ஓர் அரிமா நோக்கு- வெளியீடு :arima noakku nuulveliyeedu
கவிக்கொண்டல் - சிறப்பிப்பு-விடுதலை :kavikondal_ sirappippu_viduthalai

மா. செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள்; ‘ஓர் அரிமா நோக்குநூலினைப் பேராசிரியர் வெளியிட்டார்.

புரட்சிக் கவிஞர் விழாவினைப் பெரியார் திடலில் நடத்த காரணம் கவிக்கொண்டல் : தமிழர் தலைவர் புகழாரம்!

  சென்னை அண்ணாசாலை உமாபதி கலையரங்கில் ஆடி 14, 2047 / சூலை 29, 2016 மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் சிறப்பு விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.

 ‘மீண்டும் கவிக்கொண்டல்‘ இதழின் 25ஆம் ஆண்டு விழா, இதழாசிரியர் மா.செங்குட்டுவன் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய ‘ஓர் அரிமா நோக்கு’ நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது.

 சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம் தலைமையேற்று உரையாற்றினார். மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

 கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் எழுதிய ’ஓர் அரிமா நோக்கு’ நூலை இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம், மேனாள் மாநகரத்தலைவர் சா.கணேசன்  முதலானோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர்:

இனமானப் பேராசிரியர் நூலை வெளி யிட்டு உரையாற்றும் போது குறிப்பிட்ட தாவது:

  இங்கே நாம் தமிழர்களாகக் கூடி இருக்கிறோம்.  தமிழுக்காக அதிகமாகச் சேர முடியா அளவில் இருக்கிறோம். தாய் மொழிப் பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று ஆகியவற்றைத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

  120 ஆண்டுகளுக்கு முன்னால் திருவிக, தந்தைபெரியார், வ.உ.சி வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி தாழ்ந்து, ஒடுக்கப்பட்டு இருந்தது. கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தமிழை ஏற்க மறுக்கிறார்கள். வட மொழியில் நடப்பது பெருமை, இறைவனுக்கு மனநிறைவு என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள்.

 தந்தை பெரியார் பேச்சை நான் 10, 12 அகவையில் கேட்டேன். அன்றைக்குக் கேட்ட போது இருந்த அதே உணர்வு, அதே நிலையில்தான் இருக்கிறேன்.

 தமிழர்கள் தமிழர்களாக வாழவில்லை என்றே கருதுகிறேன்.

 இன்றைக்குத் தமிழ் தாழ்ந்து, வட மொழிக்கு வந்த  சிறப்புகுறித்து தமிழர்கள் எண்ணிட வேண்டும். வடமொழி தமிழனுக்குத் தெரியாது. யாரும் வட மொழியைத் தெரிந்திருக்க முடியாது. பல ஏடுகள், பல ஆள்கள் கூடிப் பேசி இந்த உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

  நம் தமிழ்நாட்டில் தமிழ் போற்றப்படும்படியாக அதிகமாக இல்லை. மற்ற மொழிகள் மற்ற மாநிலங்களில் போற்றப்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ் உணர்வை போற்றிப் பாதுகாத்திட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு போராசிரியர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர்

  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஒரு போராளியை இன்னொரு போராளி பாராட்டும் விழா இவ்விழா. திராவிட இயக்கத்தின் சார்பில் பாராட்டு என்றாலும், விடுதலைக் குழுமத்தின் சார்பில் தந்தை பெரியார் வாழ்த்துகளாக பாராட்டுகிறோம்.

  இங்கே பேசிய இனமானப் பேராசிரியர் உணர்வு அப்படியே உள்ளது. அவர் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோதிருந்த உணர்வு அப்படியே இன்றும் உள்ளது. சமற்கிருதத்தை எதிர்ப்பது என்பது மொழிக்கு எதிராக அல்ல பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரானதாகும்.

  கவிக்கொண்டல் அவர்கள் பெரியார் திடலிலே நெருக்கடிக் காலக் கட்டத்திலே பாரதிதாசன் விழா ஏற்பாடு செய்தார். அதில் கலைஞர் பேசுவதாக இருந்தது. ஆனால், காவல்துறையினர்  இசைவு வழங்கி விட்டுப் பின்னர் தடை போட்டனர். என்ன காரணம் என்றால்  அரங்கத்திற்கு வாசல் ஒன்று மட்டுமே உள்ளது.  எதிர்பாராத் துயரம் நடந்தால் கூட்டம் வெளியே வர முடியாது என்றார்கள் – அந்த நிலையிலே அதற்கு பின்பு பெரியார் திடலிலே கூட்டமே நடத்த முடியாத சூழல் நெருக்கடிக் காலக் கட்டத்திலே உருவானது.

  பிறகு இன்று வரை பாரதிதாசன் விழா சிறப்பாக தொடர்ந்து நடந்து வருவதற்குக் காரணம் கவிக்கொண்டல் ஆவார்கள் என மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

  பெங்களூரு தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் முத்துச்செல்வன் எனும் மு.மீனாட்சி சுந்தரம், உ.கருணாகரன், மாம்பலம் ஆ.சந்திர சேகர், இரத்தினசபாபதி, த.கு.திவாகரன், இளவரசு அமிழ்தன்  முதலானோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

 விழாவில் நூலை வெளியிட்ட பேராசிரியர், சிறப்புரை ஆற்றிய தமிழர் தலைவர், தலைமையுரை யாற்றிய மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம் ஆகியோருக்குக் கவிக் கொண்டல் மா.செங்குட்டுவன், அவர் தம் குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தனர்.

  89 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்கும் கவிக்கொண்டல் மா.செங்குட் டுவன், இனமானப் பேராசிரியர், தமிழர் தலைவர் ஆசிரியர், மேனாள் நீதிபதி க.ஞானப்பிரகாசம் ஆகியோருக்குத் தமிழறிஞர்கள் பலரும் பொன்னாடைகள் அணிவித்து மகிழ்ந்தார்கள். கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், அவர்தம் வாழ்விணையர் தாமரைச் செல்வி இருவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். இனமானப் பேராசிரியர், கவிக் கொண்டல் மா.செங்குட்டுவன் இணையருக்குப் பொன்னாடை அணிவித்தார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் மு.பி.பாலசுப்பிரமணியம், கவிஞர் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், பேராசிரியர் மங்களமுருகேசன், ஆ.சீ.அருணகிரி, இளமாறன், பூபதி, மகிழ்க்கோ, இளஞ்செழியன், தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மஞ்சநாதன், அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரியார் மாணாக்கன், தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் எழுத்தாளர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டனர். அகரமுதல இதழ் சார்பில் ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் பொன்னாடை அணிவித்தார்.

 

நன்றி : விடுதலை

http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/126944—89———.html

காண்க :

கவிக்கொண்டல் விழா – ஒளிப்படங்கள்