thamizh

இரகசியச்சொல்

ஏடா தூதா இங்குவா தனியே

என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர்

இரகசி யச்சொல் இயம்பு கின்றேன்

உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி

இறந்தது வடமொழி என்று தமிழர்

இயம்பி வந்த துண்டா இல்லையா?

இறந்தது மெய்தான் என்னும் தமிழர்

இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்!

மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்?

வடமொழி இறந்த தென்றதால் தமிழை

மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்!

வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல்

கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல்

நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல்

இன் தமிழ்ப் பயிற்சிக் கெதிரில் அவதி

இந்தியைக் கொணர்ந்தார் இன் தமிழ் நலியும்

வடமொழி இறந்ததால் வடமொழிக் குரியார்

தமிழையும் அழிக்கச் சந்ததம் முயன்றார்

என்ற சேதியை இங்கிருந் தோடி

எனது பெரியார் இன்னுயி ரனையார்

தமிழின் தலைவர் தமிழ வீரர்

இப்புவி மாயம் எழிலின் கூட்டம்

ஒப்புறக் காட்டும் உயர் தமிழ்க் கவிஞர்

இன் தமிழ் மாணவர் இளஞ்சிங் கங்கள்

இன்னவரிடமெலாம் இயம்புவாய் விரைவில்!

இங்கிருந் தேநான் தமிழர்

அங்கங் கொதித்தெழும் ஆர்ப்பால் அறிகுவனே!

-பாவேந்தர் பாரதிதாசன்

bharathidasan01