசியதைத் தனியராய்ச் சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்ததையும் சான்றாகக் குறிப்பிடலாம்.

புதுச்சேரியின் ஆட்சிமொழி   ஐந்து மொழிகள் எனச் சிலர் கூறியபோது, அதனை எதிர்த்து, ஆட்சிமொழி தமிழ் மட்டுமே   என நூல் எழுதிக் கருத்தரங்கம் நடத்தியதையும் இவரின் போர்க்குணத்திற்குச் சான்றாகக் கூறலாம்.

   1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது, 2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது. 3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலை மாற்றப்பட்டதை எதிர்த்துப் போராடி. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது. 4. பாழ்பட்டுக்கிடந்த, புதுச்சேரிப் பாவேந்தர் சிலைப்பூங்காவைச் சீர் செய்யுமாறு போராடி அரசு சரிசெய்தது. 5. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி, பழையபெயர் வைக்கச் செய்தது. 6. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டததை எதிர்த்து மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது 7. கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை 21 நாள்கள் செய்து. அதன் விளைவாகக் கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டமை,

என இவர்   முன்னின்று களம் கண்டுவாகை சூடிய நிகழ்வுகள் பல உள.

தமிழுக்காகப் போராடி வரும் இவர், தமிழ் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைக் கண்டித்தும் தமிழ் ஈழத்திற்காகவும் உண்ணாநோன்புப் போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார்.

பிற தமிழார்வலர்களுடன் இணைந்து, தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் மூன்றுநாள் உண்ணாநோன்பில் இருந்துள்ளார்.

விழா நிகழ்த்துநரும் ஊக்குநரும்

  உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்திய (1984) பெருமை இவரையே சாரும்.

  புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது, புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது என அரசு அமைப்புகளையும் தனித்தமிழ் ஊக்கத்திற்கான விழா எடுக்கச் செய்ததும் இவரின் பாராட்டிற்குரிய பணிகளாம்.

  புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியதுடன் தொடர்ந்தும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து வேண்டியும், அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் நடத்தியும் வேறு வகைகளிலும் வலியுறுத்தி வருகிறார். இவரின் இக்கனவு விரைவில் நிறைவேறுவதாக!

  பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய சங்க இலக்கியங்களைப் பரப்பும்வண்ணம் 60மாதங்கள்தொடர்சொற்பொழிவு நடத்தியது இவரின் இலக்கியப் பணியின் மகுடம் எனலாம்.

 தனித்தமிழ்ப்படைப்புகளைப் பெருக்கவும் படைப்பாளர்களை ஊக்குவிக்கவும் கடந்த பல ஆண்டுகாளாகத் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி வருகிறார். .

  இவரது புலமை நலத்தையும் ஆய்வுச் சிறப்பையும் பிற அமைப்புகளும் பயன்படுத்திக் கொண்டன. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை நடத்திய பல கருத்தரங்குகள் இவரது உரையால் சிறப்பு பெற்றன.புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கு- (புது தில்லி), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்(இரு நாள் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு), பெங்கலூர்த்தமிழ்ச்சங்கம்(பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு) உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் (சென்னை), தலைநகர்த்தமிழ்ச்சங்கம்(சென்னை), கா.சு நினைவு இலக்கியக்குழு (குழித்தலை), உலகத்தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் (மலேசியா), செந்தமிழ்ச் சிலப்பதிகார மாநாடு- 1999(கோலாலம்பூர்), பாவாணர் நுாற்றாண்டு விழா -2002 (மலேசியா), பிற தமிழ் அமைப்புகள் நடத்திய கருத்தரங்கங்களும் விழாக்களும் இவரது உரைகளாலும் ஆய்வுக் கட்டுரைகளாலும் பொலிவு பெற்றன.

  புதுச்சேரி வானொலி, புதுவைத் தொலைக்காட்சி, கதிர்(சன்) தொலைக்காட்சி முதலான ஊடகங்களிலும்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

 தனித்தமிழ்ப்பள்ளி முன்னோடி

தாய்த்தமிழ்ப்பள்ளிகளுக்கு முன்னோடியாக, தனித்தமிழறிஞர் தமிழமல்லன், தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். செயல்பாடிழந்த இப்பள்ளி இனி மேலும் புத்துயிர் பெறும் வண்ணம் இவர் ஆக்கப்பணியில் ஈடுபட்டால் நன்று.

 பொதுநலம் நாடும் நற்றமிழ்ப்பண்பாளர்

இலக்கியப்பணிகளில் மட்டுமல்லாமல் பொதுநலப்பணிகளிலும் ஈடுபட்டு, மக்கள் உள்ளம் கவர்ந்த தொண்டர் தலைவராகத் திகழ்கிறார்.

தட்டாஞ்சாவடியில் பாவாணர் நற்பணிமன்றம் அமைத்து இலக்கியப்பணிகளுடன்மட்டுமல்லாமல். நண்பர்கள் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் பல நற்பணிகளைச் செய்து வருகிறார்.

இரவுப்பள்ளி

தெருவிளக்குகள் எரியுமாறு செய்தல்

துப்புரவுப்பணி

சாலை புதுப்பித்தல்

விளையாட்டுப்போட்டி

பொதுக்கழிவறை அமைத்தல்

அறிஞர்களுக்கு விருது வழங்கல்

கோலப்போட்டி

கல்வியிலும் விளையாட்டிலும்

சிறந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசளித்தல்

எழுத்தாளர்கள் சுற்றுலா

இலவசப் பல் மருத்துவம்

இலவசப் பொதுமருத்துவம்

எனப் பல்வேறு வகைகளில் இவர் ஆற்றும் பணிகள் பாராட்டத்தக்கன.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை (குறள் 132)

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர்   நெறியை வாணாளெல்லாம் பின்பற்றி உயர்ந்த பண்பாளராகத் திகழ்கிறார்.

  அறவாணர் அருவினை விருதாளர் வழங்கும் அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கும் அதன் அமைப்பாளர் முனைவர் க.ப. அறவாணன், தெரிவுக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டை ‘அகரமுதல’ தெரிவிக்கிறது. அருவினை விருதாளர்கள் தமிழ்ச்செயல்தொண்டர் நா.அருணாசலம், முனைவர் இராம.இராமநாதன், முனைவர் வேலூர் ம.நாராயணன் ஆகிய சான்றோர்க்கும் அகரமுதல நல்வாழ்த்தினைத் தெரிவிக்கிறது.

  அருவினை விருதிற்கு முற்றிலும் தகுதியான தகைமைசால் தமிழமல்லன் தமிழ்போல் சிறந்து வாழ ‘அகரமுதல’ வாழ்த்துகிறது.

நல்லறிஞர் தமிழமல்லன் நானிலத்தில்

நலம்சூழ என்றும் வாழியவே!

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை

ஆடி 11, 2045, சூலை 27, 2014

http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png