ஐயோ தமிழுக்கு ஆபத்து!

ஓர் இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனம் அழிந்துபோகும்.

அந்த வேலையில் இப்பொழுது மத்திய பா.ச.க. அரசு இறங்கித் தமிழை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

அதற்குத் துணையாக இன்றைய அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசும் ‘எட்டப்ப’ வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

அண்டைய இரு மாநிலங்களான கேரளா, கருநாடகம் அந்தந்த மாநில மொழிகளையே பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி இருக்கின்றன.

ஆனால் தமிழகத்தின் நிலை அது அன்று.

தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்காமலேயே பட்ட மேற்படிப்பை முடித்திட முடியும் என்ற அவல நிலை இந்த அரசால் ஏற்பட்டுள்ளது.

2006 தி-.மு.கழக ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டப்படி 2006-2007 ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது.

இது படிப்படியாக உயர்ந்து 2015-2016ஆம் ஆண்டின் பொதுத் தேர்வில் தமிழைக் கட்டாயப் பாட மொழியாக ஆக்கிப் பகுதி ஒன்றில் எழுத வகை செய்யப்பட்டது.

11 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கும், பிற மொழி மாணவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறி தமிழை நசுக்கும் வேலையை செய்திருக்கிறது எடப்பாடி பகர( பினாமி) அரசு.

ஆதாவது மொழிச் சிறுபான்மையினர், பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு வசதியாகத் தமிழைக் கட்டாயப் பாடமாக இல்லாமல் செய்துவிட்டார்கள்.

அதுபோன்ற சட்டம் வடநாட்டில் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குசராத்து போன்ற எந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு?

தமிழைப் படிக்காமலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுப் பிற மொழி மாணவர்கள் பட்டதாரிகள் மாணவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் தமிழ்நாட்டில்.

இதன் மூலம் தமிழ்மொழி மாணவர்கள் இரண்டாம் தர மூன்றாம் தரத்தவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசுத் தேர்வாணையத்தில் வடநாட்டுக்காரர்கள் திணிக்கப்படுகிறார்கள்.

தொடரித்துறையில்(இரயில்வேயில்) வடநாட்டவர்களே பெரிதும் வலிந்து பணியமர்த்தப் படுகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் கூட இப்பொழுது வடநாட்டுப்பணியாளர்களின் ஆதிக்கம் பெருகிக் கொண்டிருக்கிறது.

அனைத்துத் துறைப் பணிகளில் தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பா.ச.க.வின் எடுபிடி அரசாக இருக்கும் எடப்பாடி அரசு, கல்வித் துறையில் தமிழை ஒழித்துப் பா.ச.க.வுக்கு துணை போகும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.

இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

மொழி அழிந்தால் இனம் அழியும்.

மக்கள் இதை மறக்கக் கூடாது.

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ் நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும் என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனாரின் பொருளார்ந்த வரிகளைத் தமிழகம் மறந்து விடக்கூடாது.

சுப.வீரபாண்டியன்

கருஞ்சட்டைத்தமிழர்

திச.03, 2017