தமிழிசை வேண்டும் என அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஈராக்கிலோ உகாண்டாவிலோ கேட்கவில்லை. மொழிகளுக்கு எல்லாம் தாயான முத்தமிழ் வழங்கும் நம் நாட்டில்தான் போராட வேண்டியுள்ளது. எந்த ஒரு நாட்டிலாவது அந்த நாட்டு மொழியில்தான் இசை இருக்க வேண்டும் எனப் பன்னூறு ஆண்டுகளாகப் போராடுகிறார்களா? என்றால் அந்த இழிநிலை நம் அருமைத் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. பிற நாடுகளில் சிற்சில காலங்களில் அயல் இசை ஆதிக்கப் போக்கு இருந்திருந்தாலும் தாய் இசையின் உரிமையை மீட்டெடுத்துப் போற்றிவருகிறார்கள். இங்கிலாந்தில்கூட 200 ஆண்டுகள் செருமானிய இசை மேலோங்கிய பொழுது அறிஞர் கார்லைல் போன்றோர் போராடித் தாய்நாட்டு இசையை மீட்டனர். ஆனால், தமிழ் நாட்டிலோ உண்மைத் தமிழ் மக்களின் விருப்பம் தமிழிசையாகவே இருப்பினும், தமிழிசைக்காகப் போராடும் சூழலே இன்னும் உள்ளது. இப்போக்கு மாறுமோ?அயலிசை தலை சாயுமாறு தமிழிசை மறைப்பு ஓயுமா? தமிழிசை ஓங்குமா? என்பதையே கடந்துவந்த பாதையுடன் ஒப்பிட்டு இன்றைய போக்கில் பார்க்க வேண்டும்.

thamizhisaikaruvi5

            தமிழிசை என்பது மட்டுமல்ல, கருநாடக இசை தென்னிந்திய இசை என்பனவெல்லாம் தமிழிசையையே குறிக்கின்றன. அவ்வாறாயின் கருநாடக இசையை ஏன் வேண்டாம் எனக் கூற வேண்டும் என்கிறீர்களா? கருநாடக இசை என்ற பெயரில் தமிழிசைத் தழுவலான தெலுங்குப் பாடலையும் சமசுகிருதப் பாடல்களையும் கன்னடப் பாடல்களையும் தமிழ்நாட்;டின் அவைகளில் – சபைகளில் – பாடித் தமிழிசையை ஓரங்கட்டுவதைத்தான் கூடாது என்கிறோம். செல்வாக்குள்ள தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் பிறமொழிப் பெயர்களில்தான் ஈடுபாடு உள்ளது. அது போல் வட நாட்டாரால் தமிழிசையானது கருநாடக சங்கீதம் எனக் குறிக்கப்பட்டதும் அப்பெயரே நிலைத்து விட்டது. அப்பெயர் பிறமொழிகளிலும் நுழைவதும் எளிதாகி விட்டது. தமிழ்நாட்டு மேடைகளில் தமிழ்நாட்டுப் பாடகர்கள் தமக்கும் கேட்போருக்கும் தெரியாத மொழிகளில் புரியாத பாடல்களைப் பாடுவதும் மேலோங்கி விட்டது.

                ‘கர்ணம்’  என்றால் காது. செவிக்கு இன்பம் தரக்கூடிய இசை என்ற பொருளில் கருநாடக இசை என்னும் பெயர் வந்தது என்பார்கள் சிலர். ‘கருநாடகம்;’  என்றால் பழமை. எனவே, பழைய இசை என்னும் பொருளில் கருநாடக இசை என்னும் பெயர் வந்தது என்பர் வேறு சிலர். இவ்வாறு சொல்லப் படுவதெல்லாம் வரலாறு தழுவாக் கதைகளாகும். 12 ஆம் நூற்றாண்டில் (கி.பி.1116-1127) வாழ்ந்த சோமேசுவர புல்லோகமால் என்னும் மராத்தியக் குறுநில மன்னன் தமிழிசையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு இசை நூலும் எழுதியவன். இவனது நாட்டிற்கு அடுத்துக் கருநாடகம் இருந்ததால், தென்னகமெங்கும் பரவி இருந்த தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றே குறிப்பிட்டான். இப்பொழுதும் கூடத் தெற்கே உள்ள மலையாளிகள் உள்ளிட்டோரையும் ‘மதராசி’  என்றே குறிப்பிடும் வழக்கம் வடநாட்டில் உள்ளது. இது போல், துங்கபத்திரை ஆற்றுக்குத் தெற்கே இருந்த பகுதிகள் அனைத்தையும் ‘கருநாடகம்;’  என்றே குறிப்பிட்டனர். எனவேதான் ஆற்காட்டு நவாப்பையும் கருநாடக நவாப் என்றே குறிப்பிட்டனர். எனவே, விந்திய மலைக்குத் தெற்கே வேரூன்றியிருந்த தமிழிசையைக் கருநாடக இசை என்றே குறிப்பிட்டனர் என்பது ஆராய்ச்சி அறிஞர்களின் தெளிவான முடிவாகும்.

                தமிழிசைதான் கருநாடக இசை என்னும் பொழுது என்ன பெயரிட்டு அழைத்தால் என்ன என்கிறீர்களா? இது வேறு, அது வேறு என்ற எண்ணத்தில் அயல்மொழிப் பாடல்கள் மேலோங்கி வருவதுடன் இசைத் தமிழ்ச் சொற்கள் வழக்கு இழந்தும் மறைந்தும் அயல் மொழிச் சொற்கள் மேலோங்குகின்றன. ச,ரி,க,ம,ப,த,நி என இப்பொழுது சுர ஒலியைக் குறிக்கிறோம் அல்லவா? இச் சுரஒலிகள் ஆ,ஈ.ஊ,ஏ,ஐ,ஓ,ஒள என்றுதான் இருந்தன.

                ‘குரலே துத்தம் கைக்கிளை உழையே

                  இளியே விளரி தாரம் என்றிவை

                 ஏழும் யாழிசைக்கு எழு நரம்பே”  (பிங்கல நிகண்டு 1402)

என்ற நூற்பா தமிழின் ஏழு சுரங்களைக் குறிக்கின்றது.

                ‘ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று

                  ஏழும் ஏழிசைக்குஎய்தும் அக்கரங்கள்” (பிங்கல நிகண்டு  1415)

என்ற நூற்பா  அவற்றின் குறியீடுகளைக் குறிக்கின்றது.

                இடைக்காலத்தில்தான்  சரிகமபதநி என்னும் சுரக் குறியீடுகள் தோன்றலாயின. பின்பு ‘ச” என்றால் ‘சட்சம்”, ‘ரி” என்றால் ‘ரிசபம்”, என்ற அடிப்படையில் காந்தாரம், மத்திமம். பஞ்சமம், தைவதம், நிசாதம் என்பனபோல், தவறான விளக்கம் கொடுக்கப்பட்டு துரல் துத்தம் கை;கிளை, உழை, இளி, விளரி, தாரம் முதலிய தமிழ்ச் சுரங்கள் வழக்கு இழந்து ஆ முதலிய சுரக் குறியீடுகள் மறைந்தன. இந்திய விடுதலைக் காலமான 1947 இல்கூட, ஆ,ஈ,  என்னும் தமிழ்ப்பண் முறையில் பாடல் கற்பித்தோர் உண்டு. இப்பொழுதும் தமிழின் சேய் மொழிகளில் ஒன்றான படகு மொழியில் அவ்வாறுதான் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் நாம் இப்பொழுது இதை வலியுறுத்தினால் ஏதோ வேடிக்கையாகத்தான் பலரும் நினைப்பர். மேலும், பாடத் தெரிந்தவர்களைப் பாடுமாறு கூறினால் கருநாடகப் பாட்டுபாடவா எனக் கேட்டுத், தெலுங்கு முதலிய பிற மொழிப் பாடல்டகள்தான் பாடுவரேயன்றித் தமிழ்ப் பாடல்கள் பாட மாட்டார்கள். இந்தியாவிலேயே பிற  மாநிலங்களில் அவர் அவர் மொழிப் பாடல்களைத்தான் பாடுகின்றனர். சான்றாக மேற்கு வங்காளத்தில்; அனைவரும் தாகூர் பாடலைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, தாகூர் பல்கலைக் கழகத்தில் படிக்கும அனைவருக்கும் தாகூர் வரலாறும் படல்களும் நன்கு தெரியும். நம் நாட்டில் பாரதியார் பல்கலைக் கழகத்திலும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும படிப்போர், இவர்களின் பாடல்களை மட்டுமல்ல இவர்கள் யார் என்றே தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.இவ்வாறு, இக்காலத் தமிழிசைப் பாடல்களையும் தொன்மையான தமிழிசைப் பாடல்களையும் அறியாதவர்களாக பொது மக்கள் மட்டுமல்ல, இசை மாணாக்கர்களும்  இசை ஆசிரியர்களும் இருக்கின்றனர். நம் மண்ணோடு கலந்த தமிழிசையை நம் ஊனோடு கலந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

              thamizhisaikaruvi4  தமிழிசை என்பது உலகின் பல பகுதிகளில் மனித இனமே தோன்றாத பொழுது தோன்றியதாகும். சில பகுதிகளில் மொழிகள் வளர்ச்சி அடையாத பொழுது இங்கே சிறப்பான நிலையில் இருந்ததாகும். கடைச் சங்கக் காலத்தில் மட்டுமல்ல இடைச் சங்கக் காலத்திலும் அதற்கு முன்பு முதற் சங்கக் காலத்திலும் தமிழிசை மிகச் சிறப்பாக இருந்ததையும் இசைநூல்கள் எண்ணற்றன இருந்தமையையும் இறையனார் களவியல் உரை மூலம் அறியலாம். உலகின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் மறைந்து போன இசை நூல்களைக் குறிப்பிடுவதுடன் 11,191 ஆதி இசை இருந்தவற்றையும் குறிப்பிடுகிறார். இத்தகைய தொன்மை சிறப்புடைய தமிழிசையின் இன்றைய நிலை என்ன?

                தமிழ்நாட்டை விட்டு எங்கும் போகாத தியாகய்யர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாசுதிரி ஆகிய மூவரும் தேவாரம் முதலிய தமிழ் இசைகளைக் கேட்டுக் கேட்டு அவற்றை உள்வாங்கித் தெலுங்கு, சமசுகிருதம் முதலிய மொழிகளில் பாடல்கள் எழுதியுள்ளனர். அக்கால நாயக்கர் ஆட்சியில் அவை செல்வாக்கு பெற, நாமோ அவற்றையே ஆதி இசை எனத் தவறாகக் கூறிவருகிறோம். இவர்களை இசை மூவர் எனக் குறிப்பிட்டதால், தமிழிசை மூவர், ஆதி இசை மூவர் என்று முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவரைக் குறிப்பிடும் நிலையும் தோன்றியுள்ளது. தியாகையர் முதலிய மூவருக்கு முந்தையவர்கள் இவர்கள் என்பதுடன் கீர்த்தனைப் பாடல்களைப் பரப்புவதில் இசைக்கடன் வாங்கிய தியாகய்யர் முதலிய மூவருக்கும் முன்னோடி என்பதில் ஐயமில்லை. ஆனால், இவர்கள்தாம் இசை முன்னோடி என்பதும் வரலாற்றுப் பிழையாகும். இவர்கள் காலத்திலும் இவர்களுக்கு முன்பும் ஆயிரக்கணக்கான தமிழிசைவாணர் இருந்துள்ளார்கள். இன்னும் சிலர் கடந்த உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது காரைக்காலம்மையாரைத் தமிழிசைத்தாய் என அறிவிக்கச் செய்தனர். இதுவும் தவறாகும். ஏனென்றால் சிலப்பதிகாரம், சங்கப் பாடல்கள் அனைத்துமே இசை நுணுக்கங்களுடன் பாடப்பட்டவையாகும்.

                தமிழிசையை மூலமாகக் கொண்டே பிற இசைப் பாடல்கள் தோன்றின என்பது வரலாறு காட்டும் உண்மை. ‘வடமொழியில் சங்கீத நூல்கள் எழுதப் பட்டிருப்பதாலேயே அவை தமிழ்நாட்டு இசையல்ல என்று கருதுவது தவறு. இப்போதுள்ள வடமொழி இசை நூல்கள் பலவும் தமிழ்நாட்டு இசையைத்தான் கூறுகின்றன” என்கிறார் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.   சுந்தரமூர்த்தி ஓதுவார் என்னும் இசைவாணர், ‘தமிழரே சங்கீதப் பிச்சையைப் பலர்க்கும் அளித்தனர். இவர்கள் இசையை அவரவரும் தங்கள் மொழிக்குத் தக்கபடி சொற்களை அமைத்து இசைநூல்களை எழுதிக் கொண்டனர்” என்கிறார்.

(தொடரும்)