இலக்குவனார் திருவள்ளுவன்

 (முன் இதழ்த் தொடர்ச்சி)

            பிற இசைக்கு மூலமான தமிழிசைப் பாடல்கள் மேடைகளில் ஒதுக்கப்பட்டு, “துக்கடாப் பாட்டு” என்றும்  “சில்லறை: என்றும் “உருப்படி” என்றும் அழைக்ககப்பட்டமைக்குக் காரணம் என்ன? இசைத்தமிழ் நூல்கள் எவ்வாறு கேடுற்று அழிந்தன? “இசைத்தமிழ் நூல்கட்குக் கேடுவரக் காரணம் போலியாரியரே” என்கிறார் சூரியநாராயண(சாசுதிரியா)ர் என்னும்  இயற்பெயர் கொண்ட பரிதிமாற் கலைஞர். தமிழின் செம்மொழித் தகுதிகளைத் திறம்படவிளக்கியவர் இவர். “தமிழரிடத்திருந்த பல அரிய விசயங்களையும் மொழிபெயார்த்துத் தமிழர் அறியும் முன்னரே அவற்றைத் தாம் அறிந்தனர் போலவும்; வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” என ஆரியர் இயல்புகளைக் குறிப்பிடுகின்றார். கடவுள் பெயர்களையும் ஊர்ப்பெயர்களையும் சமசுகிருதத்தில் மாற்றி மொழிக் கொலை புரிந்தது போல், தமிழிசை நூல்களை மறையச் செய்து சமசுகிருதமயமாக்கினர். தமிழ்ப்பண்களின் பெயர்களை மாற்றியும் இயற்கையான இசைக்குக் கடவுள் கதைகளுடன் தொடர்புண்டாக்கி தமிழுக்கு ஒவ்வாத தோற்றத்தை உருவாக்கினர்.

தமிழிசைக்கருவி - குழலும யாழும்

தமிழிசைக்கருவி – குழலும யாழும்

            சமசுகிருதத்திலும் இந்தியக் கண்டத்தின் பிற மொழிகளிலும் உள்ள இசை இலக்கணததிற்குரிய இலக்கியமும் இசையும் தமிழ் நாட்டில் இருந்தன. அவற்றைப் பார்த்துத்தான் பிற மொழிகளில் இசைநூல்கள் எழுதினர். இதற்குச் சான்று இவற்றிற்கான பாடல்கள் தமிழ்நாட்டில் பெரு வழக்காய் இருப்பதுபோல் வேறு எங்கும் இல்லாததுதான் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து உரைத்துள்ளனர். இவ்வாறு, காசுமீரத்துச் சாரங்க தேவர் (கி.பி.1210-1241)  தமிழிசையை ஆராய்ந்து ‘சங்கீதரத்னாகரம்” என்னும் சமசுகிருத நூல் இயற்றினார். இவர் ‘பண்’ என்பதை, ‘இராகம்’ என்றார். தமிழ்ப் பண்களுக்கு சமசுகிருதத்தில் பெயர் சுட்டிக் குறிப்பிட்டார். பின் இவையே எங்கும் பரவின. தாய்இசையாண தமிழிசையைப் பேணவேண்டிய தமிழிசை வாணர்களோ வாழவைக்கும் தாயை மறந்தனர். வீழ வைக்கும் பேயைப் போற்றினர். தாய்நாட்டிலேயே தமிழுக்கு இடம் இல்லாமல் போயிற்று. தாய்க்குரிய நிலையை மீட்டுத் தர உருவாகியதுதான் தமிழிசை இயக்கம்.

            தமிழிசை இயக்கம் என்றாலே, அண்ணாமலையார்தான் நினைவிற்கு வருவார். ஆனால்இவர் 11.5.1929இல்தான் இசைக் கல்லூரி நிறுவினார். ஆபிரகாம் பண்டிதர் 1901 இல் ‘தமிழறியுஞ் சங்கம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். 27.5.1912 இல் தஞ்சாவூரில் இசைச் சங்கம் ஒன்றை நிறுவினார். 1912-1918 ஆம் ஆண்டுகளில் 7 இசைத்தமிழ்க் கருத்தரங்கங்களையும் சிறப்பாக நடத்தி ‘இசைக்கலைகளின் தாய் தமிழிசையே’ என்பதை மெய்ப்பித்தார். இவரது ‘கருணாமிர்த சாகரம்” என்னும் நூல் தமிழிசைக் கருவூலமாகத் திகழ்கிறது. அவர் காலச் சூழலில் அயற் சொற்களைக் கலந்திருந்தாலும் தமிழிசைக்கு ஏற்றம் தரும் முதல் நூலாக இதுவே திகழ்கிறது என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

            இக்காலக் கட்டத்தில் இவருக்கு முன்பே பிறந்த பாரதியார் (1882-1921) முதலான பலரும் அயலிசையைக் கடுமையாக எதிர்த்துத் தமிழ் இசையைப் போற்றி வந்துள்ளனர். இவர்களுக்கும் முன்னதாக இசையரங்குகளில் தமிழ்ப் பாட்டுக்கு முதன்மையும் மேன்மையும் வழங்கியவர் காஞ்சிபுரம நாயனப் பிள்ளை எனப்படும் சுப்பிரமணிய பிள்ளை ஆவார். (1887-1934)

ilakkuvanar thiruvalluvan2

             இருப்பினும் தமிழ் தனக்குரிய இடத்தை இசை அரங்கங்களில் அடையாத பொழுது தமிழ்க் குடிமக்கள் வருந்துவதும் அதனைப் போக்கப் பாடுபடுவதும் இயல்புதானே. இவ்வாறு,

            “தமிழ்ச் சபைகளிலே எப்போதும் பொருள் தெரியாத பிறமொழிகளில் பழம்பாடல்களை மீண்டும் மீண்டும் சொல்வதில் நியாயம் இல்லை. அதனால் நமது சாதி சங்கீத ஞானத்தை இழந்து போக நேரிடும்.” இவ்வாறு வருத்தப்படுவது முத்தமிழறிஞர் கலைஞர் அல்லர். ‘தமிழ்நாட்டு மக்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாடல்களை வருடக் கணக்கில் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தோல் காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” – இவ்வாறு கூறுவது தொல்.திருமாவளவன் அல்லர். நம் பாரதியார்தான் இவ்வாறு வேதனையுடன் கூறித் தமிழிசைச் சிறப்பை வலியுறுத்தித் தமிழ்ப் பாடல்களே வேண்டும் என்று போராடினார்.

                        “தமிழ்நாட்டின் பல பாகங்களில் அடிக்கடி சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இவற்றில் பாடுகிறவர்கள் தமிழர்கள்! கேட்பவர்களும் தமிழர்கள்!. ஆனால், தமிழ்ப்பாட்டு மட்டும் பாடுவது கிடையாது.என்ன வெட்கக் கேடு!. எவ்வளவு காலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என வேதனையுறுவது மரு.இராமதாசு அல்லர். கடந்த நூற்றாண்டிலேயே அறிஞர் வெ.சாமிநாதர் இவ்வாறு  கேட்டுள்ளார்.

            இவ்வாறு கடந்த நூற்றாண்டிலும் தமிழிசை வேண்டிப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். பார்வதி செல்லம்மாள் என்பவர், “அந்தோ!, நமக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத அன்னிய மொழியில்பாட்டு கற்றுக் கொண்டு சந்தேகத்துடன் தப்பும் தவறுமாகப் பாடுவதை விட, நாம் நம் தாய் மொழியில் நமக்குச் சுலபமாய் விளங்கக் கூடியதாய் நம் தெய்வத்தைக் குறித்ததாய் உள்ள பாட்டுகளைப் பாடினால் எவ்வளவு  நன்றாக இருக்கும்” என்றார்.

 Ghatam

            இவ்வாறு தமிழ்நாட்டில் தமிழிசை புறக்கணிக்கப் படுவது குறித்து வங்கக் கவி இரவீந்திரநாத் தாகூர் போன்ற பிற மொழியறிஞர்களும் வேதனையுற்றனர். “தமிழ்;நாடு இசைமிகுந்த நாடு . தங்களுக்குத் தெரியாத மொழியில் உள்ள இசையில் அன்பு செலுத்துவதாகச் சொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் தவிர வேறெங்கும் கிடையாது. தாய்மொழி யல்லாத பிறமொழி வாயிலாகப் பாநயம் அறிய முயலுதல் தன் காதலியின் புன்முறுவலைப் பெறுதற்கு வழக்குரைஞர் வைப்பது போலாகும்” என்று தாகூர் இடித்துரைக்கிறார். இருப்பினும் பாரதியார் குறிப்பிடும் இரும்புக் காதும் கல்மனமும் உடையவர்களுக்குத் தெலுங்குப் பாடல்களும் சமசுகிருதப் பாடல்களுமே உயர்வாகத் தோன்றுகின்றன. இவரது வருத்தத்தை இன்றைய தலைவர்களும் அறிஞர்களும் இசைவாணர்களும் வெளிப்படுத்தினாலும் தமிழ்த்தாய் தனக்குரிய இடத்தைப் பிற இடங்களில் பெறாதது போலவே இசைத்துறையிலும் பெறா அவல நிலையே தொடருகிறது.

            (தொடரும்)