சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்!
கழிக்கின்றோம் பழையவற்றைக்
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
வன்முறையா போகியிங்கே !
சாதிமணி உலையிலிட்டுச்
சதிவெறியாம் பாலையூற்றி
மோதிபகை வளர்வெல்லம்
மொத்தமுமாய் அதிலிட்டு
வீதிகளில் குருதிவாடை
வீசிடவே மனக்குடத்தில்
ஆதிக்கம் பொங்வைத்தே
ஆடுவதா பொங்கலிங்கே !
காடுகளில் உழைப்பவரை
கழனிசேற்றில் புரள்பவரை
ஆடுகளின் மந்தையாக
அடித்தட்டில் தாழ்ந்தவராய்
மாடுகளைப் போல்விரட்டி
மனிதகுலம் தலைகுனிய
கேடுகளை விளைவிக்கும்
கேளிக்கையா காணும்பொங்கல் !
தெருவெல்லாம் அன்பென்னும்
தோரணங்கள் கட்டிவைப்போம்
கரும்புசுவை மனமேற்றிக்
கனிவுததைக் தூவிடுவோம்
அரும்மஞ்சள் முகமொளிர
அணைத்தொன்றாய்க் கூடிடுவோம்
உருவாகும் சமுத்துவத்தில்
உயர்பொங்கல் பொங்கிடுவோம் !
Leave a Reply