காப்பிக்காடு தொல்காப்பியர் சிலைக்குத்

தமிழ் வளர்ச்சி இயக்குநர்  மாலை அணிவித்து வணக்கம்

 

  தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) – உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் நாகர்கோயிலுக்கு வந்திருந்ததை அறிந்த தமிழ்க்காப்புக்கழகத் தலைவர்  இலக்குவனார் திருவள்ளுவன் காப்பிக்காட்டில் அண்மையில் திறக்கப்பட்ட தொல்காப்பியர் சிலையை வணங்கி வருமாறு தெரிவித்தார்.

  இவர் வருகையைத் தலைநகர்த்தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர்  த.சுந்தரராசனிடம் இலக்குவனார் திருவள்ளுவன்  தெரிவித்து இயக்குநரிடம் வழி விவரம் தெரிவிக்கவும் பிற  நண்பர்களுடன் வரவேற்கவும் வேண்டினார். இயக்குநரிடம் பேசியபின் புலவர் த. சுந்தரராசன், இயக்குநர் கன்னியாகுமரி சென்று விட்டு வருவதாகவும்  அவர் வரும்பொழுது இருட்டிவிட்டால் ஒளிப்படங்கள் எடுக்க இயலாது எனவும் மாலையிலேயே வரச் சொல்லுமாறும் தெரிவித்தார். கன்னியாகுமரியில் புத்தக நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த  அவரிடம் குமரி-திருவனந்தபுரம் சாலையில் சென்றால் 1 மணி நேர அளவில் காப்பிக்காடு ஊருக்குச் செல்லலாம் என்றும் மாலையிலேயே சென்று விடுமாறும்  வேண்டியதும் இசைந்தார். நண்பர்கள் அங்கே இருப்பார்கள் என்றதும் யாரும் வரவேற்குமாறு வரவேண்டா என்றும் தொல்காப்யியரை வணங்கி வருவது பெருமை  என்ற அளவில் சென்று வர இருப்பதாகவும்  மாலை தானே வாங்கி வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.   பொறுப்பாளர்களும் நண்பர்களும் வரவேற்று உடன் இருப்பதை மகிழ்ச்சியான கடமையாகக் கருதுகின்றனர் என்றும் இதனைச்செய்தியாக வெளிவரச்செய்வதன் மூலம் பிறருக்குத் தொல்காப்பியர் சிலை இருப்பது தெரியவரும் என்றும் பார்வையிட ஆர்வம் வரும் என்றதும் ஒத்துக் கொண்டார்.

  இதற்கிணங்க  அவர் காப்பிக்காடு சென்று ஒல்காப்புகழ் தொல்காப்பியம் இயற்றிய வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் சிலைக்கு  மாலை அணிவித்து வணங்கினார். உடன் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர், முனைவர் க.பசும்பொன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் க.சிவசாமி, பிற அதிகாரிகளும் வந்திருந்தனர்.

 அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் விசயராகவன்,  “தொல்காப்பியர் புகழ் உலகமெல்லாம் பரப்பும் வகையில் தமிழக முதல்வர்  செயலலிதா பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார். தொல்காப்பியர் பிறந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியரை வணங்க வந்தேன். இங்கு அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவத்தை பார்த்தது எழுச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது”  என்றார்.

  மேலும், தொல்காப்பியர் சிலைஅருகில் நூலகம் அமைத்து நூல்கள் தருவதற்கும் தொல்காப்பியர் சிலையைச் சுற்றிக் கோபுரம் கட்ட அரசின் மூலம் உதவிகள் பெற்றுத் தரவும் இசைந்தார்கள். தமிழார்வமும் வினைத்திறனும் உடைய இயக்கநருக்குத் தமிழன்பர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

  தலைநகர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தரராசன், குமரித் தமிழ்ச் சங்கத் தலைவர் கருங்கல் கண்ணன், செயலர்  இரவி நடராசன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் புலவர் நீ. ஐயப்பன், விளாத்துறை ஊராட்சித் தலைவர் ஆர்.டி. சுரேசு, ஓய்வுபெற்ற வணிகவரித் துறை ஆணையர் எம். பாசுகரன், தலைநகர் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் வளன் அரசன், தொல்காப்பியர் கழகச் செயலர் பா. வின்செண்டு, அருள்மிகு சதாசிவம் மனோன்மணியபுரம் கோயில் செயலர் எசு.மணிகண்டன்   முதலானோர் இயக்குநரை வரவேற்று  உடனிருந்தனர்.

[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]

படங்கள் : கருங்கல் கண்ணன்